வானவில் பெண்கள்: வாழ்க்கையைப் பேசுவோம்

வானவில் பெண்கள்: வாழ்க்கையைப் பேசுவோம்
Updated on
1 min read

போட்டி நிறைந்த உலகில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் என்றால், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது சாமர்த்தியம். “அதற்காகத்தான் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும் கிடைக்காதவர்களுக்கும் ஒரு மேடை அமைத்துத் தருகிறோம்” என்கிறார் சாரதா விஜய். ‘வாழ்க்கையைப் பேசுவோம்’ (Lets Talk Life) என்ற அமைப்பைத் தன் தோழி நந்திதா ஹரிஹரனுடன் தொடங்கியவர், இன்று பொதுவெளியில் பலர் பேசத் தயங்கும் தலைப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முனைப்பு காட்டிவருகிறார்.

“என் வாழ்க்கையில் கசப்பான சில நாட்களைக் கடக்க எழுத்து மட்டுமே உதவியது. என்னைப் போன்று பலருக்கும் எழுத்து ஒரு பெரிய வடிகாலாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பலரது திறமைகளையும் வெளிப்படுத்த முடிவு செய்தோம். இந்தச் சமூகத்தில் சொல்லப்படாத, பேசப்படாத விஷயங்கள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டோம். நாம் யார் என்பதை வெளிப்படுத்தவே ஒரு அடையாளத்தைத் தேடி அலைகிறோம். அப்படித்தான் மனதையும் திறமையையும் வெளிப்படுத்த ஒரு வெளி அமைத்தோம்” என்கிறார் சாரதா விஜய்.

பெண்ணியம், பாலினப் பாகுபாடு, ஓரினச் சேர்க்கை, கல்வி, சம உரிமை, குடும்ப வன்முறை என்று இவர்கள் பேச்சு வெளியில் பல தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். முதல் நிகழ்ச்சியில், ‘யார் பெண்ணியத்தைச் சுருக்கியது?’ என்ற தலைப்பில் விவாதம் நடத்தியிருக்கிறார்கள். இதில் பல்வேறு கருத்துகளைப் பேசியவர்கள் ஆண்கள்தான். ஆண்களைக் குறைத்துப் பேசுவது பெண்ணியமல்ல என்பதுதான் விவாதத்தில் பங்கேற்றவர்களின் கருத்தாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து, கலைகளைப் போற்றும் வகையில், நடத்தப்பட்ட Whole(art)edly நிகழ்ச்சியில் 6 வயது குழந்தை முதல் 70 வயது பாட்டிவரை பங்கேற்றிருக்கிறார்கள்.

தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பாகக் கருதி ஒவ்வொரு முறையும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து அறிவிப்பு வந்தவுடன் சாப்ட்வேர் துறையினர், இல்லத்தரசிகள், பள்ளிக் குழந்தைகள் என்று பல்வேறு தரப்பினரும் பதிவு செய்கின்றனர். இங்கு திறமையை நிரூபிப்பவர்களுக்குப் பல மேடைகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

“பொதுவாக இங்கு எல்லோரும் வரலாம். எல்லாமும் பேசலாம். எல்லா திறன்களையும் வெளிப்படுத்தலாம். குறுகிய காலத்தில், வெகுவேகமாகப் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் நந்திதா ஹரிஹரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in