

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு தங்கள் மீதான அடக்குமுறைகளில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் விடுபடப் பெண்கள் போராடினர். துறைசார்ந்த வெற்றிகளை நிகழ்த்துவதும் இலக்குகளை எட்டுவதும் ஆணுக்குச் சாதாரணமாகக் கைகூடுகையில் பெண்கள் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பல்வேறு துறைகளில் நுழைய முடிந்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தித் தங்கள் அறிவாலும் திறமையாலும் சாதனை படைத்த பெண்கள் பலர். பல்வேறு துறைகளில் பெண்கள் கண்ட மாற்றங்களிலும் அடைந்த முன்னேற்றங்களிலும் சில இவை:
கண்திறந்த கல்வி
அரசுத் திட்டங்களின் அறிமுகத் துக்கு முன் பெண்கள் போராடித்தான் கல்வி கற்றனர். பணம் படைத்த, மேல்தட்டுப் பெண்களுக்குக்கூடக் கல்வி எட்டாக் கனியாகத்தான் இருந்தது. பள்ளிக்கல்வி வரை முடித்த பெண்கள்கூட உயர்கல்வி பயில முடியாத அளவுக்குச் சமூகக் காரணிகள் பெண்களைப் பிணைத்துவைத்திருந்தன. பிறகு பெண்களின் கல்விக்காகப் பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கப்பட்டன. நிதிநல்கைகள், சிறப்புத் திட்டங்கள் அவர்களை ஊக்குவித்தன. இதனால் பெண்களின் எழுத்தறிவு விகிதம் அதிகரித்தது.
1961 நிலவரப்படி இந்தியப் பெண்களின் எழுத்தறிவு விகிதம் ஒன்பது சதவீதமாக இருந்தது. ஆண்கள் 21 சதவீதம். 1987 – 88 புள்ளிவிவரப்படி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட கிராமப்புறப் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 81 ஆகவும் நகர்ப்புறப் பெண்களின் விகிதம் 97ஆகவும் உயர்ந்தது. இது அப்போதிருந்த ஆண்களின் எழுத்தறிவு விகிதத்தைவிட அதிகம் (கிராமப்புறம் 95, நகர்ப்புறம் 96).
ஒரு பக்கம் பெண் கல்வியை ஊக்குவித்த மத்திய, மாநில அரசுகள் மற்றொரு பக்கம் பாலினப் பேதத்தைக் களைவதற்கான முயற்சியில் மிகத் தாமதமாகத்தான் இறங்கின. பள்ளிப் பாடப்புத்தகங்களில் காணப்படும் ஆண் - பெண் பாலினப் பாகுபாட்டைக் களைவது குறித்து இந்திய அரசு 1965இல் முடிவெடுத்தது. ஆனால், அது முழுமையாகவும் முறையாகவும் செயல்படுத்தப்படவில்லை என்பது 1980களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. பெரும்பான்மையான பாடங்கள் ஆண்களை மையப்படுத்தியே இருந்தன. இப்போது நிலைமை மாறியுள்ளது. பாலினப் பாகுபாடு குறித்த விழிப்புணர்வு கல்வியாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
பெண்கள் மருத்துவத்தில் முன்னேற்றம்
இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்களின் உடல் நலத்தில் அக்கறையுடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்ட பிறகு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பெருமளவில் குறைந்தது. பேறுகால மரணங்களும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டன. 1990களில் பிரவசத்தின்போது ஒரு லட்சம் பெண்களில் 600 பேர் இறந்தனர். அடுத்த இருபது ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை 178ஆகக் குறையும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றது. பிரசவத்துக்காகப் பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனனி சிசு சுரக்ஷா காரியகிரம் திட்டமும் நடைமுறைக்கு வந்தது. பிரசவம், மருந்து, சிசு நலம், உணவு போன்றவற்றுடன் பிரசவத்துக்காக வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு என அனைத்தும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
ஓடி விளையாடு பெண்ணே
விளையாட்டு மைதானம் என்பது ஆண்கள் மட்டுமே ஆடும் களம் என்று இருந்ததைப் பெண்கள் தங்கள் தன்னிகரில்லாத திறமையால் தகர்த்து வெற்றிக்கொடி நாட்டினர். முதன் முதலில் கிரேக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரு பெண்கூட இல்லை என்கிற துயர வரலாற்றைத் தங்கள் மகத்தான வெற்றியால் மாற்றி எழுதினர் இந்திய வீராங்கனைகள்.
