

பெண்கள் இன்று கால் பதிக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர். ஆனால், அத்தகைய மாற்றமும் முன்னேற்றமும் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் நடக்கிறதா என்பது கேள்விக்குறி. படித்த, சமூக அடுக்கின் மேல் தட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமே சிலநேரம் வாய்ப்புகளின் வாசல் திறக்கிறது. பொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமப்புற பெண்களுக்கும் வாய்ப்புகள் பரவலாக்கப்படும் போதுதான் அனைத்துத் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று சொல்ல முடியும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பழனியப்பனூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த எம். இளையராணி (34) என்பவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியில் அமர்த்தப்பட்டதைக் கொண்டாடலாம்.
இளையராணியின் தந்தை முனியப்பன் சேலம் மாவட்டம் மெய்யனூர் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போவில் முதுநிலைப் பயணச்சீட்டுப் பரிசோதகராகப் பணிபுரிந்துவந்தார். 2010ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று அவர் உயிரிழந்தார். “தந்தையின் வாரிசு வேலை என் தம்பிக்கு வந்தது. அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டதால் அந்தப் பணிக்கு நான் விண்ணப்பித்தேன். அண்மையில் வாரிசு அடிப்படையில் பத்துப் பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், இதர பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பணிமனையில் அரசு நகர விரைவுப் பேருந்தில் (ராசிபுரம் - சேலம்: பேருந்து எண் 52) நடத்துநராக நியமிக்கப்பட்டேன்” என்கிறார் இளையராணி. இந்தத் தடத்தில் நடத்துநராகப் பணியமர்த்தப்பட்டிருக்கும் முதல் பெண் இவர்.
இளையராணி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருடைய கணவர் குமார் தனியார் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுடைய இரண்டு மகன்கள் பள்ளிக் கல்வியை முடித்து மேற்படிப்பு படித்துவருகின்றனர்.
பரவலாக்க வேண்டும்
பேருந்து நடத்துநராக இருப்பது எப்படி இருக்கிறது என்று கேட்டால் மகிழ்ச்சியோடு சிரிக்கிறார் இளையராணி. “காலை 5 மணி முதல் பணி நேரம் முடியும்வரை தொடர்ச்சியாகப் பேருந்துக்குள் அங்கும் இங்கும் நடந்தபடி பயணச்சீட்டை வழங்குவது, பேருந்து நிறுத்தங் களில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது என என் வேலை சுறுசுறுப்பாக உள்ளது. எந்தத் துறையானாலும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.
பத்துப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டதில் நான் மட்டும்தான் பெண் நடத்துநர். இப்பணிக்காக ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகிவிட்டதால் ஆர்வத்துடன் பணியாற்றிவருகிறேன். சக பணியாளர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருகின்றனர். விருப்பப்பட்டுத்தான் இந்த வேலையைச் செய்துவருகிறேன்” என்கிறார்.
பொதுவாகப் பெருநகரங்களில் மட்டுமே பேருந்து ஓட்டுநர்களாகவும் நடத்துநர்களாகவும் பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். விகிதாச்சார அடிப்படையில் அவர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறபோதும் அவை மாற்றத்தின் வெளிப்பாடு என்பது மறுப்பதற்கில்லை. தற்போது நாமக்கல்லில் பெண் ஒருவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியமர்த்தப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக் கிறது. பேருந்தை இயக்குவதும், பயணச் சீட்டு வழங்குவதும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலையல்ல என்பதைச் சிறு நகர, கிராமப்புற மக்கள் புரிந்துகொள்ளவும் இதுபோன்ற பணி வாய்ப்புகள் உதவும். பெண்களை அரசுப் பேருந்துகளில் பணி அமர்த்துவதைப் பரவலாக்குவது குறித்து அரசு திட்டமிடலாம்.