

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் பெண்களுக்கென்று தனியாகச் சில சலுகைகள் வழங்கப்போவதாகப் பல கட்சிகள் உறுதியளித்துள்ளன. அவை அனைத்தும் பொது மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளனவா? வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்டோம்.
விஜயலட்சுமி, சமூக ஆர்வலர்:
பெண்களுக்கு அவர்கள் பிறப்பு முதல் பிரசவ காலம்வரை பல்வேறு நலத்திட்டங்கள் இருக்கு. இரு சக்கர வாகனங்கள் குறைந்த விலையில் கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனா அது ஆண் பெண் சமநிலைக்குத் தீர்வாகுமா? பாலின வேறுபாட்டை அது முழுமையா நீக்காது. என்னைக் கவர்ந்த ஒரு திட்டம் மதுவிலக்கு. அது மறைமுகமா பெண்களுக்கு பக்கபலமா இருக்கும். பாலியல் வன்கொடுமைக்குக் கடந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி யிருந்தாலும் அவை சரியான முறையில் அமல்படுத்தப்படவில்லை.
திவ்யா, தனியார் துறை ஊழியர்:
பணியில் இருக்கும் பெண்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் இருந்தாலும் அது எல்லாமே அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்குத்தான் பயன்படுது. தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அது சாதகமா இல்லை. இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கு. பிரிவு மற்றும் வருமான அடிப்படையிலதான் இந்தச் சலுகைகள் எல்லாம் வழங்கப்படுது. பெண்களுக்காக ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீடு இன்னும் முழுமையா அமல்படுத்தப்படவில்லை.
ஸ்ரீமதி, இல்லத்தரசி:
மதுவிலக்கு ஒரு வகையில் பெண்களுக்குச் சாதகமா இருக்கும். குடிப் பழக்கத்தால அழிஞ்சு போன குடும்பங்கள் நிறைய இருக்கு. ஆனா பெண்களின் வளர்ச்சிக்காக எந்தவொரு கட்சியும் திருப்தி அளிக்கக்கூடிய அறிகைகளை வெளியிடலை. பெண்கள் சுய தொழில் ஆரம்பிக்கக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கலாம். பிரசவ கால விடுப்பு நீட்டிக்கப்பட்டிருக்கு. அது உபயோகமா இருக்கும். ஆனா அது மட்டுமில்லாம பெண்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளை மேம்படுத்தணும்.
தாரிணி, கல்லூரி மாணவி:
பெரும்பாலும் ஏற்கனவே இருந்த திட்டங்களைத்தான் பல கட்சிகளும் திரும்ப சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் முதல் பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு என்பது பெண் பட்டதாரிகளுக்கு நல்ல திட்டம். ஆனா கல்லூரி மாணவிகளுக்கு சரியான திட்டங்கள் இல்ல. தினசரி பயணங்களின்போது பெண்கள் பல தொந்தரவுகளைச் சந்திக்கறாங்க. ஏற்கனவே பெண்கள் பாதுகாப்புக்குப் பல திட்டங்கள் இருந்தாலும் இன்னும் பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.