பெண்கள் 360: நீதியின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது

பெண்கள் 360: நீதியின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது

Published on

இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் உரையாற்றி முடித்த சில மணி நேரத்தில் பெண்ணுக்கு நீதி மறுக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் சூறையாடப்பட்டவர்களில் பில்கிஸ் பானுவும் ஒருவர். அப்போது ஐந்து மாதக் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த 21 வயதான அவர் 11 பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய மூன்று வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட அவருடைய உறவினர்கள் ஏழு பேரும் படுகொலை செய்யப்பட்டதாக பில்கிஸ் பானு கூறியுள்ளார். தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குப் பிறகு குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை உயிரைக் காத்துக்கொள்ள தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் பில்கிஸ் பானு.

வழக்கில் தொடர்புடைய 11 பேரும் குற்றவாளிகள் என 2008இல் தீர்ப்பு வழங்கப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. சிறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அவர்களைத் தற்போது ஆகஸ்டு 15 அன்று குஜராத் அரசு விடுதலை செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 11 பேரையும் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரௌவுல்ஜி அளித்த பேட்டியில், “இவர்கள் குற்றம் செய்தார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள், பண்பட்டவர்கள்” என்று சொன்னார். இது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘உனாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரைக் காக்க உழைத்தீர்கள், கதுவாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டீர்கள், ஹாத்ரஸ்ஸில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட்டது, தற்போது குஜராத்தில் பாலியல் குற்றவாளிகளை விடுவித்துக் கௌரவப்படுத்தியுள்ளீர்கள். பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பதன் மூலம் பெண்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாடு தெரிகிறது’ என்று ட்வீட் செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, ‘முதலில் பில்கிஸ் பானுவை நாம் பெண்ணாகப் பார்க்கிறோமா முஸ்லீமாகப் பார்க்கிறோமா என்று முடிவுசெய்வோம்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாழப் போராடிக்கொண்டிருக்கும் பில்கிஸ் பானுவை குற்றவாளிகளின் இந்த விடுவிப்பு பேரிடியாகத் தாக்கியுள்ளது. “நீதியின் மீதான என் நம்பிக்கை தர்ந்துவிட்டது. நாட்டின் மிக உயரிய நீதி மன்றங்களை நம்பினேன். ஒரு பெண்ணுக்கான நீதி இப்படித்தான் முடிவுக்கு வர வேண்டுமா?” என்று தெரிவித்துள்ளார். பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகப் பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்தவண்ணம் உள்ளனர்.

-ப்ரதிமா

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in