

நம் ஊரில் திருமணத்துக்கு மனப் பொருத்தத்தைவிட மற்ற பொருத்தங் களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம். சாதி, அந்தஸ்து, வரதட்சிணை போன்றவை விவாதிக்கப்பட வேண்டிய பெரும் பிரச்சினைகள் என்பதால் அவற்றை விட்டுவிடுவோம். ஆண் - பெண் ஜோடிப் பொருத்தத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். ‘சிவப்பான, உயரமான, ஒல்லியான...’ என்று நீளும் வரன் தேடும் பட்டியலில் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி வைத்ததுபோல் ஒரே மாதிரி இருக்கும்.
எல்லாவிதத்திலும் ஆணைவிடப் பெண் ஒரு படி தாழ்ந்து இருக்க வேண்டும். தோற்றம் மட்டும் விதிவிலக்கு. ஆண் நம் மண்ணின் நிறத்தில் இருந்தாலும் பெண் மட்டும் சிவப்பாக இருக்க வேண்டும். மற்றபடி வயது, உயரம், படிப்பு, வேலை, வருமானம் என்று சகலத்திலும் ஆணின் கைதான் ஓங்கியிருக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் ‘Content ka keeda’ யூடியூப் அலைவரிசை வெளியிட்ட ‘Love Knows No Age’ குறும்படம் முக்கியமான கேள்வியை நம்முன் வைக்கிறது. ராணுவ வீரரின் மனைவி ஜியா. திருமணமான இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்துவிட 15 ஆண்டுகளாக அவரது நினைவிலேயே வாழ்கிறார். ஜியாவின் மாமியார் அவரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார். அதற்கு அவசியமே இல்லை என்று ஜியா மறுக்கிறார். அவரது வீட்டுக்கு அருகில் குடிவருகிறான் வீர். வீருக்கும் திருமணம், காதல் குறித்துப் பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனால், ஜியாவைச் சந்தித்ததும் வீரின் மனம் அவர் பக்கம் சாய்கிறது.
சமூகம் அனுமதிக்குமா?
சில நாள்கள் பழக்கத்தில் வீர், ஜியா இருவருக்கும் இடையே புரிதல் உண்டாகிறது. தன் விருப் பத்தை ஜியாவிடம் சொல்ல, தன்னை விட இளையவனான வீரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார் ஜியா. இது குறித்துத் தன் தோழியிடம் ஜியா பேச, வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார் தோழி. “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ருன் தன்னைவிட 24 வயது மூத்த பெண்ணான, அவருடைய ஆசிரியரையே மணந்து கொள்ளவில்லையா?” எனக் கேட்கிறார் ஜியாவின் தோழி. அதேநேரம், “அமெரிக்க நடிகர் ஜார்ஜ் குளூனி தன்னைவிட 17 வயது இளையவரை மணந்ததை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதுவே பெண் தன்னைவிட வயதில் இளையவரைத் திருமணம் செய்துகொண்டால் ஏன் பதற்றப்படுகிறோம்” என்கிறான் வீர்.
“சமூகம் இப்படி எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும்; அதனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நமக்காக வாழ்வோம்” என்று வீர் சொல்ல, “இந்தச் சமூகத்தில் அது அவ்வளவு எளிதா?” என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் ஜியா, “இது நம்மைப் புரிந்துகொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது” என்று முடிக்கிறார்.
இதுதான் யதார்த்தம். எப்போதோ, யாராலோ, எதற்காகவோ எழுதப்பட்ட விதி இது. ஆண்டாண்டு காலமாக இதைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பதில் பெருமிதப்பட்டுக்கொள்கிறோமே தவிர திருமணம் என்று வந்துவிட்டால் ஏன் அனைத்திலும் ஆணின் கைதான் ஓங்கியிருக்க வேண்டும் என்பது குறித்து நம்மிடம் சிறு முனகல்கூட இல்லை. ‘பெண்கள் சிறு வயதிலேயே மனப்பக்குவமடைந்து விடுவார்கள்; ஆண்கள் தாமதமாகத்தான் பக்குவமடைவார்கள். பெண்ணைவிட ஆணின் வயது அதிகமாக இருப்பதுதான் சரி’ என்று உப்புசப்பில்லாத காரணத்தைத் தூக்கிக்கொண்டு சிலர் வரக்கூடும். உண்மையில் இந்தப் பக்குவம் என்பது தனிநபர் தொடர்புடையதுதானே. அதை எப்படிப் பொதுமைப்படுத்த முடியும்?
பூமி சுழல்வது நின்றுவிடுமா?
தன்னைவிட உயரமான பெண்ணை மணந்துகொண்ட ஆணை கேலி பேசிச் சிரிப்போமே தவிர அதில் என்ன தவறு, அவர்கள் வாழ்க்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. அதேபோலத்தான் உடல் பருமன் குறித்த நம் விமர்சனக் குப்பையும். ஆணைவிடப் பெண் சற்றே பருமனாக இருந்துவிடக் கூடாது. திருமண பந்தியில் இனிப்பைச் சுவைப்பதற்கு முன் மணமக்களின் பொருத்தத்தைத்தான் காதுக்கு விருந்தாக்கி மகிழ்வோம். மணமகள் ஒல்லியாக இருந்தால் அதற்கும் பாடல் கைவசம் வைத்திருப்போம்.
ஆண் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதுவே பெண் நிறைய படித்தால் அதைவிட அதிகமாகப் படித்த மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்று அதற்கும் முட்டுக்கட்டை போடுவோம். நம்மைப் பொறுத்தவரையில் பெண்கள், கணவனைவிட அதிகமாகச் சம்பாதிக்கக் கூடாது. மற்றபடி பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பெரிய மனது வைத்து ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். வேலைக்குச் செல்லும் மனைவி ஏதாவது பேசினால் ‘சம்பாதிக்கும் திமிர்’ என்று ஒரு பக்கம் கருத்துச் சொல்லிக்கொண்டே, மனைவியை விடக் குறைவாகச் சம்பாதிக்கும் ஆணைப் பார்த்து, ‘பொண்டாட்டி சம்பளத்துல வாழுறவன்தானே நீ’ என்று கொளுத்திப் போடுவோம்.
இப்படி நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லிச் சொல்லியே அடுத்தவரையும் வாழ விடுவதில்லை, அடுத்தவருக்குப் பயந்து நாமும் முடிவெடுக்க முற்படுவதில்லை. மணமக்களின் ஜோடிப் பொருத்தம் குறித்து நாம் வைத்திருக்கும் இந்த விதிமுறைகள்தாம் காதலிலும் கறாராக எதிரொலிக்கின்றன. குடும்ப வன்முறை, குடும்பங்களில் நடக்கும் உழைப்புச் சுரண்டல், ஆணாதிக்கம் இதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத நாம்தான் மணமகன் – மணமகள் பொருத்தம் குறித்து யாரும் கேட்காமலேயே கருத்துச் சொல்கிறோம். தன்னைவிட வயதில் மூத்த, உயரமான, பருமனான, அதிகமாகச் சம்பாதிக்கிற பெண்ணை ஒருவர் மணந்துகொள்வதால் இந்தப் பூமி தன் அச்சில் இருந்து விலகிவிடாது. எந்த மாற்றமும் இன்றி சுழன்றபடிதான் இருக்கும். அதனால், நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்.