ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்: மாவோயிஸ்ட் மண்ணில் அமைதி மலரட்டும்...

ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்: மாவோயிஸ்ட் மண்ணில் அமைதி மலரட்டும்...
Updated on
2 min read

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

சத்தீஸ்கர் மாநிலப் பயணத்தின் தொடர்ச்சி...

இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் சித்ராகூட் அருவி இந்த வனப்பகுதியில்தான் இருக்கிறது. இந்திராவதி, நர்மதா ஆகிய இரு ஆறுகளும் விந்திய மலைகளில் பாய்ந்து 100 அடி உயரத்தில் இருந்து அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றன. இந்துக்களின் புனிதத் தலமான சித்ராகூட் அருவி பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதன் அருகில் உள்ள கம்பீரமான பஸ்தார் கோட்டை, இயற்கை எழில் கொஞ்சும் இந்திராவதி பூங்கா, இங்குள்ள சோழர்கள் காலத்துக் கோயில்களைக் காண்பதற்காக உலகின் பல திசைகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வணங்க வேண்டிய பஸ்தார்

பஸ்தாரின் உயிரோட்டமாகப் பாயும் இந்திராவதி ஆற்றைத் தொட்டுக்கொண்டு தண்டேவாடா நோக்கி என்.ஹெச். 5. சாலையில் பயணித்தேன். செல்போன் சிக்னல் இல்லாத காடுகள் நிறைந்த இங்கு 15 கிமீ தூரத்துக்கு ஒரு ராணுவ செக் போஸ்ட் இருக்கிறது. என்னை ஆச்சர்யமாகப் பார்த்த ராணுவத்தினர், ‘எங்கும் வண்டியை நிற்க வைக்காதீங்க. ஃபோட்டோ எடுக்கக் கூடாது. யாரிடமும் பேசக் கூடாது. ஆபத்தான பகுதி, பார்த்துப் போங்க’ என எச்சரித்து அனுப்பினர். 10 கிமீ தூரம் பயணித்தபோது தேசிய நெடுஞ்சாலை காணாமல் போய்விட்டது. தூரத்தில் ஒரு நொறுங்கிய பாலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஆள் அரவமற்ற சாலையில் வழி சொல்லக்கூட யாருமில்லை. வேறு திசையில் சிறிது தூரம் சென்ற போது ஒரு புதரின் பின்பக்கத்தில் மூன்று இளைஞர்கள் கையில் அம்புகளுடன் ஏதோ கடுமையாக விவாதித்துக்கொண்டிருந்தனர். ஒருவித பயத்தோடு அந்த இளைஞர்களிடம் வழிகேட்டபோது, “அக்கா, உங்களுக்கு வழி சொன்னால் புரியாது. என்னை ஃபாலோ பண்ணுங்க” என்று சொன்ன ஒரு இளைஞர், சைக்கிளை வேகமாக மிதிக்கத் தொடங்கினார். சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை. குண்டும் குழியுமான சாலையில் சுமார் 25 கிமீ தூரம் சைக்கிளை எங்கும் நிறுத்தாமல் வியர்வை கொட்டக் கொட்ட அந்த இளைஞர் மிதித்துக்கொண்டே இருந்தார்.

தண்டேவாடா செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு, “இப்படிப் போங்க அக்கா” என அந்த இளைஞர் சொன்னபோது என் கண்களில் கண்ணீர் கொட்டியது. ஆபத்தான வனத்தில் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு உதவி செய்யவும் ஒரு மனம் வேண்டுமே! என் சக இந்தியனை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

என்னை கர்வப்பட வைத்த இளைஞரின் பெயர் நர்ஸிங் நாக். பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மாவோயிஸ்ட் ஆதரவாளர். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “பஸ்தாரில் நான்கில் மூன்று பங்கு ஆதிவாசிகளாக நிறைந்திருக்கின்றனர். மலையையும், வனத்தையும், ஆற்றையும் பாதுகாக்க வில் அம்புகளுடன் வலம் வருகிறார்கள். கோண்டுகள் என அழைக்கப்படும் இவர்களுக்கென்று த‌னித்துவமான மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு நடைமுறைகள் இருக்கிறது.

இங்குள்ள ப‌ழங்குடிகளில் வயது வந்த ஆணும், பெண்ணும் முழுச் சுதந்திரத்துடன் தங்களுக்குப் பிடித்த துணையுடன் ஒரு குடிசையில் வசிக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களுக்குள் சரிப்பட்டுவந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். இல்லாவிட்டால் பிரிந்து போகலாம்.

சில பழங்குடியினரிடம் திருமணத்தின்போது மணப்பெண்ணின் குடும்பத்துக்கு மணமகன் ‘வரதட்சணைப் பணம்’ கொடுக்க வேண்டும். வரதட்சணை கொடுக்காத ஆண்கள், மணப்பெண்ணின் வீட்டிலிருந்து கொண்டு, அவர்களது குடும்பத்தைக் கவனித்துகொள்ள வேண்டும். மேலும் திருமணத்துக்கான ஆண்களைப் பெண்களே தேர்வு செய்வார்கள். பெண்களைக் கட்டாயப்படுத்தி யாரும் திருமணம் செய்துவைக்க முடியாது. ஆண்கள் மறுமணம் செய்ய விரும்பினால் கணவனை இழந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என நர்ஸிங் நாக் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

அமைதி நிலைக்கட்டும்

எனதருமைச் சகோதரனிடம் பிரியாவிடை பெற்று, தண்டுலா ஏரியைக் கடந்து, புரு நகரை நோக்கிப் பறந்தேன். அங்கிருந்து சுக்மா, துர்க், காங்கேர் என சிவப்புப் பிரதேசத்தில் முழுவதும் சுற்றினேன். மாவோயிஸ்ட்கள் நிறைந்த மண்ணில் எவ்வித அச்சமும் இல்லாமல் பயணித்தேன். ஆனால் அப்பாவி மக்களிடம் ஒருவித பயத்தையும், பதற்றத்தையும் பார்க்க முடிகிறது. பழங்குடிகள் தங்க‌ளின் வளம் கொள்ளை போவதை எதிர்க்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் வேட்டையை வேண்டாம் என்கிறார்கள். பழங்குடியினரை மாவோயிஸ்ட் என்ற பெயரில் சித்ரவதை செய்ய வேண்டாம் என்கிறார்கள். போராளிகள் மக்களை உளவாளிகள் என சந்தேகித்துக் கொல்ல வேண்டாம் என்கிறார்கள்.

மாறாக‌ அமைதி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், விழிப்புணர்வு வேண்டும் என்கிறார்கள். நிலம், நீர், வளம் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார்கள். சத்தீஸ்கரைக் கடந்து அடுத்த மாநிலத்துக்குள் நுழையும் தருணத்தில் நர்ஸிங் நாக்கிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது அவர்களது கோபம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது அவர்களது கசப்பு’ - இவை புரட்சிகரக் கவிஞர் கோரக் பாண்டேவின் கவிதை வரிகள். உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் அக்கா. நல்ல மனிதர்கள் வடிவில் கடவுள் உங்களோடு இருக்கிறார் அக்கா!

(பயணம் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in