

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி யில் இந்திய மகளிர் அணியின் வீராங்கனையான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிகா மீது அனைவருடைய பார்வையும் குவிந்திருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பாகத் திகழும் ஹரிகா, தற்போது எட்டாவது முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடுகிறார். 31 வயதான ஹரிகா தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
சொந்த மண்ணில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ஆர்வமாகச் சென்னை வந்திருக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருப்பதால், மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதைக் கவனிப்பதற்காக மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகத் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கும் ஹரிகா, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தவர். கடந்த 2011இல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
- மிது கார்த்தி