Last Updated : 23 Oct, 2016 01:47 PM

 

Published : 23 Oct 2016 01:47 PM
Last Updated : 23 Oct 2016 01:47 PM

திரைக்குப் பின்னால்: ஒவ்வொரு அடியும் என்னைச் சிற்பமாக்கும்!

திரையுலகில் முன்னணி நடிகர், நடிகையருக்கு ஊடகத் தொடர்பாளராகப் பணியாற்றுவது மிகவும் கடினமானது. ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், மஞ்சிமா மோகன் என்று பல்வேறு நடிகைகளுக்கு ஊடகத் தொடர்பாளராகப் பணிபுரிந்துவருகிறார் ரேகா.

ஊடகத் தொடர்பாளர் பணி எப்படி இருக்கிறது?

நான் பணியாற்றும் நடிகர், நடிகையரைப் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என் பணியில் உள்ள கஷ்டம். ஒருவரைப் பற்றித் தவறான செய்தி வந்தால், உடனே சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி, அதற்கான விளக்கத்தை வாங்கி வெளியிட வேண்டும். தவறான செய்திகள் வரும்போது நடிகர், நடிகையர் கோபப்படுவதும் உண்டு. அதனையும் சமாளிக்க வேண்டும். தினமும் நிறைய சர்ச்சைகளையும் சந்தோஷங்களையும் ஒருசேரக் கையாள்வதுதான் என் பணி.

உங்கள் பணியில் உள்ள மிகப்பெரிய சவால்?

என் அப்பா இந்தத் துறையில் நீண்ட காலமாக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து நானும் வந்தேன். நடிகர், நடிகையரைக் கையாள்வதுதான் மிகப்பெரிய சவால். எப்போது படப்பிடிப்பில் இருக்கிறார்கள், எப்போது ஓய்வாக இருக்கிறார்கள், என்ன சிந்தனையில் இருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாது. அந்த நேரத்தில் அவர்களுடைய பேச்சை வைத்து, மனநிலையை உணர்ந்து, நாம் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும்.

ஒரு பெண்ணாக இந்தத் துறையில் இருப்பது கடினமா?

ஆண்களால் மட்டும்தான் முடியும் என்ற ஒரு பார்வை அனைத்துத் துறைகளிலுமே இருக்கிறது. பெண்கள் அந்த நினைப்பைத் தங்கள் தேர்ந்த செயல்பாட்டால் மாற்றிவருகிறோம். ஊடகத் தொடர்பாளராக எந்தப் பிரச்சினை வந்தாலும் எளிதாகக் கையாளக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. அதனால் இந்தப் பணியை நான் கடினம் என்று சொல்ல மாட்டேன்.

உங்கள் துறையில் அதிகமான பெண்கள் இல்லையே?

மும்பையில் முன்னணி நடிகர்களிடம் பெண்கள்தான் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றிவருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் குறைவுதான். எங்கள் பணியில் எப்போதுமே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒரு நடிகையிடம் சென்று, ‘நான் உங்களுக்கு ஊடகத் தொடர்பாளராகப் பணியாற்றுகிறேன்’ என்று சொன்னால் உடனே சம்மதிக்க மாட்டார். அவருடைய நம்பிக்கைக்குரியவர் யாராவது சொன்னால் மட்டுமே நடக்கும். இதுவும் பெண்கள் நிறைய வராமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

என் கணவருக்குப் பிறகு, வேலையைத்தான் அதிகமாகக் காதலிக்கிறேன். என் வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம் வந்திருக்கிறது. ‘கல் மீது விழும் ஒவ்வொரு அடியும் கல்லைச் சிற்பமாக்குகிறது’என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதுபோல எவ்வளவு தோல்விகள் ஏற்பட்டாலும் அவற்றை வெற்றிக்கான படிக்கற்களாகத்தான் பார்க்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x