

பட்டாம்பூச்சி எங்கிருந்து பறந்து வரும் என்ற தன் மகளின் கேள்விக்கு விடையாக மாடித் தோட்டம் அமைத் ததாகச் சொல்கிறார் சென்னை அரும் பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமிஸ்ரீ. செடிகள், மரங்கள் குறைந்த நகர வாழ்க்கையில் ஓரளவுக்காவது பசுமையோடு இணைந்து வாழ முடிவெடுத்திருக்கிறார் இவர்.
மதுரையில் பிறந்து வளர்ந்த லட்சுமிஸ்ரீக்குச் சிறு வயது முதலே செடிகள் அமைப்பதில், ஈடுபாடு அதிகம். சகோதரிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு வெண்டைக்காய், பாகற்காய் விளைவித்து, அம்மாவிடம் கொடுப்பது இவரது முக்கியப் பொழுதுபோக்கு. திருமணமாகி சென்னைக்கு வந்தபின் காய், கீரைகளை வளர்க்க முடியாமல், வாடகை வீட்டில் பூச்செடிகள் மட்டும் வளர்த்திருக்கிறார். அப்போதுதான் பட்டாம்பூச்சி குறித்து மகள் கேட்டதும், ‘மாடித்தோட்டம் வைக்கலாமே’ என்ற எண்ணம் மனதில் தீவிரமாகத் தோன்றியிருக்கிறது.
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் உணவில் கீரை கட்டாயம் இடம்பெறும். ஆனால் ரசாயன வாடையால் கீரைகளைப் பயன்படுத்த முடியாமல் போனது கவலையளித்தது. அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கியவுடன், மற்றவர்களிடம் நட்புடன் மாடித்தோட்டம் அமைக்கப்போகும் திட்டத்தைச் சொல்லிவிட்டேன். மாடி முழுவதையும்கூட பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றனர். என் கணவர், ‘மை ஆர்கானிக்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணியில் இறங்கிவிட்டேன்” என்கிறார் லட்சுமிஸ்ரீ.
இவரது மாடித் தோட்டத்தில் பிரதான இடம் கீரைகளுக்குத்தான். பருப்புக் கீரை, சிறு கீரை, தண்டுக் கீரை, முளைக் கீரை, பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்கை என்று அனைத்து வகைக் கீரைகளையும் ஆண்டு முழுவதும் பயிரிடுகிறார். மல்லிகை, ரோஜா, ஜாதிமல்லி, நித்தியமல்லி, முல்லை உள்ளிட்ட பூச்செடிகளுடன், குரோட்டன்களும் மாடியை அலங்கரிக்கின்றன. அத்துடன் சுரைக்காய், அவரைக்காய், மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய் செடிகளையும் வளர்த்துவருகிறார்.
கீரை வளர்ப்பதிலும் சமைப்பதிலும் வல்லவராக இருப்பதால், லட்சுமிஸ்ரீக்கு ‘கீரை ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெயரும் உண்டு. தினமும் கீரையை சூப், பொரியல் என விதவிதமாகச் சமைக்கிறார். தேவைபோக, மீதமுள்ள கீரைகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்.
“சொந்தத் தொழில் செய்யும் கணவருக்கு உதவி செய்கிறேன். அதனால் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே தோட்டத்தில் செலவிடுகிறேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றுடன், காய்கறிக் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கிறேன். மாடித் தோட்டத்தை தினமும் பராமரிக்கும்போது, வேலை சுலபமாகிவிடும். ஒவ்வொரு முறையும் காய்கள் புதிதாகக் காய்ப்பதைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஒவ்வொரு மாதமும் காய்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மிச்சம் செய்கிறோம் என்ற திருப்தியும், முழுமையான ஆரோக்கியமான உணவை குடும்பத்துக்கு வழங்குகிறோம் என்ற நிம்மதியும் தவிர வேறென்ன வேண்டும்?” என்று கேட்கிறார் லட்சுமிஸ்ரீ.