

வேலைக்குச் சேர்ந்த புதிதில் உங்களிடம் வேலை கற்றுக்கொண்ட இளைஞன் பின்னொரு கூட்டத்தில் நீங்கள் சொல்லிக் கொடுத்ததையே ‘உங்களுடனான விவாதத்தில் கண்டுபிடித்ததாக’ அனைவர் முன்பும் பேசிக் கைத்தட்டல் வாங்கியிருப்பார்.
நீங்கள் ஒரு பொறியாளர் என்று தெரிந்தும் வீடு கட்டும் பொறியாளர் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டுச் சிரிப்பார்; அதையே உங்கள் கணவர் சொன்னால் உடனே ஏற்றுக்கொண்டிருப்பார்.
அடுப்பங்கரை எந்தப் பக்கம் இருக்கிறதென்றுகூடத் தெரியாத சித்தப்பா, ‘சுவையாக சட்னி அரைப்பது எப்படி’ என்று அரைமணி நேரத்துக்குப் பாடமெடுப்பார்.
குழந்தைகளின் மூக்கைத் துடைக்கக்கூட மனைவியை அழைக்கும் பெரியப்பா, ‘அழும் குழந்தையை எப்படிப் பொறுமையுடன் சமாளிக்க வேண்டும்?’ என்று யோசனைகளை அள்ளி வீசுவார்.
‘கொல்லன் பட்டறையிலேயே ஊசி விக்கிறது’ என்றொரு சொலவடை உண்டல்லவா? அந்தக் கலையில் ஆண்கள் தில்லாலங்கடிகள். காலங் காலமாகச் சத்தமில்லாமல் பெண்களுக்குச் செய்துகொண்டிருப்பதைத்தான் ஆங்கிலத்தில் mansplaining என்கிறார்கள்.
‘புரிய வைக்கும்’ ஆண்கள்
2008இல் ரெபேக்கா என்கிற அமெரிக்க எழுத்தாளர் முதன்முதலில் ஆண்களின் இந்தப் போக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். ஒரு பார்ட்டியில் ரெபேக்காவிடம் பேச்சுகொடுத்த ஆண் ஒருவர், “நீங்க எழுத்தாளராமே? ஒண்ணு, ரெண்டு புத்தகங்கள்கூட வெளியிட்டு இருக்கீங்க போல” என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு எழுதும் அளவுக்குச் சிந்திக்கத் தெரியுமா, அவர்களை எழுத்தாளர்கள் என்று அழைக்கலாமா என்று குழப்பமடையும் ஆண்கள் உலகெங்கிலும் உண்டுபோல.
ரெபேக்கா, “ஆமாம். ஒண்ணு ரெண்டு இல்ல, ஏழு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்” என்கிறார்.
“ஓ, எதைப் பற்றி?”
ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவனிடம் அவனது பாடங்கள் குறித்துக் கேட்கும் தொனியுடன் வினவுகிறார் அந்த ஆண்.
அண்மையில் வெளிவந்த தனது புதிய புத்தகம் குறித்தும் அதன் உட்பொருளான இயந்திரமயமாக்கல் குறித்தும் பேசத் தொடங்குகிறார் ரெபேக்கா.
இடைமறித்த அந்த ஆண், “இந்தப் பொருளில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான நூலை நீங்கள் வாசித்ததுண்டா? நீங்கள் முதலில் அதைப் படிக்க வேண்டும்!” என்று சொல்லி அந்நூலின் பெயரைச் சொல்கிறார்.
ரெபேக்காவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அருகில் நின்று அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரெபேக்காவின் தோழி சொல்கிறார், “நீங்கள் சொல்லும் அந்த நூலை எழுதியவர் ரெபேக்காதான்”.
அந்த ஆணின் முகம் போன போக்கை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். சற்றுத் தள்ளிப் போய் வெடித்துச் சிரிக்கின்றனர் தோழியர் இருவரும். என்னவென்று கேட்டுச் சூழ்ந்துகொண்ட பெண்களிடம் நடந்ததை விவரிக்க, இதேபோல் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.
