

சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் தீபிகா சன்னா ரெட்டி கடந்த மாதம் நடந்த ‘இந்தியா ரன்வே ஃபேஷன் வீக்’நிகழ்ச்சியில் தன்னுடைய வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ‘வதுவு’ என்ற மணப்பெண்களுக்கான ஆடைகள் தொகுப்பை அதில் அறிமுகம் செய்திருக்கிறார். தென்னிந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்படி அமைந்திருந்த ஆடை வடிவமைப்பு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சென்னை தி.நகரில் ‘இஷிதா’ என்ற மணப் பெண்களுக்கான பிரத்யேக பொட்டிக் நடத்திவரும் தீபிகா, மணப்பெண்களின் ஆடை வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் சிலவற்றைச் சொல்கிறார்:
திருமணப் புடவைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுமானவரை பட்டு, பனாரஸ் பட்டு வகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பட்டுப் புடவைகளில் ‘டெஸ்ட்டட் சில்க்’ (Tested Silk), ‘ப்யூர் சில்க்’ (Pure Silk) என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ‘ப்யூர் சில்க்’ புடவைகள்தான் தரமானவை. அதனால், திருமணப் புடவைகளை வாங்கும்போது ‘ப்யூர் சில்க்’தானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு வாங்குவது நல்லது.
புடவைகள், லெஹங்காவின் நிறங்களைப் பொறுத்தவரை, உங்கள் நிறத்துக்குப் பொருந்தும் படியான நிறங்களைத் தேர்ந்தெடுப்பது உகந்தது.
உயரமாக, ஒல்லியாக இருப்பவர்கள் முழங்கை வரையுள்ள பிளவுஸ்களை அணியலாம். பருமனாக இருப்பவர்கள் ‘ஷார்ட் ஸ்லீவ்’, ‘மிட் லெங்த்’ பிளவுஸ்களை அணிவது பொருத்தமாக இருக்கும். ‘க்ளோஸ் நெக்’ அணிவதைத் தவிர்க்கலாம்.
திருமணத்தின்போது புடவை அணிவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். அதனால், திருமணப் புடவையின் பிளவுஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைப்பது இப்போதைய டிரெண்ட்.
ரெடிமேட் லெஹங்காவைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ‘கேன் -கேன்வாஸ்’ (Can - Canvas) இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வாங்குவது
நல்லது. அதேமாதிரி, ரெடிமேட் லெஹங்கா பிளவுஸ் மெட்டிரியலின் அளவு சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். அப்படியில்லாமல், ‘கஸ்டம்’ லெஹங்கா வாங்குவதாக இருந்தால், கடைக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு மாதிரியை வரைந்து எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. இதனால், கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
உங்களுடைய அலங்காரமும் நகைகளும் ஆடையின் வடிமைப்போடு இசைந்ததாக அமைந்திருக்க வேண்டும்.
தாவணி அணிய விருப்பமுள்ளவர்கள் நலங்கு நிகழ்வின்போது அணிந்துகொள்ளலாம். வரவேற்புக்கு லெஹங்காவும் ஃப்யூஷன் கவுன்களும் (இண்டோ வெஸ்டர்ன்) அணிவது அதிகரித்திருக்கிறது. திருமணத்தின்போது டிஷ்யூ புடவைகளையும் இப்போது அணிகிறார்கள்.
பிளவுஸ்களில் ஜர்தோஸி, ஜரி, கண்ணாடி, ‘திரெட் அண்ட் ஸ்டோன்’, ‘கட் வொர்க்’ போன்ற வேலைப்பாடுகளை இப்போது நிறைய பேர் விரும்புகிறார்கள். இதில், ஜரி வேலைப்பாட்டைவிட ஜர்தோஸி வேலைப்பாடு விலை உயர்ந்தது.
லெஹங்காவை வடிவமைக்க பனாரஸ், ஆர்கான்ஸா (Organza), ரா சில்க் (Raw Silk) போன்ற ஃபேப்ரிக் ஏற்றதாக இருக்கும். இதற்கு ‘நெட்’ மெட்டிரியலைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம்.
மணப்பெண்களுக்கான பிளவுஸ் ரூ. 4,500 லிருந்து ரூ. 35,000 வரையிலான பட்ஜெட்டில் வடிவமைக்கப் படுகிறது. லெஹங்காவைப் பொருத்தவரை ரூ. 25,000-லிருந்து 1,50,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.