விண்ணைத் தொடும் உயர்வு
l மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளி, தொழில்துறை போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. மருத்துவக் கல்வியில் 1952இல் ஐந்து சதவீதப் பெண்கள் மட்டுமே இருந்த நிலை மாறி 1988இல் 50 சதவீதப் பெண்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர். மகப்பேறு மருத்துவ நிபுணரான இந்திரா ஹிந்துஜா செயற்கைக் கருத்தரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்த முதல் இந்திய மருத்துவர். இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை வெற்றிகரமாக உலகுக்குக் கொண்டுவந்தவர்.
l கடல் ஆராய்ச்சியாளரான அதிதி பந்த், 1983இல் அண்டார்க்டி காவுக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் ஆராய்ச்சியாளர்.
l ஏவுகணைத் திட்டத்துக்குத் தலைமை வகித்த முதல் பெண் டெஸ்ஸி தாமஸ். அக்னி IV, V திட்டங்களின் இயக்குநராகச் செயல்பட்ட இவர், இந்தியாவின் ஏவுகனைப் பெண் என்று அழைக்கப்படுகிறார்.
l விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியவர் கல்பனா சாவ்லா. சுனிதா வில்லியம்ஸ், சிரிஷா பந்த்லா ஆகிய இருவரும் அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
பய்யோலி எக்ஸ்பிரஸ்
இந்திய இளம் பெண்களை விளையாட்டை நோக்கி ஈர்த்தவர் பி.டி.உஷா. அதுவரை ஆண்களுக்கு மட்டுமே பட்டப்பெயர் வைத்து அழகுபார்த்த கலாச்சாரத்தைத் தன் வரவால் மாற்றிக்காட்டி, தன்னை ‘பய்யோலி எக்ஸ்பிரஸ்’ என அழைக்க வைத்த தடகள வீராங்கனை இவர். 1986இல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக நான்கு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.டி.உஷா. ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.
இலக்கியம் வளர்த்த பெண்கள்
கொல்கத்தாவின் வட பகுதியில் பழமைவாதம் மலிந்த குடும்பத்தில் பிறந்தவர் ஆஷாபூர்ணா தேவி. பெண் கல்விக்குத் தடை விதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து 13 வயதில் சிறார் இலக்கியத்தில் கால் பதித்தார். பிறகு பெரியவர்களுக்கான சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தார். பெண்கள் மீதான அடக்குமுறை, பாலினப் பாகுபாடு, பெண்ணுடல் குறித்த ஆணின் சிந்தனை போன்றைவையே இவரது நாவல்களின் ஆதாரம். பெண்களில் ஞான பீட விருது (1976) பெற்ற முதல் எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி. வங்க மண்ணிலிருந்து உதித்த மற்றுமொரு பெண்ணிய எழுத்தாளரான மகாஸ்வேதா தேவியும் ஞானபீட விருது பெற்றவர். இவர் எழுதிய ‘திரௌபதி’ மிக முக்கியமான படைப்பு. இஸ்மத் சுக்தாய், அம்ரிதா ப்ரீதம், கமலா தாஸ் போன்ற பல பெண்ணிய எழுத்தாளர்கள் பெண்ணுரிமை குறித்தும் பெண்ணுடல் மீதான சமூகத்தின் சுரண்டலை எதிர்த்தும் தொடர்ந்து எழுதிவந்தனர். இவர்களைத் தொடர்ந்து முற்போக்குப் பெண்ணிய எழுத்தின் இரண்டாம் அலையில் ஏராளமான பெண்கள் இந்தியா முழுவதும் இருந்தும் எழுதவந்தனர். பெண்ணியத்துடன் அறிவியல், வரலாறு, சமூகம் எனப் பல்வேறு துறைசார்ந்தும் இவர்களது படைப்பூக்கம் வெளிப்பட்டது. அருந்ததி ராய், கிரண் தேசாய் இருவரும் தங்களது ஆங்கிலப் படைப்புக்காகவும், கீதாஞ்சலி ஸ்ரீ தனது இந்தி நாவலுக்காகவும் புக்கர் பரிசு பெற்றனர்.
இரும்புப் பெண்
பெண்மை என்றாலே மென்மை என்பது போன்ற கற்பிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கர்ணம் மல்லேஸ்வரி. பளு தூக்கும் வீராங்கனையான இவர், 2000இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சாதனையைப் படைத்தார். அந்த வெற்றி அவருக்கு ‘இந்தியாவின் இரும்புப் பெண்’ என்கிற பாராட்டைப் பெற்றுத் தந்தது.
இடைநிற்றல் குறைவு
14 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவச - கட்டாயக் கல்வி (மத்திய அரசு), பெண் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை உறுதிசெய்தது. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகளின் திட்டங்கள் பெரும்பங்கு வகித்தன. பெண் கல்வியில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
பட்டியலின, பழங்குடியின மாணவியருக்கான மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிதியுதவித் திட்டங்கள் பெண் குழந்தைகளின் கல்வி எல்லையை விரிவாக்கின. தமிழகத்தில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு முக்கிய இடம் உண்டு. பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ், சைக்கிள், மடிக் கணினி போன்றவை கிராமப்புற, ஏழைப் பெண்களுக்குப் பேருதவியாக இருக்கின்றன. தற்போது தமிழக அரசு, பெண் குழந்தைகளின் உயர்கல்வியை உறுதிசெய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்தியதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மாதவிடாய் காரணமாகப் பெண் குழந்தைகள் பள்ளியைவிட்டுப் பாதியில் நிற்பதைத் தடுப்பதில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் முக்கியமானது.
