

இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னைக்குப் பெருமைசேர்க்கும் செஸ் குடும்பத்தின் இளவரசி வைஷாலி. இவருடைய தம்பி பிரக்ஞானந்தா. ரமேஷ் பாபுவும் நாகலஷ்மியும் இவருடைய பெற்றோர். 2020இல் இணையவழியில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர் வைஷாலி. தன்னுடைய 12ஆவது வயதிலும் 14ஆவது வயதிலும் இரண்டு முறை உலக யூத் செஸ் சாம்பியனாகத் தடம் பதித்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து...
செஸ் விளையாட்டில் நிறைய தொடக்க ஆட்ட வகைமைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்குப் பிடித்த ஓபனிங் எது, ஏன்?
எனக்கு மிகவும் பிடித்த தொடக்க ஆட்ட முறை சிஸிலியன்ஸ். ஏனென்றால், இந்த முறையில்தான் ஏராளமான சுவாரசியமான நகர்வுகளுக்கும் நிலைகளுக்கும் வழி இருக்கிறது.
செஸ் ஆட்டத்தில் பல உத்திகள் உள்ளன. அதில் உங்களின் விருப்பமான உத்தி எது?
நிறைய சாதூர்யமான காரணங்கள் இருக்கின்றன. யானையையும் பிஷப்பையும் தியாகம் செய்து எதிராளியின் ஆட்டத்தை முடிப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.
ஸ்டாண்டர்டு செஸ் ஆட்டத்தைத் தவிர, செஸ் 960, ஆன்ட்டி-செஸ், அடாமிக் செஸ் போன்ற செஸ் ஆட்ட வடிவங்களில் தாங்கள் ஆடவிரும்பும் வடிவம்?
செஸ் டாட் காம் இணையத்தில் நால்வருடன் விளையாடும் செஸ் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஸ்டால்மேட் (எதிரில் ஆடுபவருக்கு போர்டில் நகர்த்துவதற்கே வழி இல்லாமல் போவதற்கு `ஸ்டால்மேட்' என்று பெயர்) என்னும் நிலை தங்களின் விளையாட்டில் ஏற்பட்டிருக்கிறதா?
ஸ்டால்மேட் என்னும் நிலையை விளையாடும்போதும் எதிர்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அதுவொரு வித்தியாசமான அனுபவமாக செஸ் ஆடுபவர்களுக்கு இருக்கும்.
எதிராளியின் தவறான ஒரு நகர்வில் வெற்றி உங்கள் வசமாகிவிடும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, அந்த நேரத்தில் உங்களின் எண்ணவோட்டம் எப்படி இருக்கும்?
நிச்சயமாக நான் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தால், என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டு எதிரில் ஆடுபவரின் நகர்வையும் ஆட்டத்தின் போக்கையும் மிகவும் கவனத்துடன் கண்காணித்துக் கொண்டிருப்பேன்.