

பெண்களின் தயக்கமும் வெட்கமும் சில நேரம் அவர்களது உயிரையே பலிவாங்கக் கூடுமா? கூடும் என் கிறது மார்பகப் புற்றுநோய் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை.
மார்பகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பெரும்பாலான பெண்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆரம்ப கட்ட அறிகுறைகளைக்கூட அலட்சியப்படுத்திவிடுகின்றனர். காரணம், இதைப் பற்றித் தன் குடும்பத்தினரிடம் சொல்வதில்கூடப் பலருக்கும் தயக்கமும் அவமான உணர்வும் இருக்கிறது. சிகிச்சையின் போது மார்பகத்தை நீக்கி விட்டால் பெண்மைக்கான அடை யாளத்தை இழந்துவிடக்கூடும் என்று எண்ணிப் பெண்கள் பலர் மார்பகப் பாதிப்பு குறித்து வெளியே சொல்வதில்லை.
“மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் இந்தக் காலத்திலும் நோய் முற்றிய நிலை யில் சிகிச்சைக்கு வரும் பெண்கள் இருக்கிறார்கள்” என்கிறார் சென்னை எழும்பூர் குழந்தைகள், பெண்கள் மருத்துவமனையின் மகப்பேறியல் புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணர் கவிதா. மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் நவீனச் சிகிச்சை முறைகள் வந்துவிட்டதால் அனைத்து வகைப் புற்றுநோய்க்கும் மார்பகத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அவர்.
“ஆரம்ப நிலையிலும் கட்டியின் அளவைப் பொறுத்தும் புற்றுக்கட்டியை மட்டும் நீக்கிவிடலாம். சில நேரம் கட்டி பெரிதாக இருந்தால் கீமோதெரபி கொடுத்து அதன் அளவைக் குறைத்துக் கட்டியை மட்டும் நீக்கும் முறையும் இப்போது வந்துவிட்டது. மார்பகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் இருப்பது, தோலைத் தாக்கும் அளவுக்கு முற்றிய நிலை, உடலின் பிற பாகங்களுக்கும் பரவிய நிலை போன்றவற்றுக்கு மட்டுமே மார்பகத்தை முழுவதுமாக நீக்க வேண்டியிருக்கும். மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை இருக்காது. கட்டியின் தன்மை, நிலையைப் பொறுத்துச் சிகிச்சை முறைகள் மாறுபடும்” என்கிறார்.
நம்மிடம் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு இருந்தாலும் வெளிநாடு களுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டுப் பெண்கள் மிகத் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். “மருத்துவக் கருத்தரங்குகளில் வெளி நாட்டு மருத்துவர்களுடன் உரை யாடுகிறபோது அங்கே பெண்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ மனைக்கு வந்துவிடுகிறார்கள் என்பது தெரிந்தது. இங்கே படித்த பெண்கள்கூட மார்பகத்தின் தோல் வரைக்கும் நோய் பரவிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஒரு பெண் மார்பகத்தில் புற்றுநோய் முழுவதும் தாக்கி அது முகம் வரைக்கும் பரவிய பிறகே மருத்துவமனைக்கு வந்தார். இப்படி வருவதால் எவ்வளவு சிறந்த சிகிச்சை அளித்தாலும் ஓரளவுக்கு மேல் குணப்படுத்த முடியாது. அதனால்தான், மார்பகத்தில் சிறு கட்டி தென்பட்டாலோ, மார்பகத்தில் அரிப்பு, தோல் நிறமாற்றம், காம்புகளில் வீக்கம் அல்லது திரவம் கசிவது என்று எந்த அறிகுறியாக இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்” என்கிறார்.
தொடர்ச்சியான சிகிச்சை
மார்பகப் புற்றுநோய்ச் சிகிச்சையைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும், பாதியில் நிறுத்தினாலும் ஆபத்துதான். சிகிச்சைக்குக் குறைந்தது ஆறு மாதம் முதல் ஓராண்டு வரைக்கும் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். நம் இந்தியப் பெண்கள் எப்போதும் பிறரைச் சார்ந்தே இருப்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கணவனையோ, மகனையோ எப்படித் தொந்தரவு செய்வது என்கிற தயக்கத்தால் தங்கள் உயிருக்கே உலை வைத்துக் கொள்கி றார்கள். “பெண்கள் இந்தத் தயக்கத்தைக் கைவிட வேண்டும். கூடுமானவரை தாங்களே மருத்துவமனைக்குச் செல்லப் பழகலாம். நம் ஆரோக்கியத்தைக் காப்பது நம் குடும்பத்தினரின் கடமையும்தானே. அதனால் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அவர்களிடம் தெரிவிக்கலாம். பெண்கள் பலர் பாதி சிகிச்சைக்கு மேல் வர மாட்டார்கள். இதுவும் ஆபத்தானது. சிகிச்சையை முழுமையாக முடித்தால்தான் புற்றுநோய் பிற பாகங்களுக்கும் பரவாமல் தடுக்கப்படும்” என்று சொல்லும் கவிதா, புற்றுநோய்ச் சிகிச்சைக்கு ஆகும் செலவும் பெண்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது என்கிறார்.
“ஆனால், தமிழ்நாட்டில் அந்தச் சிக்கலும் இல்லை. எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு உண்டு. சில பரிசோதனைகள் ஒரு சில மருத்துவமனைகளில் இல்லை என்றாலும் அதற்கேற்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அதனால், பெண்கள் தயங்காமல் அரசு மருத்துவமனைக்குச் செல்லலாம். இந்தச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் விலை அதிகமானவை என்பதால் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம். பலருக்கும் ரேஷன் அட்டை, முதல்வர் காப்பீட்டுத் திட்ட அட்டை போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்துத் தெரிவதில்லை. இவை இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் மிக எளிதாகப் புற்றுநோய்ச் சிகிச்சை பெற முடியும்” என்கிறார் கவிதா.
எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்கள் மார்பகச் சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். எப்படிச் செய்வது என்று தெரியவில்லையென்றால் ஒரு முறை மகப்பேறு மருத்துவரை அணுகித் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளலாம். எளிதாகத் தீர்க்க வேண்டிய சிக்கலை நம் அறியாமையாலும் தயக்கத்தாலும் சிக்கலாக்கிக்கொள்ளக் கூடாது.