

அண்மையில் சமூக வலைத்தளங்களில், ‘என்ன குழம்பு வைக்கலாம்?’ என்று ஆளாளுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நகைச்சுவை காணொளி வைரலானது. நிதர்சனம் என்னவென்றால் அந்த நகைச்சுவைக் காட்சியில் வருவதைப் போல இந்தக் குழப்பத்தில் பெரும்பாலும் குடும்ப நபர்கள் அனைவரும் பங்குகொள்வதில்லை. பெண்கள் மட்டும்தான் மண்டையை உடைத்துக்கொள்வார்கள்.
“நான் சூப்பரா பிரியாணி செய்வேன். என் மனைவிக்கு நான் வைக்கிற மீன் குழம்புதான் பிடிக்கும்!” என்று ஆண்களும் பெருமையுடன் சொல்லத் தொடங்கிவிட்ட காலம்தான் இது. சமையல் செய்து படங்கள் பகிரும் ஆண்களுக்குச் சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் தனி மவுசு இருப்பதும் முக்கியக் காரணம்.
ஆனால், சமையல் என்பது ஏதோ அடுப்பை மூட்டிச் சுவையான உணவைத் தயாரித்துப் படமெடுத்துப் பதிவேற்றிய கையோடு முடிந்துவிடுவதல்ல. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வேளையும் திட்டமிடுவது, சமையலுக்கு வேண்டிய மளிகை, காய்கறிகளை வாங்கிச் சேமிப்பது, தீர்ந்துபோனால் அதை நினைவில் குறித்து வாங்கிவைப்பது, அதிக விலை கொடுக்காமல் சிக்கனமாக எங்கே, எப்படிப் பொருட்களை வாங்கலாம் என்று சிந்திப்பது, செலவு கைமீறிப் போகாமல் சமாளிப்பது, பற்றாக்குறையாகவும் இருந்துவிடாமல் வீணாகியும் விடாமல் அளவாகச் சமைப்பது, மீதமான உணவுப் பொருட்களைப் பத்திரப்படுத்துவது, குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கெனத் தனியாக உணவு தயாரிப்பது, மாவு, பொடிகள் அரைத்து வைத்துக்கொள்வது, பால், தயிர் கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்வது இப்படி சமையல் என்ற வேலையின் பல அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பாலை ஃப்ரிட்ஜில் வைக்க மறந்து நள்ளிரவில் எழுந்து ஓடும் பெண்களும், இட்லி மாவு அரைக்கத் தவறிவிட்டுப் பின்பு குற்றவுணர்வில் அவதிப்படும் பெண்களும் வீட்டுக்கு வீடு உண்டு.
ஓய்வில்லாத வீட்டு வேலைகள்
சமையல் பொறுப்பின் அடிப்படைப் பட்டியலே இவ்வளவு நீளம். இன்னும் அவரவர் வழக்கப்படி பண்டிகை, பாரம்பரியம் என்று மேலதிகப் பொறுப்பு களும் சேர்ந்துகொள்ளும். ‘சும்மாதாங்க இருக்கேன்’ என்று இல்லத்தரசிகள் சொல்வதை மறுத்து, அவர்களின் வேலைப்பளுவை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறோம். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு வீட்டுப் பொறுப்புகளில் சொல்லிக்கொள்ளும்படியான விதிவிலக்கு ஏதும் இல்லை. ஆண்கள் அவர்களுக்கு ‘உதவ’ வேண்டும் என்பதுதான் அதிகபட்ச விதியாக இருக்கிறது. அத்திபூத்தாற்போல் கணவன் ஒரு டீ போட்டுத் தருவதற்குப் பெண்கள் நெக்குருகுவதாகத் தான் விளம்பரங்கள்கூட வருகின்றன. உதவி என்று சொல்லும்போதே அதில் ‘அது என் பொறுப்பு அல்ல’ என்கிற மறைமுகமான அறிவிப்பு தொக்கி நிற்கிறது.
