

எல்லோரையும் போலத் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, ஓவியத் தொழிலுடன் தனது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதில் சித்ரா விஸ்வ நாதனுக்கு விருப்பமில்லை. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 700 குழந்தைகளுக்குப் பிறவி இதயக் கோளாறைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்ய உறுதுணையாக இருந்திருக்கிறார்.
பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் வருடத்துக்கு 1.80 லட்சம். உலக அளவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அறக்கட்டளை உதயம்
குழந்தை பிறக்கும்போதே இருக்கும் இதயம் தொடர்பான பிரச்சினைகள், பிறவி இதயக் கோளாறு Congenital heart disease (CHD) என்று அழைக்கப் படுகிறது. இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ. 3 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையைச் செலுத்த முடியாத ஏழைக் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது சித்ரா விஸ்வநாதன் நடத்தும் ஐஸ்வர்யா டிரஸ்ட்.
சித்ரா விஸ்வநாதன் தன்னுடைய இரண்டாவது மகள் ஐஸ்வர்யாவின் நினைவாக இந்த அறக்கட்டளையை நடத்திவருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா பிறவி இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு, 3-வது வயதில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார். கடந்த 2008-ம் ஆண்டு ஐஸ்வர்யாவின் பெயரில் தன் தந்தையின் உதவியுடன் இந்த அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் சித்ரா.
சந்தித்த சிக்கல்
அறக்கட்டளை தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகள் பல குழந்தைகளுக்கு உதவ யாரும் முன்வராத நிலையில் நண்பர்கள், குடும்பத்தினரின் பண உதவி உறுதுணையாக இருந்துள்ளது. சில ஆண்டுகள் கழித்துச் சென்னையில் உள்ள ஃபோர்டிஸ் மலர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் குழந்தைகளுக்கு இதயக் கோளாறு அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.
“வேறு மாநிலங்களில் இருந்தும் குழந்தைகள் எங்களை நாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தை சிகிச்சை பெற்றுக் குணமடைவதைப் பார்க்கும் போது என்னுடைய மகளையே அவர்களது கண்களில் பார்க்கிறேன். என் மகளின் முகத்தைப் பார்த்துக் காணக் கிடைக்காத இன்பத்தை, அந்தக் குழந்தைகளின் முகத்தில் பார்க்க முடிகிறது'' என்கிறார் சித்ரா விஸ்வநாதன் தழுதழுத்த குரலுடன்.