

பேரக் குழந்தை பெற்றுத் தரவில்லை என்று தங்கள் மகன் மீது ஆறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு(!) கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் உத்தராகண்டைச் சேர்ந்த தம்பதி.
காரணம்? “வாழ்நாள் சேமிப்பை யெல்லாம் கொட்டி எங்கள் மகனை அமெரிக்காவில் படிக்கவைத்தோம். பேரக் குழந்தைகளுடன் எங்கள் வயதான காலத்தைக் கழிக்கலாம் என்று நம்பித்தான் திருமணம் நடத்தி வைத்தோம். கார் வாங்கிக் கொடுத்தோம். ஹனிமூன் செலவை ஏற்றோம். ஆனால், ஆறு ஆண்டுகளாகியும் எங்கள் ஆசையை மகனும் மகளும் நிறைவேற்றவில்லை. நாங்கள் செலவழித்த தொகைக்கு ஈடாகப் பேரக் குழந்தை கிடைக்கவில்லை” என்று சொல்லியிருக்கின்றனர்.
இத்தம்பதியின் செயலை இணை யத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தி ருந்தார்கள். திருமணமான பிள்ளைகளின் வாழ்வில் ஓரளவுக்குத்தான் பெற்றோர் தலையிடலாம் என்பது பரவலான கருத்து. ஆனால், எந்த அளவுக்கு? ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர். ராதா சொல்வது போல், “கல்யாணம் எதுக்குப் பண்றோம்கிறதே நம் நாட்டுல யாருக்கும் தெரியறதில்லை” என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
“என் கண்ணு மூடறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம்…”
“நான் போய்ச் சேர்றதுக்குள்ள என் கையில ஒரு பேரக் குழந்தை”
இப்படி நம் குடும்பங்களில் பெரியவர்கள் சொல்லும் ‘சென்டிமென்ட்’ காரணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மேலை நாடுகளில் திருமண நிகழ்வுகளில், “என்ன லைன் கிளியரா, அடுத்தது உனக்கு எப்போ?” என்று கேட்டு எரிச்சலூட்டும் பெரியவர்களைத் துக்க வீட்டில் கண்டால் இதேபோல் திருப்பிக் கேட்டு மெர்சலாக்கிவிடுவார்கள் இளைஞர்கள்.
அந்த வகையில் அமெரிக்கப் பத்திரி கைகள் இவ்வழக்கு குறித்து நக்கலும் நையாண்டியுமாகக் கேட்டபோது இத்தம்பதியின் வழக்கறிஞர் பெருமை யுடன் கூறியிருக்கிறார்.
“இது இந்தியப் பெற்றோருக்கே உரிய உணர்வு. அது மதிக்கப்பட வேண்டும்”
விலங்குகளின் தாய்மை
குழந்தைகள் மீதான அன்பு, பொறுப்பு என்பது இந்தியர்களுக்கு மட்டும் உரிய உணர்வல்ல. அது உலகம் முழுவதும் மனிதர்களுக்குப் பொதுவானது. இன்னும் சொல்லப் போனால் சில விலங்கினங் களுக்கு உள்ள தாய்மை உணர்வும் அக்கறையும் மனிதர்களையே விஞ்சக் கூடியவை. பென்குயின் இனத்தில் ஆண் முட்டையை அடைகாக்கப் பெண் தன்னுயிரைப் பணயம் வைத்து இரைதேடப் போவதை அறிந்திருப்போம். ஆனால், மனிதர்களைப் போல் அவை எதிர்பார்ப்புடன் அன்பு செலுத்துவ தில்லை. காதலே இல்லாமல் குடும்ப அழுத்தங் களுக்காக மட்டுமே திருமணம் செய்து வாழும் இந்தியக் குடும்பங்களில் மட்டுமே, “நான் கஷ்டப்பட்டு என் புள்ளையைப் படிக்க வெச்சேன்; ஆனால், இப்போ அவன் என்னைக் கண்டுக்கறதே இல்ல” என்பது போன்ற புலம்பல்களைக் காண முடியும்.
