சுற்றுலாவைப் பொதுவாக இன்பச் சுற்றுலா என்போம். ஆனால் சுற்றுலா என்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல, அது ஒரு சிறந்த ஆசிரியரும்கூட. பயணங்கள் சொல்லித்தரும் பல அனுபவப் பாடங்கள் நம் வாழ்க்கைக்கு அவசியம். அப்படியொரு அனுபவம் எனக்கும் வாய்த்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. எனது கட்டுரை, மலாயா பல்கலைகழகத்தால் தேர்வு செய்யப்பட்டிருந்ததால் நான் மலேசியா செல்ல நேர்ந்தது. உடன் சில கல்லூரிப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். நான்கு நாட்கள் மாநாடு முடிந்த பிறகு மலேசியாவைச் சுற்றிப் பார்த்தோம். அதன் பிறகு சிங்கப்பூர் சென்றோம். அது தைப்பூசம் நேரம்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் தைப்பூசத்தை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இரவு முழுவதும் பக்தர்கள் சிங்கப்பூரிலுள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அத்தனை பக்தர்கள் சென்றபோதும் அங்கு மிரளவைக்கும் பட்டாசு சத்தம் இல்லை. காதடைக்கும் இசை முழக்கங்கள் இல்லை. ஒரு மெல்லிசை போன்ற அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சென்றனர்.
தெருவோரத்தில் மூன்றிலிருந்து நான்கடி தூரம் தள்ளித் தடுப்பு அமைக்கப் பட்டிருந்தது. அந்த இடை வெளியைத்தான் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் அந்த விதிமுறையை மீறவில்லை. தேவையற்ற குப்பைகளையும் போடவில்லை. காவடிகளிலிருந்து விழுந்த வண்ணத் தாள்கள் போன்றவை மட்டுமே அங்கு சிதறிக் கிடந்தன. பக்தர்களால் தெருவில் பயணிக்கிறவர்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை. விடிய விடிய காவடி எடுத்தார்கள்.
காலையில் அங்கே பக்கத்தில் இருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். அங்கே நான் பார்த்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. தெருவில் கடைசியாக ஒரு சிலர் மட்டும் காவடி தூக்கிச் சென்றுகொண்டிருந்தனர். காவடி தூக்கிச் சென்ற கடைசி பக்தருக்குப் பின்னே வந்த வண்டிகள் அவர் நகர நகர அங்கிருந்த தடுப்பு தகடுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே வந்தன. வண்டியில் இருந்தவர்கள் அங்கிருந்த குப்பைகளை அகற்றிக்கொண்டு வந்தனர்.

நாங்கள் கோயிலிலிருந்து திரும்பியபோது முதல் நாள் மதியம் பார்த்தது போலவே அந்த இடம் மிகத் தூய்மையாக இருந்தது. இரவு முழுவதும் அத்தனை பக்தர்கள் நடந்தற்கான அறிகுறிகள் எதுவும் அங்கு இல்லை. எங்கள் அனைவருக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. இது போல் நமது நாட்டிலும் நடந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பெருமூச்சு விட்டோம்.
- ஸ்ரீதேவி மோகன், சென்னை.