திருமண நிதியுதவி
வரதட்சிணை, திருமணம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் கடன் சுமையால் பெண் குழந்தையை வளர்ப்பது ஏழைக் குடும்பங்களுக்குப் பெரும்சுமையாக இருந்தது. இதனால், பல இடங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயும் பிறந்த பிறகும் கொல்லப்பட்டன. அதைத் தடுக்கும்விதமாக அரசு முன்னெடுத்த திட்டங்கள் பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரித்தன. பெண் சிசுக்கொலை தடுப்புக்கான திட்டங்கள் (அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரப் படங்கள், விழிப்புணர்வுப் படங்கள்), மாநில அரசின் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க ஒற்றைப் பெண் குழந்தை, இரண்டு பெண் குழந்தை வைத்திருக்கிறவர்களுக்கான நிதியுதவி, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளைக் கற்பிப்போம் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் போன்றவை பெண் குழந்தைப் பிறப்பை ஊக்குவித்தன.
அதற்கு முன்பே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கைம்பெண்களுக்கான டாக்டர் தர்மாம்பாள் நினைவு மறுமண நிதியுதவித் திட்டம், ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான அன்னை தெரசா நினைவு திருமண நிதியுதவித் திட்டம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திருமண நிதியுதவித் திட்டம் போன்ற மறுமலர்ச்சித் திட்டங்கள் பெண்களின் குறைந்தபட்ச கல்வியை உறுதிசெய்ததுடன் அவர்களின் திருமணச் செலவுக்கும் உதவின.
உலகத் தரவரிசையில் முதலிடம்
l புத்தாயிரத்துக்குப் பிறகு விளையாட்டில் பெண்கள் புதுப் பாய்ச்சலை நிகழ்த்தினர். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வெற்றி சோர்ந்திருந்த மனங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றார். விளையாட்டில் உலகத் தர வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியப் பெண் இவர்.
l 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தார் சாய்னா நேவால்.
l ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சாதனையைப் படைத்தார் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்கிற சாதனையையும் இவர் படைத்தார்.
l ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மேரி கோம். ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான்.
l உடல் வலுவுக்கும் பாலினத்துக்கும் தொடர்பு இல்லை என்பதையும் மல்யுத்தப் போட்டி இருபாலருக்கும் பொதுவானதுதான் என நிரூபித்தனர் போகத் சகோதரிகள்.
l 2022 காமன்வெல்த் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது இந்திய ஹாக்கி மகளிர் அணி. இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் 2020 ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு முன்னேறியும் பதக்கத்தை வெல்ல முடியாத இழப்பை ஈடுசெய்தது.
மகப்பேறு நிதியுதவி
வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள பெண்களின் மகப்பேறுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம், நிதி உதவியோடு குழந்தைக்கு ஓராண்டு வரைக்குமான போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி போன்றவற்றையும் உறுதிப்படுத்துகிறது.
பெண்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு, வேலை இழப்பு, ஊதிய இழப்பு போன்றவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்கிறது. அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஓராண்டு வரை பேறு கால விடுப்பு வழங்குவதன் வாயிலாகத் தமிழக அரசு இதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. தத்தெடுக்கும் பெண்களுக்கும், செயற்கைக் கருவூட்டல் மூலம் இன்னொரு பெண் வழியாகக் குழந்தை பெறும் பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு. தனியார் நிறுவனங்களிலும், முறைசாரா பணியில் இருக்கும் பெண்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டால் பெண்களின் பணி வாழ்க்கை தடைபடாது.
தாய் - சேய் நலம்
பிரசவத்துக்குப் பிந்தைய தாய் - சேய் நலத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தில் 2014 நிலவரப்படி 6.2 கோடி அம்மாக்களும் 5.17 கோடி பச்சிளங்குழந்தைகளும் பதிவுசெய்துள்ளனர். நாடு முழுமைக்குமான இந்தத் திட்டத்தால் குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசிகள் போன்றவை விடுபடாமல் கண்காணிக்கப்படும். மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரின் இனப்பெருக்க நலன், மாதவிடாய் நாட்களின் சுகாதாரம், ரத்த சோகைத் தடுப்பு போன்றவற்றைப் பராமரிக்கவும் மத்திய அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
சுகாதாரச் செயல்பாடுகளை வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதற்காகச் சமூக சுகாதாரப் பணியாளர்கள் (ஆஷா பணியாளர்கள்) நியமிக்கப்பட்டது பெண்களின் உடல்நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. சுகாதரம் குறித்த விழிப்புணர்வு, ஊட்டச்சத்து, மருத்துவமனைக்குச் செல்வதன் அவசியம், பாதுகாப்பான பிரவசம், குழந்தைகளும் பெரியோரும் செலுத்திக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள், அரசின் மருத்துவ உதவித் திட்டங்கள், சுய சுத்தம், பால்வினை நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு என்று பெண்களோடு நேரடியாகத் தொடர்பில் உள்ளவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவர்களது பணி. கிராமப்புறப் பெண்களின் சுகாதாரம் மேம்பட்டதில் இவர்களது பணி முக்கியமானது.