அவர்கள் பேசப்பேச ரெபேக்காவுக்கு ஒன்று புரிகிறது. இது ஏதோ தனியொருவனின் முட்டாள்தனமான அகந்தை இல்லை. ஆண்கள் பலருக்கும் ‘பெண்ணுக்கு இந்த உலகைப் புரியவைத்துவிடும்’ முனைப்பு இருக்கிறது. ‘அவளுக்கு ஒன்றும் தெரியாது. தான்தான் சொல்லித்தர வேண்டும்’ என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையில் கரிசனமோ உதவும் மனப்பான்மையோ இல்லை. அப்படி இருந்தால் பொதுவெளிகளிலும் அறிவுசார் தளங்களிலும் நாம் புழங்குவதைத் தடுக்க மாட்டார்கள். போராடி அப்படியான இடங்களை நாம் அடைந்துவிட்டாலும், “உன்னைவிட எனக்கு அதிகம் தெரியும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்” என்று தங்களது அகந்தையைத் தட்டிக்கொடுக்கும் போக்குதான் இது என்பதை விளக்கி ‘Men explain things to me’ என்கிற நூலை எழுதுகிறார் ரெபேக்கா.
ஆண்களின் தலையீடு
இந்நூல் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ஆண்களின் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ மனப்பான்மையை ‘mansplaining’ என்று குறிக்கும் வழக்கமும் உருவானது. மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய தவறாகத் தெரியாத இந்த நுட்பமான ஆணாதிக்கப் போக்கைக் கண்டுகொள்ளவும் தவிர்த்திடவும் பெண்கள் பயில்வது அவசியம்.
பணியிடங்கள், பொது இடங்கள் மட்டுமின்றி குடும்பங்களிலும், நமது உடல், தனிப்பட்ட உரிமைகள், பழக்கவழக்கங் களில் ஆண்கள் தலையிட்டுக் கருத்தும் அறிவுரையும் வழங்குகின்றனர். மாதவிடாய்ச் சிரமங்கள் குறித்துகூடச் சரியான புரிதல் இல்லாத ஆண்கள் கருத்தடை குறித்துச் சகட்டுமேனிக்குப் பேசித் தள்ளுகிறார்கள். ஒருமுறை அலுவலக உணவு இடைவேளையில் மாதவிடாய்க் குப்பி குறித்துப் பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன் நற்பயன்களை எடுத்துரைத்தார்கள். அது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சிலர் பயன்படுத்திப் பார்த்துத் தங்களுக்குச் சரிப்பட்டு வரவில்லை என்கிற தனிப்பட்ட கருத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
ஆனால், சிலரது முகமோ வாட்டமடைந்தது. அவர்கள் அதைப் பயன்படுத்த விரும்பினாலும், தங்கள் கணவனது பேச்சைக் கேட்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகச் சொல்ல அதிர்ச்சியானோம். நம் உடல்நலன் சார்ந்த ஒரு சாதனத்தைப் பயன்படுத்துவதில் நம் விருப்பமும் தேர்வும் முக்கியம் என்று அந்தப் பெண்களுக்குப் புரியாதது ஏன்? ஆணுக்குத் தன்னைவிட எல்லாம் தெரியும் என்று மூளையில் பதிந்துபோன எண்ணம்தானே?
பெண்களின் உடல் குறித்தும், வாழ்வு குறித்தும் அறிவியலுக்குப் புறம்பான அச்சங்களை எளிதில் ஆண்கள் விதைத்துச் செல்கிறார்கள். “என் கணவன் சொன்ன மாதிரி…” என்று தொடங்காமல் பேச்சை எடுக்கவே அறியாத பெண்களை அறிவோம். அது எவ்வளவு விபரீதம் என்பதற்கு யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்குப் பிரசவம் பார்க்கலாம் என்று முடிவெடுத்த கணவனே சாட்சி.
பி.கு: Mansplaining என்கிற சொல்லுக்குத் தமிழில் இணையான சொல்லைத் தேடினால் ‘மனிதாபிமானம்’ என்று சொல்கிறது கூகுள். நிச்சயம் இதுவே ஒரு mansplaining தான்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
deepa.j.joseph@gmail.com