

விளையாட்டுத் துறையில் வீரர்களுக்கு இணையான ஊதியம் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்கிற குறை தொடர்கிறது. குறிப்பாகக் கோடிகளைக் குவிக்கும் கிரிக்கெட்டில் இந்தப் பாகுபாடு அதிகம். இந்தப் பாகுபாட்டைக் களையும் முதல் முயற்சியாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்திருக்கும் முன்னெடுப்பு, கிரிக்கெட் உலகின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.
நியூசிலாந்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சமமான ஊதியம் வழங்க வகைசெய்யும் ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் சங்கம், வீரர் - வீராங்கனை சங்கங்களோடு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன்படி நியூசிலாந்து வீரர்கள், வீராங்கனைகள் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது ஒரே மாதிரியான ஊதியத்தை இனிப் பெறுவார்கள். அதைவிட முக்கியமான விஷயம், சர்வதேசப் போட்டிகளில் மட்டும் அல்லாமல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடும் இரு பாலருக்கும் இணையான ஊதியம் வழங்கப்பட உள்ளது.
உலக அளவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டி ருக்கும் இந்த வேளையில் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை வீராங்கனைகளுக்குப் புதிய வாசலைத் திறந்திருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த வழிகாட்டுதல் மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கும் நிச்சயம் வழிகாட்டுதலாக அமையும். அதுவும் மகளிர் கிரிக் கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற கிரிக்கெட் சங்கங்களுக்கு இது ஓர் அழுத்தமாகவும் அமையும்.
மாற்றத்துக்கு வித்திடுமா இந்தியா?
கொட்டும் பண மழையால் இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட்டையே ஆண்டுகொண்டிருக்கிறது. ஆனால் வீரர், வீராங்கனை களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கும் ஊதியம் மலைக்கும் மடுவுக்கான வித்தியாசம் கொண்டது. இந்தியாவில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடியும் ‘ஏ’ பிரிவில் ரூ.5 கோடியும் வழங்கப் படுகிறது. ஆனால், மகளிர் கிரிக்கெட்டிலோ ‘ஏ’ பிரிவில் இடம் பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம்தான் வழங்கப்படுகிறது. ‘பி’ பிரிவில் ரூ.30 லட்சம், ‘சி’ பிரிவில் ரூ.10 லட்சம் என்கிற அளவில்தான் வழங்கப்படுகிறது.
உலக கிரிக்கெட்டில் பாலினச் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஊதியப் பாகுபாட்டை நியூசிலாந்து வாரியம் களைந்துள்ள நிலையில், அது இந்திய கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கலாம். எதிர்காலத்தில் இந்திய இளம் பெண்களை கிரிக்கெட்டை நோக்கி அதிக அளவில் நகர்த்தும் முயற்சி யாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள்- வீராங்கனைகள் இடையே உள்ள ஊதியப் பாகுபாட்டில் இடைவெளியைக் குறைக்கும் என்று நம்புவோம்.