

கடந்த ஜூலை 15 அன்று வெளியான ‘இரவின் நிழல்’, ‘கார்கி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்பும் வெளியான பிறகும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. அனுபவம் வாய்ந்த இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘இரவின் நிழல்’ உலகின் முதல் ‘நான் லீனியர் சிங்கிள் ஷாட் சினிமா’ என்னும் அறிவிப்புடன் வெளியானது. சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ‘கார்கி’யை இளம் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள், பெண்கள் சார்ந்த பிற விஷயங்களும் கையாளப்பட்டிருக்கும் விதம் பாலின அரசியல் பார்வையில் ஆய்வுக்குரியவை.
பொதுவாகச் சிறுமியர் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களையோ சிறுமியர் மீது அவர்களுக்குத் தெரிந்தவரே பாலியல் அத்துமீறல் நிகழ்த்தியதைக் கேள்விப்படும்போதோ அனைவருக்கும் ஏற்படும் அச்சம் ‘நம் மகளுக்கு இப்படி நடந்தால் என்ன ஆவது’ என்பதே. ஆனால், ‘கார்கி’ இந்தப் பிரச்சினையின் இன்னொரு முகத்தை, குறிப்பாக நம்மில் பலரும் பேசவும் சிந்திக்கவும் தயங்கும் விஷயத்தை எந்தச் சமரசத்துக்கும் சர்க்கரைப் பூச்சுகளுக்கும் இடமளிக் காமல் பதிவுசெய்கிறது. ‘நம் வீட்டு ஆண்கள், நம் அன்பைப் பெற்றவர்கள், நம் மரியாதைக்குரியவர்கள் சிறுமியர் மீது பாலியல் இச்சைகொள்ளும் கயவர்கள் என்பது தெரியவந்தால் நாம் என்ன செய்வோம்?’ என்று நம் ஒவ்வொருவரையும் சுயபரிசீலனை செய்துகொள்ளத் தூண்டுகிறது ‘கார்கி’.
நாம் பேச மறுக்கும் பக்கம்
நமக்கு மிகவும் அன்பானவர்கள் நமது மரியாதைக்குரியவர்கள் பாலியல் குற்றவாளிகள் என்பது தெரிந்துவிட்டால் பாலியல் வன்முறையை உண்மையாக எதிர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறது ‘கார்கி’. அதனாலேயே பாலியல் வன்முறை குறித்துப் பேசிய திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
அதோடு பெண் கதாபாத்திரங் களின் சித்தரிப்புக்காகவும் ‘கார்கி’ படம் பாராட்டுக்குரியது. தன் தந்தை மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தவறானது என்று நம்பும் ஒரு பெண் அவரை விடுவிக்க நிகழ்த்தும் போராட்டம்தான் படத்தின் பெரும்பகுதி. இந்தப் போராட்டத்தில் அவருக்குத் துணையாக ஒரு ஆண் வழக்கறிஞர் (காளி வெங்கட்) இணைந்துகொண்டாலும் அவர் அந்தப் பெண்ணுக்கு உதவுகிறாரே தவிர மீட்பராக்கப்படவில்லை. சட்டம், சமூகம் உள்ளிட்ட பெரும் அமைப்புக்கு எதிரான ஒற்றை மனிதரின் போராட்டத்தை முன்வைக்கும் கதைகளில் கதாநாயக நடிகர்களையே பார்த்துவந்துள்ளோம். இப்போது ஒரு பெண்ணை இத்தகைய ‘ஒற்றைப் போராளி’ கதாபாத்திரத்தில் பார்ப்பது புத்துணர்வை அளிக்கிறது.
மேலும், படத்தில் திருநங்கை நீதிபதி கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் திருநங்கை சுதாவை நடிக்க வைத்திருப்பதும் தமிழ் சினிமா பல வகையிலும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்னும் நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது.
புதிய உருவாக்கம் பழைய சிந்தனை
‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் முதல் அரை மணிநேரம் படம் உருவான விதம் திரையிடப்படுகிறது. படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கும் முனைப்பில் படப்பிடிப்பின் எந்தத் தருணத்தில் தடங்கல் ஏற்பட்டாலும் முதலிலிருந்து தொடங்கி மீண்டும் படத்தை எடுத்திருக்கிறார்கள். 94 நிமிடப் படத்தில் 92ஆம் நிமிடத்தின்போது ஒரு சிறு பிழை ஏற்பட்டதால் நிறுத்திவிட்டு மீண்டும் தொடக்கத்திலிருந்து படமெடுத்ததைத் தெரிந்துகொள்ளும்போது படக்குழு வினரின் அர்ப்பணிப்பு மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. ஆனால், இத்தகைய உழைப்பைக் கொட்டி உருவாக்க ரீதியில் மிகவும் புதுமையான முயற்சியாக வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் பெண் கதாபாத்திரங் களின் சித்தரிப்பும் பெண்கள் குறித்து வெளிப்படும் பார்வையும் அரதப் பழமையானவையாகவும் பிரச்சினைக்கு உரியவையாகவும் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பார்த்திபனின் வாழ்வில் நான்கு பெண்கள் வருகிறார்கள். அவருடைய முதல் காதலி அவரை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் உறவுகொள்கிறார். சாமியாடியாக வரும் வரலட்சுமி சரத்குமாரும் அவரை ஏமாற்றிய தால் அவராலேயே கொல்லப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக பார்த்திபன் இயக்கி நடிக்கும் படங்களில் பெண்களால் அவர் ஏமாற்றப்படுவது, தவறாமல் இடம்பிடிக்கும் அம்சமாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற அவருடைய முந்தைய படமான ‘ஒத்த செருப்பு’ படம் இறுதியில் அவருடைய மனைவி அவருக்குத் துரோகம் செய்திருப்பதாக முடிவடையும். பெண்கள் தவறே செய்வ தில்லையா என்று கேட்கலாம். ஆனால், தொடர்ந்து பெண்களைப் பிறழுறவு கொள்கிறவர்களாகச் சித்தரிப்பது பெண் கள் குறித்துச் சமூகத்தில் புரையோடிப் போயி ருக்கும் ஆண்மையப் பார்வையை வலுப்படுத்துவதாகவே அமையும்.
‘புதிய பாதை’யில் இணையலாமே
இது மட்டுமல்லாமல் நகைச்சுவை என்னும் பெயரில் படத்தில் வைக்கப்பட்டி ருக்கும் சில இரட்டை அர்த்த வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. நாயகன் அனைத்து குற்றங்களையும் செய்பவராகக் காண் பிக்கப்பட்டாலும் அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலையும் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகங்களும்தான் அவற்றுக்குக் காரணம் என்று உணர்த்தப்படுகிறது. ஆனால், படத்தில் தவறுசெய்யும் பெண்களுக்கு அப்படிப்பட்ட நியாயங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
அண்மைக் காலங்களில் பெண்கள் குறித்த சித்தரிப்பில் வரவேற்கத்தக்க மாற்றங்களுடன் பெண்கள் பிரச்சினை களைத் துணிச்சலாகவும் முற்போக்குப் பார்வையுடனும் பேசும் படைப்புகள் அதிகரித்திருக்கின்றன. ரசிகர்களின் மதிப்பைப் பெற்ற பார்த்திபன் போன்ற மூத்த இயக்குநர்களும் இந்தப் புதிய போக்கில் இணைந்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in