

பதினைந்து ஆண்டுகளாகத் தென்னிந்தியாவின் மரபுக் கலைகளையும், சமகால திருவிழாக்களையும் தன் கேமராவில் பதிவுசெய்துவருகிறார் ரேகா விஜயசங்கர். தற்போது சென்னை தட்சிண சித்ராவின் ஒளிப்படக் கலைஞராகவும், நூலக உதவியாளராகவும் இருக்கிறார். சிறுவயதிலிருந்தே ஒளிப்படக் கலையின் மீதும் திருவிழாக்கள் மீதும் இருந்த ஆர்வத்தால் சுயமுயற்சியால் ஒளிப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார் இவர். “தட்சிண சித்ராவில் முதலில் நூலக உதவியாளராகத்தான் என் பணிவாழ்க்கையைத் தொடங்கினேன்.
இங்கே தொடர்ந்து நடைபெற்றுவந்த பாரம்பரியமான கலைநிகழ்ச்சிகள் சிறுவயதிலிருந்தே எனக்குள்ளிருந்த ஆர்வத்தை மீண்டும் தூண்டின. எனக்குப் பூர்வீகம் மதுரை என்பதால் சித்திரை திருவிழா, ஒயிலாட்டம் போன்றவற்றைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். அதனால், இந்த மாதிரி கலைகளை ஒளிப்படங்களாகப் பதிவுசெய்ய வாய்ப்புக் கிடைத்தபோது அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்கிறார் இவர்.
ஆரம்பத்தில், சாதாரண கேமராவில்தான் படங்கள் எடுத்திருக்கிறார். ஒளிப்படக் கலையில் இவருக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்த தட்சிண சித்ரா தலைவர் டெபோரா தியாகராஜன், நிர்வாகத்தின் சார்பாகத் தொழில்முறை கேமராவை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு, எந்தவொரு திருவிழாவையும் ரேகாவின் கேமரா தவறவிட்டதில்லை. சென்னை பங்குனி உத்திரத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மயானக் கொள்ளைத் திருவிழா தொடங்கி இருளர் திருவிழாவரை ஊரில் நடக்கும் பெரும்பாலான சமகாலத் திருவிழாக்களை ஒளிப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறார் இவர்.
யார் எங்கே திருவிழா நடக்கிறது என்று சொன்னாலும் உடனே கேமராவைத் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவாராம் இவர். அப்படிதான், திருப்போருரில் நடக்கும் சப்த கன்னிகளின் இருளர் திருவிழாவை ஒளிப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்த மாதிரி, பல முக்கியமான அரிய கிராமத் திருவிழாக்களின் பெரிய ஒளிப்படத் தொகுப்பு இவரிடம் இருக்கிறது.
“ஒவ்வொரு வருடமும் சென்னையின் முக்கியமான திருவிழாக்களுக்கு ஒளிப்படங்கள் எடுக்கத் தவறாமல் சென்றுவிடுவேன். நண்பர்களெல்லாம்கூட ‘போன வருஷம்தான் போய் எடுத்தியே, இந்த வருஷம் மறுபடியும் ஏன் அதே திருவிழாவுக்குப் போகிறாய்?’ என்று கேட்பார்கள். அவர்களிடம், ‘போன வருஷம் எடுக்காத படங்களை இந்த வருஷம் எடுக்கப் போகிறேன்’ என்று சொல்வேன். இந்த வருஷம் அறுபத்து மூவர் திருவிழாவில், கூட்டத்தில் வசமாகச் சிக்கிக்கொண்டேன்.
எப்படி வெளியே வரப்போகிறோம், கேமராவை எப்படிக் காப்பாற்ற போகிறோம் என்று பயந்தேன். நல்லவேளையாக கேமராவைத் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்திருந்தேன். அதனால், கேமரா தப்பித்தது. அதேமாதிரி, ஒருமுறை திருவிழாவைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. ஆனால், நான் சற்று தூரமாக இருந்ததால் சுதாரித்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். படங்கள் எடுக்கும் ஆர்வத்தில் சுற்றி நடப்பதைக் கவனிக்காமல் இருக்கக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி அது.
மண்ணின் மணத்தைப் பேசும் திருவிழாக்கள் மீதும், மரபுக் கலைகள் மீதும் எனக்கிருக்கும் உள்ளார்ந்த ஆர்வம்தான் சவால்களைத் தாண்டி என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் ரேகா.
தட்சிண சித்ராவில் வெளிவரும் பதிப்புகள், இணையதளங்கள் என எல்லாவற்றிலும் இவரது ஒளிப்படங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், இவருக்குக் கோயில் கட்டிடக் கலையிலும் ஆர்வமிருப்பதால், ஒளிப்படங்கள் எடுப்பதற்காகவே இவருடைய கணவருடன் அடிக்கடி கோயில் சுற்றுலாக்களுக்குச் சென்றுவிடுவாராம். “நான் ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கிய புதிதில் என் கணவரும், மாமியாரும் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார்கள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் ஒளிப்படங்கள் எடுக்காமல் வர மாட்டேன். சமீபத்தில், சிதம்பரம் கோயில் சுவரோவியங்களைப் படங்கள் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார் இவர்.
மழை, அய்யனார், ஆடிப் பெருக்குத் திருவிழா, கேரள நாட்டுப்புறக் கலைகள், கூடைகள், வேஷம் போன்ற தலைப்புகளில் இவரது ஒளிப்படக் காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. 2012-ல் ‘ஆர்ட் சென்னை’ நடத்திய ஒளிப்படங்களுக்கான போட்டியில் தேர்வான இவரது ஒளிப்படம் இப்போதும் திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தில் இருக்கிறது. தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள், நிகழ்த்துக் கலைகள், கலைஞர்கள் என இவரிடம் ஒரு பெரிய ஒளிப்படங்களின் தொகுப்பே இருக்கிறது.
“பதினைந்து ஆண்டுகளாக ஒளிப்படங்கள் எடுப்பதால் எந்தவொரு விஷயத்தையும் ஒரு ஃப்ரேமுக்குள் வைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் வந்துவிட்டது. எனக்குப் பிறகும், நான் எடுத்த ஒளிப்படங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறந்த ஆவணத் தொகுப்பாக விளங்கப்போகின்றன என்பது மனநிறைவைத் தருகிறது” என்கிறார் ரேகா.
ரேகா விஜயசங்கர்