பெற்றோரின் தலையீடு
மகன், மகள் என்பதைத் தாண்டி, பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோரின் தலையீடு தேவைக்கும் அதிகமாய் இருப்பதாலேயே பல பிரச்சினைகள் பூதாகாரமாகி நிற்கின்றன. உத்தராகண்ட் தம்பதி சற்றுத் தீவிரமான முயற்சியில் இறங்கியதால் அது அபத்தம் என்று சாடப்படுகிறது. ஆனால், இந்தச் சமூக அழுத்தம் காரணமாக தெருவுக்குத் தெரு பெருகி இருக்கும் குழந்தையின்மை சிகிச்சை மையங்களிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களிலும் வரிசையில் நிற்கும் கலாச்சாரம் இங்குப் பரவலாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீராத மன அழுத்தத்துக்கு ஆளான மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும் மருத்துவரான அவரது கணவரே பல்வேறு கொடுமைகளுக்கு மனைவியை உட்படுத்தியதும் பரவலாகப் பேசப்பட்டது. குழந்தைப் பேறு என்பது ஒரு தம்பதியின் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மகப்பேறு சாத்தியமாகும் வரை ஏக்கமும் ஆசையும் இருப்பதும் இயல்புதான். ஆனால், அதை ஒரு பெருங்குறையாக, தீராத வலியாக, அவமானமாக உணர்வதற்குச் சமூகம் கொடுக்கும் அழுத்தங்களே காரணம்.
பெண்ணின் உரிமை
திருமணமாகிச் சரியாகப் பத்து மாதங்கள் முடியும் முன்பு ஊரும் உறவும் “என்ன விசேஷம் ஒண்ணுமில்லியா” என்று தொடங்கிவிடுவார்கள். “உங்ககூடக் கல்யாணம் ஆச்சே, அவங்க குழந்தை இப்போ ஸ்கூல் போகுது”, “ஊர்ல எல்லாரும் பேரப்பிள்ளைகளோட விளையாடுறாங்க, எங்களுக்கு மட்டும் ஆசையிருக்காதா” என்று ஏங்கும் பெற்றோர் மீது, அவர்கள் அறியாமையைக் கண்டு பரிதாபத்தைவிடக் கோபமே மேலோங்குகிறது. குழந்தை வேண்டும் என்று விரும்புவதோ, வேண்டாம் என்று இருப்பதோ ஒரு தம்பதியின் விருப்பம். சரியாகச் சொன்னால் பெண்களின் உரிமையும்கூட.
ஒரு பெண்ணின் உடலும் கருப்பையும் முழுக்க முழுக்க அவளுக்கு உரிமை யானது. அதில் எப்போது குழந்தையைச் சுமக்க வேண்டும் என்பது அவளுடைய உடல்நலம் தாண்டி மனநலம் சம்பந்தப் பட்டது. குழந்தை வளர்ப்பு என்பது பத்து மாதங்கள் தாயின் வயிற்றிலும், அடுத்து ஓரிரு ஆண்டுகள் தொட்டிலிலும், மடியிலும் வளர்வதோடு முடிந்துவிடுவதில்லை. அது வாழ்நாள் பொறுப்பல்லவா? குழந்தை வேண்டும் என்று விரும்பும் ஆணுக்கு அதற்கான தகுதியை ஒரு பெண்ணிடம் அடைய வேண்டிய தார்மிகக் கடமை உண்டு. அதற்கு அன்பு, பொறுப்பு, பெண்ணைச் சமமாக உணரும் அறிவு இதெல்லாம் அவசியம்.
ஆனால், ஆணாதிக்கம் கோலோச்சும் சமூகத்தில் அப்படியான எந்த நெறிகளை யும் நாம் ஆணிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆண்மை, பெண்மை, தாய்மை எல்லாமே ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதில்தான் அடங்கி இருக்கிறது என்பது போன்ற கற்பிதங்களையும் நாம் களைய வேண்டியிருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com