பேசு பெண்ணே-8 | திரைப்படங்களில் கலந்திருக்கும் நஞ்சு

பேசு பெண்ணே-8 | திரைப்படங்களில் கலந்திருக்கும் நஞ்சு

Published on

ஒரு நல்ல திரைப்படம் என்பது நல்ல கதை, நடிப்பு, பொழுது போக்கு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சாமானிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அறிவார்ந்த சமூகத்தில் நல்ல கருத்துகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. இவை எதுவுமே இல்லை என்றாலும், படம் சுமார் என்று கொட்டாவிவிட்டுப் போகலாம். ஆனால், கொடிய நஞ்சு கலந்திருந்தால்?

தமிழ்த் திரைப்படங்களில் இன்று நேற்றல்ல, காலங்காலமாகப் பெண் வெறுப்பு எனும் ஆலகால நஞ்சைப் பல்வேறு சுவை களில் தினுசு தினுசாகப் பரிமாறிக்கொண்டே இருக்கிறார்கள். “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை” என்று பாடமெடுக்காத நாயகர்களே இல்லை எனலாம். பெண்கள் விரும்பிக் கொண்டாடிய இயக்குநர்களும் பெண் வெறுப்புக்கு விதிவிலக்கல்ல. “திருமதியாக இருப்பதே ஒரு வெகுமதி” என்று படமெடுத்த விசு, “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்கிற பழைய பஞ்சாங்கத்தை வைத்துத்தான் கல்லா கட்டினார்.

பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்கள் எடுத்தாலும் அவையும் பெண் வெறுப்பில் இருந்து தப்பவில்லை. பாலசந்தர் எடுத்த ‘நூல்வேலி’ திரைப்படம் பாதிக்கப்பட்ட இளம்பெண் குற்றவுணர்வைச் சுமந்து கொடூர மரணத்தைத் தானே தேடிக்கொள்வது மட்டுமல்ல, தவறு செய்தவனை நல்லபடி வாழ வழியும் செய்துவிட்டுப் போவதாகக் கதை முடியும்.

பாக்யராஜின் ‘சின்ன வீடு’, மணி வண்ணனின் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ போன்றவை தங்களின் தன்மானத்தைக் காலில் போட்டு மிதிக்கும் கணவனின் மனம் திருந்தக் காத்திருக்கும் பெண்களின் கதைதான். பெண்ணியப் புரிதல்கள் அதிகரிக்கும் காலக்கண்ணாடியில் இத்திரைக்காவியங்களின் பிம்பங்கள் சிதைந்து நொறுங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நீக்கமற நிறைந்திருக்கும் பெண்வெறுப்பு

பெண்ணின் உடல் மீதும் வாழ்வு மீதும் ஏறி நின்றுகொண்டு தீர்ப்பு வழங்குதல், பாதிக்கப்படும் பெண்ணையே பலிபீடத்தில் ஏற்றுதல், ஆணாதிக்க விதிகளைச் சற்றே மீறினாலும் கொலைத் தண்டனை கொடுத்தல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இது சிறு உதாரணம் மட்டுமே.

ஆனால், ஆண் கொலைக் குற்றமே புரிந்தாலும் அதற்கு நியாயங்கள் கற்பிக்கப் படுவதும் பின்னணியில் ஒரு ‘பெண் பேயும்’ இருப்பாள் என்கிற நஞ்சை விதைத்துச் செல்வதும் தமிழ் சினிமாக்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பெண் வெறுப்பாகும். ‘சிவப்பு ரோஜாக்கள்’ முதல் ‘சைக்கோ’ வரை பெண்களை மட்டும் தேடிப் பிடித்துக் கொடூரக் கொலைகள் புரியும் ஆணை மன்னித்து விடுவிக்கும் தாயன்பைப் பார்வையாளர் களுக்குச் சுரக்கச் செய்துவிடுகிறார்கள்.

புரட்சிப் பாதை?

வன்புணர்வு செய்யப்பட்டால் சாவதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழி கிடையாது என்பதுதான் தமிழ்த் திரைப்படங்களின் நீண்டகால விதி. பேய்ப் படமென்றால் மட்டும் செத்த பின் குற்றவாளிகளைப் பயமுறுத்திப் பழிவாங்கும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த விதியை மீறிப் பெரும்புரட்சி செய்ததால் ‘புதிய பாதை’ என்கிற திரைக் காவியத்துக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டது. அது என்ன புரட்சி? ‘வன்புணர்வு செய்யப்பட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்! வன்புணர்வு செய்த ‘நல்லவனை’ தேடிப் பிடித்து, காதலித்து, திருத்தி, ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டு வாழலாம்’ என்பதுதான் அந்தப் புரட்சி.

அந்தப் புரட்சிப் படத்தை இயக்கிய அதே இயக்குனரான பார்த்திபனின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள ‘இரவின் நிழல்’ என்கிற திரைப்படத்தில் வரிசையாகப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள், அல்லது தற்கொலைசெய்து கொள்கிறார்கள். ஆனால், உயிரும் உணர்வுமாய்க் கண் முன் உலவும் பெண்கள் கொல்லப்படுவது குறித்து ஏற்படாத வலியும் குற்றவுணர்வும் பிறக்காத சிசுவுக்காக மட்டும் நாயகனுக்கு ஏற்படுகிறது. அவள் கருவுறாமல் இருந்தால் அந்தக் கொலை நியாயமா?

ஐயா, நீங்கள் உயிரைக் கொடுத்துப் படமெடுங்கள், வேறு எதையும் கொடுத்துப் படமெடுங்கள். படத்தைப் பார்ப்பவனுக்குப் போய் நாலு பெண்களின் உயிரை வாங்க வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்தாதீர். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு நாட்டில் பஞ்சமா என்ன என்பதுதான் நாம் இறைஞ்சி வைக்கும் வேண்டுகோள்.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு:

deepa.j.joseph@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in