வானவில் அரங்கம் | நடிகையின் குழந்தைப் பருவம்

வானவில் அரங்கம் | நடிகையின் குழந்தைப் பருவம்
Updated on
1 min read

முன்னோடி சினிமா இயக்குநரான ஷியாம் பெனகலின் ‘ஜுனூன்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை தீப்தி நாவல். 1980-களில் முன்னெடுக்கப்பட்ட மாற்று சினிமா முயற்சிகளின் பாகமாக இருந்தவர். தீப்தி இயக்கிய ‘தோ பைசே கி தூப், சார் ஆனே கி பாரிஷ்’ படத்தில் மனீஷா கொய்ராலா பாலியல் தொழிலாளியாக நடித்தார். இந்தப் படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. சுனிதா பாட்டீல், ஷப்னா ஆஸ்மி போன்ற நடிகைகள் அளவுக்குப் புகழ்பெற்ற தீப்தி, தன்னை உருவாக்கிய குழந்தைப் பருவ நினைவுகள் குறித்து ‘ஏ கன்ட்ரி கால்டு சைல்டுவுட்’ (A Country Called Childhood) என்னும் பெயரில் தன் அனுபவக் கட்டுரை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நூலில் 1950, 60-களில் அமிர்தரஸில் சுவாரசியம் அளிக்கக்கூடிய அவரது குழந்தைப் பருவத்தைப் பதிவுசெய்துள்ளார். சீனா – இந்தியா, பாகிஸ்தான் - இந்தியா ஆகிய இரு போர்களும் இந்த நூலின் பின்னணியில் வந்துசெல்கின்றன. இந்தியாவின் தனித்துவமான காட்சிகளைப் பண்பாட்டுப் பின்புலத்தில் உருவாக்கியதன் மூலம் இந்நூலை ஆங்கில இலக்கிய உலகில் தனித்துவமாக்கியுள்ளார் தீப்தி.

பட்டியலுக்கு வெளியே

உலக இலக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய இலக்கியங்களில் ஒன்று லத்தீன் அமெரிக்கப் புனைவுகள். அந்த புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒருவர் அர்ஜென்டினா எழுத்தாளர் அந்தோனியோ டி பெனெடெட்டோ. 1976இல் ராணுவ ஆட்சியில் கைதுசெய்யப்பட்டுச் சித்ரவதை அனுபவித்த இவர், ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.

அந்தோனியோவின் நாவல்கள் அவரது இறப்புக்குப் பின் ஆங்கிலத்தில் மிகக் காலதாமதமாக மொழிபெயர்க்கப்பட்டதால், உலகப் புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பட்டியலில் இவருக்கு இடம் கிடைக்காமல் போனது. இவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளரான எஸ்தர் ஆலன், ‘தி சைலன்டரி' (The Silentiary) என்னும் தலைப்பில் அவரது இரண்டாவது நாவலை மொழிபெயர்த்துள்ளார். அர்ஜென்டினாவில் பெயரிடப்படாத ஒரு நகரத்தில் வாழும் எழுத்தாளனைக் குறித்த கதையைச் சொல்லும் இந்நாவல் ஆங்கில புனைவிலக்கியப் பரப்பில் கவனம் பெற்றுவருகிறது.

- ஜெய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in