நம்பிக்கை தரும் மகளிர் அணி

நம்பிக்கை தரும் மகளிர் அணி
Updated on
2 min read

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன. கரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் நடைபெற்ற இப்போட்டிகள் மீண்டும் நேரடியாக நடைபெறவிருக்கின்றன. இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் 30 பேர் அடங்கிய இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மகளிர் அணியில் 15 பேர் பங்கேற்க உள்ளனர்.

கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, ஆர். வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளார்கள். வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக் ஆகியோர் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளார்கள். ‘சி’ பிரிவில் ஈஷா கரவடே, வர்ஷினி ஷாகிதி, பிரதியுஷா போடா, பி.வி.நந்திதா மற்றும் வர்ஷா வாஷ்ணவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 98 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட்டில் கடந்த 2014ஆம் ஆண்டில் நார்வேயில் நடைபெற்ற நேரடி செஸ் ஒலிம்பியாட் போட்டியில்தான் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் அணி வென்ற பதக்கம் அது.

மகளிர் அணி இதுவரை பதக்கம் வென்றதில்லை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மகளிர் அணி செஸ் ஒலிம்பியாட் பட்டியலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2004 செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி ஒன்பதாவது இடத்தையும் 2012இல் நான்காவது இடத்தையும் 2014இல் பத்தாவது இடத்தையும் 2016இல் ஐந்தாவது இடத்தையும், 2018இல் எட்டாவது இடத்தையும் மகளிர் அணி பிடித்தது. குறிப்பாகக் கடந்த பத்து ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிரணி பதக்கம் வெல்லாவிட்டாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.

இந்திய வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, தானியா சச்தேவ், சவுமியா சுவாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ராவத் ஆகியோர் கடந்த பத்து ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். எனவே, இந்த முறை சொந்த மண்ணில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால், இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

சாதிக்கும் அணி

இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி 2019 உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. இதைத் தவிர்த்து 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கொனேரு ஹம்பி மகளிர் பிரிவிலும் கலப்பு அணியிலும் தங்கப் பதக்கங்களை வென்றவர். கொனேரு ஹம்பிக்கு அடுத்தபடியாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற டி. ஹரிகா, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக மகளிர் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். கடந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

தானியா சச்தேவ் 2012 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபராக மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இதேபோல காமன்வெல்த் மகளிர் சாம்பியன்ஷிப், ஆசிய மகளிர் அணிக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவரும் பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர். வைஷாலி 2016இல் சர்வதேச மகளிர் மாஸ்டர் பட்டத்தையும் 2021இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் வென்றவர். 2020இல் ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் ஆர். வைஷாலி.

இப்படி மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீராங் கனையும் தேர்ந்த அனுபவமும் செஸ் விளையாட்டில் சாதுர்யமாக விளையாடும் திறனும் கொண்ட வர்கள். எனவே, இந்த இந்திய மகளிர் அணி சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் சாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in