

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளில் 900 குழந்தைகளைக் காப்பாற்றி யிருக்கிறார். இந்தியாவில் சட்டப்படி குழந்தைத் திருமணத்தை முதல் முறை ரத்துசெய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்காக மறுவாழ்வு மையத்தை நடத்திவருகிறார். சிறந்த பேச்சாளராகவும் மன நல ஆலோசகராகவும் செயல்பட்டுவருகிறார் 29 வயது கீர்த்தி பார்தி.
தொடரும் அவலம்
பெண்கள் குறித்துப் பிற்போக்கு கருத்துகளும் செயல்பாடுகளும் அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். ஒரு வயதுப் பெண் குழந்தைக்கும் ஐந்து வயதுச் சிறுவனுக்கும் திருமணம், 15 வயதுப் பெண்ணுக்கும் 40 வயது ஆணுக்கும் திருமணம் போன்றவை எல்லாம் இங்கே இன்றும் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தைகளையும் பெண்களையும் பாதிக்கும் விஷயங்களை அவ்வளவு தீவிரமாக இந்தியாவில் கருத்தில் கொள்வதில்லை.
இச்சூழலில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதிலும் இந்திய அளவில் முதன்மையான செயல்பாட்டாளராக இருக்கிறார் கீர்த்தி.
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைக் கண்டுபிடிப்பதே கடினமான காரியம். இன்று எதிர்ப்பு அதிகம் இருப்பதால், மிக ரகசியமாகவே திருமணங்களை நடத்துகிறார்கள். குழந்தைகளின் நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என்று யார் மூலமாவது விஷயம் தெரிந்தால், உடனே கிளம்பிவிடுகிறார் கீர்த்தி. அவர் நடத்தி வரும் சாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் சிலரும் செல்வதுண்டு. சமீப காலமாகக் கீர்த்திக்குக் கொலை மிரட்டல்கள் அதிகம் வருவதால், பெரும்பாலும் தனியாகவே செல்கிறார்.
திருமணத்தைத் தடுக்கிறார். சட்ட பூர்வமாக வழக்கு தொடுக்கிறார். ஏற்கெனவே திருமணமான குழந்தைகளையும் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களையும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துவருகிறார். தங்குவதற்கு இடம், உணவு, கல்வி அளித்து பாதுகாக்கிறார். 18 வயது ஆன பிறகு அவர்களுக்குத் தொழில் பயிற்சி அளித்து, தொழில் தொடங்குவதற்கான அத்தனை உதவிகளையும் செய்து, சொந்தக் காலில் நிற்க உதவுகிறார்.
“குழந்தைத் திருமணத்தின் மூலம் பெண் குழந்தைகள் சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல் என்று வீட்டு வேலை செய்பவர்களாக மாறிப் போகிறார்கள். ஆண் குழந்தைகளோ தங்கள் மனைவியைக் காப்பாற்றுவதற்காகச் சிறிய வயதிலேயே வேலை செய்து, சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். மிக இளம் வயதிலேயே பாலியல் வன்முறையிலும் இறங்கிவிடுகிறார்கள்.
குழந்தைத் திருமணங்களில் ஆண், பெண் இருபாலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையையும் காப்பாற்றி, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம். குழந்தைகளின் பெற்றோராவது கொஞ்சம் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் ரத்த உறவுகள்தான் இதுபோன்ற திருமணங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்’’ என்கிறார் கீர்த்தி.
அச்சுறுத்தலை மீறிய சேவை
அச்சுறுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் போன்றவற்றை எல்லாம் சமாளித்து, துணிச்சலுடன் போராடி வருவதற்கு என்ன காரணம்?
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் கீர்த்தியும் ஒருவர். மருத்துவரான அப்பா, கீர்த்திக்கு இரண்டு வயதானபோது தனியே சென்றுவிட்டார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்த கீர்த்திக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து அவர் பிழைத்துக்கொண்டாலும் அவரது மனமோ, உடலோ இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. இதனால் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
6 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை மீட்டுக்கொண்ட கீர்த்தி, தன் திருமணத்தையும் தடுத்து, படிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் தான் பாதிக்கப்பட்டதுபோல இன்னொரு குழந்தை பாதிக்கப்படக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். தன்னுடைய எண்ணத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.
நான்கே ஆண்டுகளில் 900 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறார் கீர்த்தி. 27 குழந்தைத் திருமணங்களைச் சட்டப்படி ரத்து செய்திருக்கிறார். உளவியலில் முனைவர் பட்டம் பெற்று, இன்று உளவியல் ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார். குழந்தைகள், பெண்கள் உரிமைகள் பற்றியும் குழந்தைத் திருமணத்தின் அபாயம் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் பேசிவருகிறார்.
வேகமாகக் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து வருவதற்காகவும் குழந்தைத் திருமணத்தைச் சட்டப்படி ரத்து செய்த முதல் மனிதர் என்பதற்காகவும் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் கீர்த்தி.
“பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கதையும் வித்தியாசமானது. திரைப்படங்களில் வருவதுபோல, ஹீரோயிசத்தைக் காட்டிதான் குழந்தைகளை மீட்டு வருகிறோம். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க போலீஸை நாடுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் குடும்பங்களுக்குச் சாதகமாகத்தான் செயல்படுகிறார்கள். ஒருவேளை நடவடிக்கை எடுத்தாலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் மீண்டும் திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.
நாங்கள் தடுக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறோம். வீட்டில் வசிக்க முடியாத சூழல் உள்ள குழந்தைகளை எங்கள் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து வருகிறோம். எங்கள் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் குடும்பங்கள், அரசியல்வாதிகள், சாதி பஞ்சாயத்துகள் என்று எல்லோரின் எதிர்ப்பையும் சமாளித்துதான் இந்த வேலைகளைச் செய்துவருகிறேன்.
எந்த ஆபத்தும் என்னைச் சார்ந்தவர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக நான் தனியாகவே மீட்பு நடவடிக்கைகளில் இறங்குகிறேன். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்க்கை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டால் தவிர, இந்தக் கொடுமைகளில் இருந்து விடுதலை கிடைக்காது. அதற்குத் தொடர்ந்து போராட வேண்டும்’’ என்கிறார் கீர்த்தி.