

உலகத் திரைப்பட விழாக்களில் தற்போது பல தமிழ்ப் படங்கள் பங்கெடுத்துவருகின்றன. உலக அரங்கில் தமிழ்ப் படங்களைக் கொண்டுசேர்ப்பதில் முக்கியப் பங்காற்றிவருகிறார் கனடாவில் வசிக்கும் திலானி.
“டொரொன்டோ திரைப்பட விழாவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தியாவில் தயாராகும் படங்களைத் தேர்வு செய்யும் பணிக்கும் உதவி செய்துவந்தேன். 2014-ம் ஆண்டு ‘காக்கா முட்டை’ படத்தைத் தேர்வு செய்து, நம் திரைப்பட விழாவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றேன். அந்தப் படத்தின் முதல் திரையிடலுக்காக இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர் வெற்றி மாறன் இருவரும் டொரொன்டோவுக்கு வந்தார்கள்.
அந்தத் தருணத்தில் இருந்தே இருவருடனும் பணியாற்ற ஆரம்பித்தேன். தற்போது இயக்குநர் மணிகண்டனின் படங்களில் பணியாற்றிவருகிறேன். ‘குற்றமே தண்டனை’, ‘கிருமி’ படங்களை முக்கியமான திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவைப்பது மட்டுமின்றி, அந்தப் படங்களைப் பற்றிப் பேசியும் வருகிறேன். இரண்டு படங்களுமே பல திரைப்பட விழாக்களுக்குச் சென்று வந்தது அனைவருக்கும் தெரியும்” என்கிறார் திலானி.
‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
எனக்கு இந்தியத் திரைப்படம் எப்படித் தயாராகிறது என்பதைப் பார்க்க ஆசை. அதனால் ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்கான வேலைகள் தொடங்கியதிலிருந்து இறுதிவரை படக்குழுவினருடன் இருந்து வேலைகளைக் கவனித்தேன். படத்துக்கு சப்-டைட்டில் செய்து கொடுத்தேன். தற்போது உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. நான் கனடாவில் இருந்தாலும், மணிகண்டன் குழுவினரோடுதான் பணியாற்றிவருகிறேன். அவர்கள் அடுத்த படத்துக்கான பணிகளில் இருக்கிறார்கள். அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் என் பணிகள் ஆரம்பிக்கும். ஆண்களையும் பெண்களையும் சமமாக நடத்துவது இந்தக் குழுவில் நான் பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம்.
திரைப்படங்களில் ஆர்வம் எப்படி வந்தது?
அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய படங்களை என் அண்ணனுடன் பார்ப்பேன். என் சினிமா அறிவுக்கு அண்ணன்தான் வழிகாட்டி. ‘ஜீன்ஸ்’ படத்தைப் பார்த்தபோது, தமிழ்த் திரை உலகில் ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அமெரிக்கா, எகிப்து, சீனா, பிரான்ஸ் என்று உலகத்தையே அந்தப் படத்தில் காட்டியிருப்பார்கள். அப்போதுதான் சினிமாவுக்கு என் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் கனடாவில் இருந்துகொண்டு, இந்தியத் திரைப்படங்களில் எப்படிப் பங்கெடுப்பது என்று யோசித்தேன்.
டொரொன்டோ திரைப்பட விழாவில் பணியாற்றியபோது, அவர்களுக்குத் தென்னிந்தியத் திரைப்படங்கள் பற்றித் தெரியவில்லை. அவற்றைப் பற்றி நான் எடுத்துச் சொன்னேன். தென்னிந்தியத் திரைப்படங்களுக்கும் டொரொன்டோ திரைப்பட விழாவுக்கும் ஒரு பாலமாகப் பணியாற்றினேன்.
தற்போது தமிழில் அற்புதமான குறும்படங்கள் வருகின்றன. அவற்றை எப்படித் திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்தும் ஆலோசனை அளித்துவருகிறேன். என் பணிக்கு நேர்மையாகவும் என்னிடம் வரும் இயக்குநர்களுக்கு உண்மையாகவும் உழைத்துக் கொடுக்கிறேன் அவர்களுடைய படத்துக்காக நான் நிறையப் பணியாற்றுகிறேன் என்பதை இயக்குநர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலக சினிமா மீது எனக்கு இருக்கும் அறிவை மதிக்கிறார்கள்.
சென்னையில் உங்கள் அனுபவம் எப்படி?
கனடாவில் இருக்கும்போதே நிறைய தமிழ் இயக்குநர்களோடு பணியாற்றி இருப்பதால் தைரியமாகச் சென்னைக்கு வந்தேன். நம்பிக்கையோடு வேலை செய்தேன். சந்தோஷமான அனுபவங்களைப் பெற்றேன்.