

குப்ரா செய்த் ‘ரெடி’, ‘சுல்தான்’, ‘கல்லிபாய்’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். 2018இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘சேக்ரட் கேம்ஸ்’ வலைத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்தத் தொடரில் அவர் திருநங்கையாக நடித்திருந்தார்.
தற்போது குப்ரா செய்த்தின் சுயசரிதை, ‘ஓபன் புக்: நாட் கொய்ட் அ மெமாய்ர்’ (Open Book: Not Quite a Memoir) வெளியாகியுள்ளது. பொதுவாகப் பிரபலங்களின் சுயசரிதை அலங்கரிக்கப்பட்ட பொய்களாலும் பாதி உண்மைகளாலும் நிரம்பியிருப்பதாக விமர்சிக்கப்படும். ஆனால், குப்ராவின் சுயசரிதை சில இடங்களில் படிப்பவரைக் குற்றவுணர்வுள்ளாக்கும் அளவுக்கு நேர்மையாக இருப்பதாக நூல் குறித்து எழுதப்பட்டுள்ள மதிப்புரைகள் கூறுகின்றன.
சிறுவயதில் தன் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் குப்ரா. தனக்கு நடந்த பாலியல் சித்திரவதையை வெளியே சொல்வதற்குத் தன் அம்மாவிடமிருந்தே எதிர்ப்பைச் சந்தித்தாகச் சுயசரிதை குறித்த உரையாடல் ஒன்றில் கூறியிருக்கிறார். பெண்கள் தமக்கு நிகழ்ந்த பாலியல் சித்திரவதையை வெளியே சொல்ல அஞ்சுவது தவறுசெய்யும் ஆண்களை ஊக்கப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சித்திரவதைத் தன் வாழ்க்கை என்னும் புத்தகத்தில் ஓர் அத்தியாயம்தான் என்றும் அதுவே புத்தகமாக மாறத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். ‘சிறுவயதில் நிகழும் பாலியல் சித்திரவதையால் ஏற்படும் மன உளைச்சல் பலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடும். ஆனால், அது ஒருவரது ஆளுமையைச் சிதைத்து, வளர்ச்சியைத் தடுப்பதாக மாறவிட வேண்டிய தில்லை’ என்னும் நம்பிக்கையை இந்த அணுகுமுறையின் மூலம் குப்ரா செய்த் விதைத்திருக்கிறார்.
கேள்விக்குள்ளாக்கும் புத்தகம்
பாலியல் அத்துமீறல் குறித்து மட்டுமல்லாமல் தனக்கு நேர்ந்த விரும்பத்தகாத கருத்தரிப்பு குறித்தும் அதைக் கலைத்தது குறித்தும் செய்த் எழுதியிருப்பதே அவரது சுயசரிதைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடாகவும் தாராளவாதம் உள்ளிட்ட நவீன மதிப்பீடுகளின் தொட்டிலாகவும் கருதப்படும் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை உறுதிசெய்த தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது. கருக்கலைப்பை அனுமதிப்பது அல்லது மறுப்பது குறித்து மாகாண அரசுகள் முடிவெடுக்க அந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியப் பெண் பிரபலம் ஒருவர், தான் கருக்கலைப்பு செய்துகொண்ட சூழலைத் துணிச்சலுடன் பொதுவெளியில் முன்வைத்திருக்கிறார்.
இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களும் இல்லற வாழ்வில் ஏற்கெனவே ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்வது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால், திருமணமாகாத பெண் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபடுவதும் அதனால் கருத்தரிப்பதும் அந்தக் கருவைக் கலைப்பதும் ஒழுக்கக்கேடான செயலாகவே பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. இவற்றைச் செய்யும் பெண்கள் நடத்தை கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பிரபலங்கள் என்றால் சமூக வலைத்தளங்களில் அவர்கள் மீது வசைமழை பொழியும். ஆனால், இதைப் பற்றி எல்லாம் குப்ரா செய்த் கவலைப்படவில்லை. 2013இல் நண்பர் ஒருவருடன் விருப்பத்துடன் பாலியல் உறவுகொண்டதையும் அதனால் உண்டான கருவைக் கலைத்ததையும் பதிவுசெய்துள்ளார். மேலும், தான் அப்போது கருவைச் சுமப்பதற்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் தயாராக இல்லை என்பதால்தான் அந்தக் கருவைக் கலைத்ததாகவும் நூலில் கூறியுள்ளார். கருக்கலைப்பு செய்துகொண்டது குறித்த வருத்தமோ குற்றவுணர்வோ தனக்கு எப்போதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
பெண்ணின் உரிமை
தற்போது 39 வயதாகும் குப்ரா செய்த் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போதும் தான் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு 30 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சமூக அழுத்தங்களையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
கருவைச் சுமப்பது அல்லது கலைப்பது குறித்துச் சுயமாக முடிவெடுப்பதும், திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் உறவு வைத்துக்கொள்வதும் நம் சமூகத்தில் மிக இழிவான குற்றங்களாகவே கருதப்படுகின்றன. அதே நேரம் குடும்பத்துக்குள், உறவு வட்டத்துக்குள் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறலைப் பொறுத்துக்கொள்ளவும் கடந்து செல்லவுமே பெண்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மனைவி மீது கணவன் நிகழ்த்தும் பாலியல் அத்துமீறல் சட்டப்படி குற்றமாக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் குப்ரா செய்த் தன்னுடைய சுயசரிதையில் பேசியிருக்கும் விஷயங்கள் முக்கியமான விவாதங்களைத் தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.