பெண்கள் 360 | விண்வெளித் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு
கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண் வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் பெண் என்கிற பெருமையைப் பெற்றவர் சிரிஷா பந்த்லா. அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘வெர்ஜின் கேலக்டிக்’ அறிமுகப்படுத்திய விண்வெளிச் சுற்றுலாவில் அதன் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன்னுடன் இணைந்து பயணித்து ஓராண்டு ஆன நிலையில் அண்மையில் சிரிஷா இந்தியாவுக்கு வந்தார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் ஐந்து வயது ஆனபோதே அமெரிக்கா சென்றுவிட்டார். விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது இவரது லட்சியமாக இருந்ததில்லை. ஆனால், சிறு வயதில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியதில் இருந்து தனக்கு விண்வெளி மீதான ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிறகு விண்வெளி ஆய்வு தொடர்பான கருத்தரங்கோ கண்காட்சியோ நடைபெற்றால் அவற்றில் தவறாமல் பங்கெடுத்தார்.
தற்போது ‘வெர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தின் அரசு விவகாரம் – ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் இவர், விண்வெளிச் சுற்றுலாவைப் பரவலாக்கும் திட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 90 மணி நேரச் சுற்றுலாப் பயணத்தில் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை விண்ணில் எடையற்ற நிலையை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் பெண்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கத் தயங்கக் கூடாது என்கிறார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்தைக் காணத் தான் ஆவலுடன் காத்திருப்பதாக சிரிஷா பந்த்லா தெரிவித்துள்ளார்.
தாலியைக் கழற்றினால் விவாகரத்து?
விவாகரத்து வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மனைவி தாலியைக் கழற்றுவது கணவனுக்கு உச்சபட்ச மன உளைச்சலைத் தரும்’ என்று உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. உண்மையில் இந்தக் கருத்து 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. தங்கள் கருத்துக்கு வலுச் சேர்க்க அதைத் தற்போதைய வழக்கில் நீதிபதிகள் மேற்கோள் காட்டினார்கள். அதைத் தவறாகப் புரிந்துகொண்ட ஊடகங்கள் தற்போதைய வழக்கில் நீதிமன்றம் இப்படிக் கருத்துச் சொல்லிவிட்டது என்று பரபரப்பைக் கிளப்பிவிட்டார்கள்.
மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தன் மனைவியிடமிருந்து விவாகரத்துக் கோரி தொடர்ந்த தற்போதைய வழக்கிலும் மனைவி தாலியைக் கழற்றிவிட்ட நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தாலியைக் கழற்றுவதாலேயே திருமண உறவு முறிந்துவிட்டது என்று பொருள் அல்ல’ என்றுதான் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ‘ஆனால், இந்த வழக்கில் மனைவி கணவனைச் சந்தேகப்பட்டதோடு அவர் பணியாற்றிய இடத்துக்கே சென்று மாணவர்கள், சக பேராசிரியர்கள் முன்னிலையில் கணவனைத் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார். உடன் பணியாற்றும் பெண் ஊழியர்களோடு தொடர்புபடுத்திப் பேசியதுடன் எந்தப் பெண்ணின் பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகக் காவல் துறையில் புகாரும் அளித்திருக்கிறார். பெண் ஊழியர்களோடு தொலைபேசியில் பேசுவதைக்கூடச் சந்தேகப்பட்டிருக்கிறார். பணிபுரியும் இடத்தில் தன் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் மனைவி நடந்துகொள்வது கணவனுக்கு மன உளைச்சலைத் தரக்கூடும். தவிர, இவர்கள் பிரிந்திருந்த காலத்தில் மனைவி தாலியைக் கழற்றிவிட்டார். சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் 2016இல் தாலி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர்.
‘இப்போது சொன்னால் என்ன, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னால் என்ன? கணவன் உயிரோடு இருக்கை யில் மனைவி தாலியைக் கழற்றுவது கணவனுக்குப் பெரும் மன உளைச்சலைத் தருகிறது என்றால் கணவனே தாலியைப் பறித்துச் சென்று அடகு வைத்துக் குடிப்பது மனைவிக்கு மன மகிழ்ச்சியைத் தந்துவிடுமா?’ என்பது போன்ற விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் காண முடிந்தது. கணவன் – மனைவி உறவு நிலையில் சந்தேகமும் அதைத் தொடர்ந்த உளவியல் சிக்கல்களும் அதிகரித்துவருவதையும் இந்த வழக்கு உணர்த்தியுள்ளது.
பயணங்களில் பாலியல் அச்சுறுத்தல்
பயணத்தின்போது ஓட்டுநர்கள் தங்களிடம் பாலியல் அத்துமீறல், பலாத்காரம், தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டதாகப் பன்னாட்டு டாக்சி சேவை நிறுவனமான ஊபர் (uber) நிறுவனத்துக்கு எதிராக, 550 பெண்கள் சார்பாக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஊபர் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பயணம் பற்றிப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது. உண்மையில் அதை அவர்கள் ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. ஓட்டுநர்களின் பாலியல் அத்துமீறல் குறித்து அந்த நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பிறகும் அவர்களது எதிர்வினை மோசமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் 2019 – 2020-க்கான வாடிக்கையாளர் பாதுகாப்பு அறிக்கையைக் கடந்த மாதம் ஊபர் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வாடிக்கையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது, தவறான நடத்தை உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களின் எண்ணிக்கை 3,824. பயணத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையை வெளியிட்டுவிட்டு, ‘ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால் இருக்கும் வலியும் வேதனையும் எங்களுக்குப் புரிகிறது. அதற்கு ஏற்ப எங்கள் நடவடிக்கை இருக்கும்’ என்று அறிவித்துள்ளது ஊபர். இந்தியாவில் மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும் தனி வாகனங்களிலோ வாடகை வாகனங்களிலோ பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
