சேனல் சிப்ஸ்: மாமனாரும் மருமகளும்

சேனல் சிப்ஸ்: மாமனாரும் மருமகளும்
Updated on
1 min read

மாமனாரும் மருமகளும்

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் கீர்த்தி. “திருமணத்துக்குப் பிறகு நடிப்பு சார்ந்த இந்த நிகழ்ச்சிக்குள்ளே வந்திருக்கேன். ரொம்பப் புதுமையா இருக்கு. கிட்டத்தட்ட 10 சீசன்கள் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன் . சின்ன இடைவெளிக்குப் பிறகு வரும்போது, திரும்பவும் டான்ஸ் ஷோ வேணாம்னு தோணுச்சு. இதில் 4 வயது முதல் 14 வயதுவரையிலான குழந்தைங்க கலந்துக்கிறாங்க. ஆரம்பத்துல என் மாமனார் பாக்யராஜ் நடுவரா இருக்காரேன்னு கொஞ்சம் பதற்றமா இருந்துச்சு. செட்டுக்குள்ளே வந்ததும் அவர் வேலையில கவனம் செலுத்துறதைப் பார்த்து அசந்துட்டேன். எவ்ளோ பெரிய ஜாம்பவான்! அவர்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் ஏராளம்!’’ என்கிறார் கீர்த்தி.

கலாய்க்கிறாங்க!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி தொடரில் ‘அருண்’ கதாபாத்திரத்தில் அசத்திவரும் ஆடம், தொகுப்பாளர், நடிகர் என்று பல அவதாரங்களில் கலக்கிவருகிறார். “காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி ஸ்பெஷல் என்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க தேதி கொடுத்தாச்சு. சினிமாவில் பாபி சிம்ஹாவோடு ‘வல்லவனுக்கு வல்லவன்’, ஜீவாவோடு ‘கவலை வேண்டாம்’ என்று நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன். ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா இப்படி சினிமாவில் நடிக்கும் அத்தனை பேரையும் டிவி நேர்காணல்களில் வம்பு இழுப்பேன். இப்போ அவங்களோட சினிமாவுல சேர்ந்து நடிக்கும்போது வட்டியும் முதலுமா சேர்த்து என்னைக் கலாய்க்கிறாங்க. வாழ்க்கை ஜாலியா போகுது!’’ என்கிறார் ஆடம்.

ஆடிட்டர் ஆசை!

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘வேந்தர் டாக்கீஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ப்ரீத்திக்கு, சினிமா கிசுகிசு என்றால் கொள்ளைப் பிரியமாம்! “ஆமாங்க. அதுக்காகத்தான் இந்த ஷோவோட தயாரிப்பாளர்கிட்ட கேட்டு வாங்கி, தொகுத்து வழங்கிட்டு வர்றேன். பாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் எந்த சினிமா செய்தியும் எங்களைத் தாண்டிப் போகாது. அதிலும் திரை நட்சத்திரங்கள் யாரோட மனசையும் கஷ்டப்படுத்தாம ஷோவைக் கொண்டு போற திறமையே திறமைதாங்க. அவ்ளோ ஜாலியா இருக்கும். எதிர்காலத்துல ஆடிட்டிங் துறையில கலக்கணும். அதுவரைக்கும் சும்மா இருக்கக் கூடாது. இன்னும் அஞ்சு, ஆறு வருஷத்துக்கு சேனல்களைச் சுத்தி வரத்தான் ஆசை!’’ என்கிறார் ப்ரீத்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in