“என்னைக் கேட்டா செய்திருப்பேனே”, “நீ சொல்லவே இல்லையே?”, “நீயே இவ்வளவு கஷ்டப் படணுமா?” என்றெல்லாம் வாயளவில் பெருந்தன்மை காண்பிப்பது ஆண்களுக்குப் பிடித்தமானது. ஆனால், வேலைகளைச் செய்வதன் மூலம் ஏற்படும் உடல் அசதியைக் காட்டிலும் அப்பொறுப்புகளை மனத்தில் சுமப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்துப் பெண்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை. கலாச்சாரம் என்றும், ‘பொம்பளைங்க சமாச்சாரம்’ என்றும் நாம் ஒதுக்கி வைக்கும் பொறுப்பு களை ஆங்கிலத்தில் ‘mental load’ என்கிறார்கள். தினசரி கண்ணுக்குத் தெரியாத ஓராயிரம் வீட்டுப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களுக்கு உடலிலும் மனத்திலும் உண்டாகும் பாதிப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மூளையைக் குடையும் சிந்தனை
குழந்தைகளுக்குப் பள்ளியில் ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பா? பெரியவர்களுக்கு அடுத்த மெடிக்கல் செக்-அப் எப்போது? குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுக்கும் நாளா? கணவன் முடி வெட்டிக்கொண்டு நாளாகிறதே, நினைவூட்ட வேண்டுமே! அவனது சாக்ஸ் எங்கே? காய்ந்த துணிமணிகள் மடிக்காமல் கிடக்கின்றனவே, இந்த வெள்ளைச் சீருடையில் கறை போகவில்லையே, எப்படிச் சரிசெய்வது? கோதுமை மாவு தீர்ந்துவிட்டதா? இரவு சப்பாத்தி செய்வதற்குள் வாங்கிவைக்க வேண்டுமே! மகள் பள்ளி விட்டு ஏன் இன்னும் வரவில்லை?
இப்படி ஆணின் கருத்துக்குச் சிறிதும் எட்டாத ஓராயிரம் நச்சுப்பிடித்த ஆனால், தேவையான சிந்தனை களை நாள்தோறும், கணந்தோறும் பெண்கள் மனத்தில் சுமந்து முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். இவற்றுக்கு எந்தவிதமான அளவு கோலும் இல்லை, அங்கீகாரமும் இல்லை. ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தில் உறங்கும்போதும் நாயகிக்கு மூடிய கண்களுக்குள் சமையலறையும் குப்பைத் தொட்டியுமே தென்படு வதாக ஒரு காட்சி வரும். சமையலோடு வீட்டுப் பொறுப்புகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் சொல் லாமல் சுமக்கும் மனச்சுமையைப் புரிந்துகொள்ளலாம்.
இவையெல்லாம் பெண்களின் கடமையாகவும் ஏதாவது பிசகிவிட்டால் அது பெண்களின் தவறாகவும் அலட்சியமாகவும் கருதப்படும் என்றுஅவர்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைக்கப்பட்ட அச்சம்தான் இதற்கு முக்கியக் காரணம். குடும்பம் மட்டு மன்றி ஊடகங்களும், பெண்களுக்கான வீட்டு வேலை அழுத்தத்தை நுட்பமாக அதிகரித்தபடியே இருக்கின்றன. இன்னும் சமையல் பொருட்கள் முதல் கழிவறை சுத்தம் செய்யும் பொருள்வரை பெண்கள் பயன்படுத்துவது போலத்தானே விளம்பரங்கள் வருகின்றன. ஆண்கள் சமைப்பதையும் டீ போடு வதையும் வீட்டைச் சுத்தம் செய்வதையும் இயல்பாக்க வேண்டும். குழந்தை களை மிகவும் கவரும் விளம்பர ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
சமையலறை என்பது ஆண்மையை உறிஞ்சிவிடும் கூடாரங்கள் அல்ல. வீட்டுப் பொறுப்புகளில் பாலின பேதம் என்பது தேவையில்லை என்கிற உண்மை யைச் சிறுவயது முதலே மகன்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. வீட்டு வேலைகள் செய்யவும் சமையலில் உதவவும் மகள்களைவிட மகன்களைப் பழக்கத் தொடங்குவது நல்ல தொடக்கமாக இருக்கும்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com