

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் மகன் குறித்த விவகாரம், பால் புதுமையருக்கான மாதமாகக் கொண்டாடப்படும் ஜூன் மாதத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனரும் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கின் மகன் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க். சேவியரின் அம்மா ஜஸ்டைன் வில்சனுக்கும் எலான் மஸ்க்குக்கும் 2008இல் விவாகரத்து ஆகிவிட்டது.
ஏற்கெனவே தன்னைத் திருநங்கையாக அறிவித்த சேவியர் தனக்கு 18 வயது நிறைவடைந்ததையொட்டி மனு ஒன்றைக் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்திருக்கிறார். அதில் தன் பாலினத்தை ஆண் என்பதிலிருது பெண் என்று மாற்ற வேண்டும் என்றும் அனைத்து ஆவணங்களிலும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என்று குறிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தன் தந்தை எலான் மஸ்க்குடன் தான் வசிக்கப்போவதில்லை என்றும் அவருக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கும்படியும் விவியன் ஜென்னா வில்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படாத நிலையில் விவியன் அளித்த மனு ட்விட்டரில் வெளியாகியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாகவும் பிறகு அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாகவும் எலான் மஸ்க் மே மாதம் அறிவித்தார். அதைத் தொடர்ந்துதான் அவருடைய மகனின் இந்த மனு விவகாரம் டிவிட்டரில் பரப்பப்பட்டுவருகிறது.