

தொலைக்காட்சியில் அடிக்கடி இடம்பெறும் இரண்டு விளம்பரங்கள் இருவேறு கோணங்களில் பயணிக்கின்றன. ஒரு விளம்பரத்தில் அப்பா ஒரு இடத்துக்குச் செல்கிறார்; சுற்றிப் பார்க்கிறார். உடனே அவருடைய அப்பாவுக்கு போன் செய்கிறார். ‘இங்கு அந்த வசதி-இந்த வசதின்னு எல்லாம் இருக்குப்பா’ என்று சொல்கிறார். மறுமுனையில் அவரும் ‘உடனே உம் பொண்ண அங்கேயே சேர்த்திடு’ என்று சொல்கிறார்.
இது ஏதோ ஒரு பெண்ணை எல்.கே.ஜி.யில் சேர்க்க அப்பாவும் தாத்தாவும் நடத்தும் உரையாடல் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை! கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் அந்தப் பெண்ணை, வேலைக்குப் போவதற்கான பயிற்சி தரும் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கத்தான் இந்த அப்பா - மகன் விவாதம். சரி, அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்று பார்த்தால் ஏதும் செய்யாமல் சும்மா பொம்மை மாதிரிதான் நிற்கிறாள்.
எல்லா விளம்பரங்களும் தங்கள் பொருட்களை உயர்ந்ததாகக் காட்டத்தான் எடுக்கப்படுகின்றன என்றாலும் பயனாளிகளையும் மதிப்போடு காட்ட வேண்டாமா?
தனக்கான முடிவுகளை எடுக்கத் தெரியாத பெண், எப்படிப் பயிற்சி பெற்றுப் பொறுப்பான பதவிகளை ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுவார்?
எவ்வளவு காலத்துக்குத்தான் பெண்களுக்கான முடிவுகளை ஆண்கள் எடுப்பார்கள்? தன் விருப்பப்படி கல்வியை, வேலையை, வாழ்க்கைத் துணையைத் தானே தீர்மானிக்க முடியாத வயதுவந்த ஒரு பெண்ணையும் அவளது தந்தையையும் காட்டும் இந்த விளம்பரத்தை ஆணாதிக்கச் சமுதாயத்தின் குறியீடாகத்தானே கருத வேண்டும்! தன் வாழ்க்கை சம்பந்தமான முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரமே மனித உரிமையின் அடிப்படைக் கூறு.
ஒரு அற்புதத்துக்குத் தயாராகுங்கள்
பெண்களுக்கான ஒரு சோப்பு விளம்பரம் சமீபத்தில் வைரலாகிவருகிறது. இந்த விளம்பரத்தில் வரும் பெண்கள், எவையெல்லாம் பெண்களுக்கு உரியனவாகக் கருதப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் புறக்கணிக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் வரும் பெண்கள் பறவைகளைப் போல் பறந்து, புலிகளைப் போல் பாய்ந்து தங்களுக்கான இலக்கு பற்றிய தெளிவுடன் பயணிக்கிறார்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் அவர்களின் துணிவு, பார்ப்போருக்கும் தொற்றிக்கொள்ளும்.
அந்த விளம்பரத்தின் வாசகங்கள் இவை:
“அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக நான் அழகுத் தூக்கம் போடுவதில்லை. பக்கத்து வீட்டாரின் பேச்சுக்கும் அவர்களின் பக்கத்துவீட்டார், அவர்களின் பக்கத்து வீட்டார் போன்றோரின் பேச்சுக்கும் நான் செவிமடுக்கப்போவது இல்லை. எனது தோற்றத்தைக் குறித்தும், என்னைப் பலரும் வெறித்துப் பார்ப்பது குறித்தும், என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது குறித்தும் எனக்குக் கவலையில்லை,
நான் ஆணாகப் பிறந்திருக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை.
நான் எனக்கான தருணத்துக்காகவோ ஆணுக்காகவோ காத்திருக்கப்போவதில்லை. நான் என் கண்ணீரையோ என் பயங்களையோ மறைப்பதில்லை. நான் அணிந்திருக்கும் ஆடை குறித்தும், அணிந்திராத ஆடை குறித்தும் கவலைப்படுவதில்லை. இரவுப் பொழுது முடிந்து பகல் விடியட்டும் என்று நான் காத்திருப்பதில்லை. ‘இல்லை’கள், ‘இப்படி நடந்திருந்தால், இப்படி நடக்கவில்லையென்றால்', ‘ஒருபோதும் இல்லை’ என்பவை குறித்தெல்லாம் நான் நினைப்பது இல்லை. எந்தச் சாக்குப்போக்குகளையும் நான் சொல்வதில்லை, சொல்லப்போவதும் இல்லை.
ஒரு அற்புதத்துக்காக நான் தயாராய் இருக்கிறேன்.
தயாராகுங்கள் அற்புதத்துக்காக
உயிர்ப்பே அற்புதம்!”
இப்படி அற்புதமாக அந்த விளம்பரம் பயணிக்கிறது.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களை நாடே கொண்டாடிவரும் சூழலில், விளையாட்டுத் துறை சார்ந்த பெண்களின் பயணத்தைக் குறிப்பதாக இந்த விளம்பரம் இருந்தாலும், தாம் விரும்பும் பாதையில் பயணிக்க நினைக்கும் அனைத்துப் பெண்களுக்குமானதாகவே அமைந்திருப்பது சிறப்பு.
- தனசீலி திவ்யநாதன், திருச்சி.