

திருமணத்தில் ஆண் - பெண் ஜோடிப் பொருத்தத்தை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது குறித்து ஜூலை 3 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். பெண்ணைவிட அனைத்திலும் ஆண் உயர்ந்து இருக்க வேண்டும் என்பது எதனால் என்று கேட்டிருந்தோம். ஆணாதிக்கச் சமூகம் தன் தேவைக்கென்று ஏற்படுத்திக்கொண்ட நடைமுறைதான் என்று பெரும்பாலோர் சொல்லியிருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
சமூகம் வகுத்துவைத்த விதியை மீறினால் நம்மைக் குற்றவாளியாகப் பார்ப்பார்கள் என்கிற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். சம வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவது அரிதான ஒன்றுதான். நம் வீட்டில் இருந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம். வருங்காலத்தில் சமூகம் தன் பார்வையை மாற்றிக்கொள்ளும்.
- ராஜேஸ்வரி ரிஷிகர், சென்னை.
காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை ‘ஓடிப்போனவள்’ என்று வாழ்நாள் முழுவதும் குத்திக்காட்டக்கூடிய கொடூரமான காட்டுமிராண்டிச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் பலரும் முடிவெடுக்கத் தயங்குகிறார்கள்.
- ம.ராஜா, திருச்சி.
பல நூற்றாண்டுகளாகக் கடத்தப்பட்டு, நம் உள்ளத்தில் உறையவைக்கப்பட்டுள்ள வேண்டாத எண்ணங்களில் ஒன்றுதான் ‘மணமக்களில், பெண் எல்லாவற்றிறும் இளையவளாக இருக்க வேண்டும்’ என்பது. குறிப்பாக வயதில். தன்னைவிட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து, சிறப்பாக வாழ்ந்தவர்களுக்கு இலக்கியங்களிலும் வரலாற்றிலும் பல எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். தி.ஜானகிராமனின் பல புதினங்களில் கதாநாயகியர் பெரும்பாலும் தம் துணையைவிட வயதில் மூத்தவராகவே உள்ளனர். மாமேதை கார்ல் மார்க்ஸ், நான்கு வயது மூத்த ஜென்னியை மணந்து காவிய வாழ்க்கை வாழ்ந்து காட்டவில்லையா? இவர்களையெல்லாம் தூக்கி விழுங்குபவர் டாக்டர்.சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியை முதன்முதலில் தொகுத்தவர். தன்னைவிட 26 வயது மூத்தவரான எலிசபெத் போர்ட்டரை மணந்துகொண்டார். நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் மனைவி ஆன் ஹாத்வே, ஷேக்ஸ்பியரைவிட எட்டு ஆண்டுகள் பெரியவர்! கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்துவ அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸல் ஆகியோர் 5 வயது மூத்த பெண்களைத் திருமணம் செய்தவர்கள்தாம். நேபாள நாட்டின் ‘நேவா’ இன மக்களிடையே இது மிக இயல்பான ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்பு, வயதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
- இளங்கோ கண்ணன், சங்கரன்கோவில்.
திருமண உறவில் இப்படி ஜோடிப் பொருத்தம் பார்க்கும் பழக்கம் இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டுமே உள்ளது. முன்னேறிய பல நாடுகளில் இந்த ‘பத்தாம்பசலித்தனம்’ இல்லை. சங்க காலத்தில் இப்படியான நடைமுறை இருந்ததற்கான குறிப்புகள் இல்லை. மன்னர்கள் காலத்தில்கூட சுயம்வரம் மூலமாகத் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வுசெய்யும் உரிமை அந்தக் காலத்து இளவரசிகளுக்கு இருந்தது. இரண்டு மனங்கள் இணையும்போது அங்கே ஜாதி, மதம், உயரம், நிறம், வர்க்கம், வயது என்பதெல்லாம் காணாமல் போய்விடும். பெண்களைத் தாழ்வாக வைத்திருக்க நினைக்கிற ஆணாதிக்கவாதிகளே இந்த மரபுகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். மனசுப் பொருத்தம் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உடல் தகுதியை ஆய்வுசெய்து ‘மருத்துவச் சான்று’ பெற்றுகூடத் திருமணம் முடிக்கலாம்.
- பொன். கருணாநிதி, கோட்டூர்.