

‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ…. உன்னிடம் இருக்கிறது!’
-காதல் என்று வரும்போது தனக்குப் பிடித்தவரைத் தனித்துவப்படுத்திப் பாராட்டுவது இருபாலருக்கும் இயல்பு. ஆனால், பொதுவாகவே “நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை!” என்று ஓர் ஆண் குறிப்பிடுவதைப் பெண்கள் உயரிய பாராட்டாக ஏற்கும் நிலை எப்படி உருவானது?
நமது குடும்ப அமைப்பே ஆண்களின் பாராட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் பெண்கள் குடுமிப்பிடி சண்டையிடுவதற்கு ஏதுவாகத்தான் அமைந்திருக்கிறது. எந்தச் சூழலையும் சமாளித்து வாழவும் தன்னினம் செழிக்கவும் ஆணைவிடப் பெண்ணினம் காலமெல்லாம் போராடிவருவதால்தான் மனித இனமே பிழைத்துக் கிடக்கிறது என்று சொல்லலாம்.
அம்மா சமையல் மீதான பற்று, அக்கா தங்கை பாசம் என்பதெல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வாக இருந்தாலும், இதில் ஆண்களுக்கு இருப்பது மட்டும் விசேஷமாகக் கொண்டாடப்படக் காரணம் பெண்களுக்குள் பொறாமைத் தீ கனன்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நம் குடும்ப அமைப்பின் வழக்கப்படி திருமணத்துக்குப் பிறகு மனைவிதான் இடம்பெயர வேண்டும். அப்படி இடம் பெயர்க்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே இருக்கக்கூடிய தனிமை உணர்வு, பாது காப்பின்மை, அதன் காரணமாகத் தோன்றும் எதிர்மறை எண்ணங்களுடன், ‘ஆணைப் பெற்றுவிட்ட’ சாதனையைப் புரிந்தவர்களின் ஆதிக்கமும் சேரும்போது பெண்களின் மனநிலை சற்றே ஆட்டம்காணக்கூடும்.
ஆளுக்கு ஒரு பாராட்டு
திருமணமான பெண்கள் தங்கள் பணியிடங் களைவிட அதிகமான மன அழுத்தத்தைக் குடும்பத்துக்குள்தான் எதிர்கொள்கிறார்கள். பாலைவனத்தில் கசியும் லேசான ஈரம்போல் அங்கே ஆண்களின் பாராட்டு வார்த்தைகள் மட்டுமே பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிடுகின்றன.
“என்ன இருந்தாலும் எங்கம்மா சமையல் மாதிரி இல்ல” என்று கணவன் சொல்லும் போது முகம் வாடிப்போகும் மருமகள், “இத்தனை நாளைல இன்னிக்குத்தான் நல்லா சாப்பிட்ட மாதிரி இருக்கு!” என்று மாமனார் புகழும்போது உச்சி குளிர்ந்து போவதும், அதைக் கேட்டு அது நாள் வரை இயந்திரம் போல் உழைத்துக் கொட்டிய மாமியாருக்குத் தலையில் தீ வைத்ததுபோல் இருப்பதும் இயல்புதானே. பற்றி எரியும் பொறாமைத் தீயில் ஆண்கள் குளிர்காயத் தொடங்கும்போது ஆணாதிக்கம் முழு வெற்றியடைந்து விடுகிறது. குடும்பங்களில் மட்டுமல்ல பொதுவெளிகளிலும் பணியிடங் களிலும்கூட ஆண்களிடம் இயல்பாக இருக்கும் குழு மனப்பான்மை பெண்களிடம் இருக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
அடிப்படையில் ஆண்களையே சார்ந்து வாழும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்ப தால் மிகவும் நட்பாக இருக்கும் பெண் களிடையேகூட ஆண்கள் எளிதில் பாது காப்பின்மையைத் தூண்டிவிட முடிகிறது. பெண்களுக்கு இடையே தேவையற்ற உறவுத் திணிப்பையும் எதிர்பார்ப்புகளையும்கூட இந்தச் சமூகம் உருவாக்குகிறது.
புதிதாகத் திருமணமான பெண் ஒருத்தி கணவனுடன் தன் தோழி வீட்டுக்கு விருந்துக்குச் சென்றாளாம். தோழிகள் இருவரும் கலகலப்பாக அரட்டையடிக்க கணவன்மார் இருவரும் டிவியில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட் மேட்சில் ஒன்றிப்போயினர். அவ்வப்போது செயற்கை யாய்ப் புன்னகைத்துக் கொண்டதோடு சரி. “எவ்ளோ நேரம்... இன்னொரு முறை உன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் என்னைக் கூப்பிடாதே” என்று வீடு திரும்பியதும் கடுகடுத்தானாம் புது மாப்பிள்ளை.
அடுத்த வாரம் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றபோது ஆண்கள் இருவரும் வரவேற்பறையில் கொட்டமடிக்க, முன்பின் அறியாத போதும் இரு பெண்களும் சேர்ந்து அடுக்களையில் புழுங்கியபடியே சமைக்க நேர்ந்ததாம். ஆனாலும் முகமலர்ச்சி யோடு “அக்காவும் நானும் ரொம்ப நெருக்க மாகிட்டோம்” என்பதைத் தாண்டி வேறெதுவும் அவள் சொல்லி இருக்க முடியாது.
கேலி பேசும் நவயுகப் பெண்கள்
புகுந்த வீட்டு மனிதர்களை மட்டுமல்ல; கணவனின் நட்புகளையும்கூடப் பெண் தனதாக வரித்துக்கொண்டு தனது சொந்த நட்புகளையும் உறவுகளையும் முறித்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாகிறாள்.
இப்படியொடு குடும்பச் சூழலில் வாழும் பெண்கள் மனதளவில் தனித்தனி தீவுகளாகிவிடுகிறார்கள். அவர்களின் அகவுலகில் பிற பெண்கள் மீதான நம்பிக்கையையும் அன்பையும்விடத் தான் சார்ந்திருக்கும் ஆண் மீதான குருட்டு நம்பிக்கை மட்டுமே நிலைபெற்றுவிடுகிறது. ‘ஆம்படையான் அடிச்சது வருத்தமில்லே, அடுத்த வீட்டுக்காரி சிரிச்சதுதான் வருத்தம்’ என்கிற சொலவடையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
ஆணின் அடக்குமுறையை இயல்பான ஒன்றாக, மாற்ற முடியாத விதியாக ஏற்கப் பழகிய பெண்களுக்குச் சக பெண்களே எதிரியாக நிறுத்தப்படுகிறார்கள். அதனால் தான் பிற பெண்களைவிடத் தான் தனித்துவமானவள், தான் உயர்ந்தவள் என்கிற எண்ணம், அதுவும் சுயமாக அன்றி ஆண்களின் அங்கீகாரத்துக்காகவே தேவைப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் இக்காலப் பெண்கள் இப்போக்கினை அடித்து நொறுக்குவதைக் காண முடிகிறது. ஆணாதிக்கத்தையும் ஆண்களின் பலவீனங்களையும் எள்ளலும் கேலியுமாய்த் தோலுரிக்கும் பெண்களை வயது வரம்பின்றி பலரும் கொண்டாடும் ஆரோக்கியமான போக்கு உருவாகிவருகிறது. இந்த நிலை நீடித்தால் “நீ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல தெரியுமா?” என்கிற ‘புகழுரைகளுக்கு’ மயங்காமல் “பொண்ணுங்க நாங்க எல்லாரும் இப்படித்தான் இருப்போம்” என்று தலை நிமிர்த்தி ஒருசேரப் பெருமை கொள்ளலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com