கண்ணியத்தைக் கற்றுத்தருவது யார்?

சி.வெ.கணேசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சி.வெ.கணேசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
Updated on
1 min read

முற்போக்கு குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஊருக்கெல்லாம் பாடம் நடத்தும் கட்சியாகத் தன்னை முன்னிறுத்துகிறது திமுக. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் பொதுவெளியில் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் பலரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் பாலவ நத்தம் கிராமத்தில் தன்னிடம் மனு கொடுத்த பெண்ணை அந்த மனுவாலேயே தலையில் அடித்தார் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அந்த வீடியோ வைரலானதுடன், ‘பொதுமக்களின் குறை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவரே இப்படி நடந்துகொள்ளலாமா?’ என்பது போன்ற எதிர்வினைகளும் எழுந்தன. அம்மாவுக்கு முதியோர் நல நிதி கிடைப்பதற்காகத் தான் மனு கொடுத்ததாகவும் அமைச்சர் தன்னை அடிக்கவில்லை, பாசத்துடன் தட்டிக்கொடுத்ததாகவும் அந்தப் பெண் கூறினார். தானும் அந்தப் பெண்ணும் உறவினர்கள் என்று தன் பங்குக்கு அமைச்சரும் விளக்கம் அளித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, தனியார் பள்ளி வளாகத்தில் மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவியின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், இவரையும் விஞ்சிவிட்டார். மாணவியின் தாயிடம் ஆறுதல் சொல்லும்போது அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மாணவியின் தாயின் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னதுடன் ரகசியம் பேசுவதுபோல் அவரிடம் மிக நெருக்கமான முறையில் நடந்துகொண்டது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் என்றாலும் பொது வெளியில் பெண்களிடம் நடந்து கொள்வதற்கு வரைமுறை உண்டு. ஊடகத்தினரும் பொதுமக்களும் பார்க்கிறார்கள் என்று தெரிந்துமே இந்த இரண்டு அமைச்சர்களும் பெண்ணை அடிப்பதும் நெருங்கி நிற்பதும் நடந்திருக்கிறது. மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களுக்குப் பெண்களை மரியாதையாக நடத்துவது குறித்துப் பக்கம் பக்கமாகக் கருத்து சொல்கிறவர்கள் தங்கள் கட்சி அமைச்சர்களுக்கும் அந்தக் கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in