விவாதம்: ஆணுக்கு மட்டும்தான் பெற்றோரா?

விவாதம்: ஆணுக்கு மட்டும்தான் பெற்றோரா?
Updated on
1 min read

கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் மனதை நெருடின. ஒன்று, பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக கணவனைப் பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு. இன்னொன்று, செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட கணவனைக் கண்டித்த மனைவியை மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவன்.

தனிமனிதர் முதல் சாதி, மதம், சட்டம் எல்லாமும் பெண்ணை, மனைவி என்னும் உறவைப் பொறுத்தவரை பாரபட்சமாகவே நடத்துகின்றன என்பதையே இந்தச் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. பெண் பிள்ளையாக இருந்தால் திருமணத்துக்குப் பின், அவளுடைய கணவனின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது புராண காலத்து சிவனின் திருவிளையாடலிலேயே தொடங்கிவிட்ட விஷயம். இதற்கு வசதியாக பெண்ணின் பராமரிப்பில் அவளுடைய தாய், தந்தை இருப்பது கேவலம் என்னும் கருத்தும் சமூகத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், பிறந்த வீடு, சுற்றம், உறவு, நண்பர்கள் என எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் திருமண பந்தத்தில் ஒரு பெண் நுழைகிறாள். உறவு சார்ந்த இழப்பு திருமணத்திற்குப் பின், பெண்ணுக்குத்தான் ஏற்படுகிறது. கணவனின் தாய், தந்தையை ஒரு பெண் தன்னுடைய தாய், தந்தையாக நினைக்க வேண்டும். இதுதான் ஒரு மருமகளின் கடமை என்று பருவம் எய்திய நாளிலிருந்து ஒரு பெண்ணிடம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மருமகனுக்கான கடமை பைக்கும், காரும் வரதட்சிணையாக வாங்குவது மட்டும்தானா? வரதட்சிணைக் கொடுமைக்காக எத்தனை பெண்கள் நம் நாட்டில் விவாகரத்துக்காகக் காத்திருக்கின்றனர்? மதுப் பழக்கத்தால் தானும் தள்ளாடி, குடும்பத்தையும் தள்ளாட வைக்கும் கணவனை என்ன செய்வதென்று தெரியாமல் தினம் தினம் அல்லல்படும் பெண்களுக்கு எது தீர்வு? குடும்ப அமைப்புக்குள் வெளியே சொல்ல முடியாத அளவுக்குப் பெருகிக் கிடக்கும் பெண்கள் மீதான வன்முறையை என்ன செய்வது? இதற்கெல்லாம் தீர்வு சொல்லாமல் தட்டிக் கழிப்பது என்ன நியாயம்?

நீங்க என்ன சொல்றீங்க?

கணவனை அவருடைய பெற்றோரிடமிருந்து பிரித்து, தனிக்குடித்தனம் செல்ல நிர்பந்திக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் திருமணம் என்ற பந்தத்தின் பெயரால் தன் அனைத்து உறவுகளையும் இழந்து, கணவரின் உறவுகளையே தன் உறவுகளாக ஏற்று வாழ வேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு மட்டும்தானா? தன் பெற்றோருடன் வாழ வேண்டும் என்ற குறைந்தபட்ச ஆசைகூடப் பெண்களுக்கு இருக்கக் கூடாதா? இதில் உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in