

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஹிருணிகா பிரேமசந்திர. இலங்கையின் முன்னாள் நாடாளுமனற உறுப்பினரான இவர் தற்போது ஐக்கிய மக்கள் கட்சியின் (SJB) உறுப்பினராக இருக்கிறார். இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கொழும்புவில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன் கட்சி உறுப்பினர்களோடு ஜூன் 22 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பிரதமரைச் சந்தித்து கடிதம் ஒன்றைத் தர வேண்டும் என்கிற அவரது கோரிக்கையைக் காவல்துறையினர் நிராகரிக்க, தடுப்பை மீறி வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரைக் காவலர்கள் தடுக்க எதிர்பாராதவிதமாக ஹிருணிகாவின் ஆடை விலகியது. அந்த ஒளிப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர் ஹிருணிகாவை மோசமாக விமர்சித்து எழுதினர். அவர்களின் கீழ்த்தரமான செயலுக்குத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார் ஹிருணிகா.
‘என் மார்பகங்கள் குறித்துப் பெருமிதப்படுகிறேன். மூன்று குழந்தைகளுக்கு அந்த மார்பில்தான் பாலூட்டினேன். அவர்களைப் போஷித்து, வளர்த்து என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். ஆர்ப்பாட்டத்தின்போது காவலர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆடை விலகியபோது தென்பட்ட என் மார்கபங்கள் குறித்து கேலி பேசுகிறவர்களும் குழந்தைப் பருவத்தில் அவர்களின் அம்மாவின் மார்பில் பால் அருந்தியிருப்பார்கள். நீங்கள் என் மார்பகங்கள் குறித்துப் பேசிச் சிரித்து, மீம்கள் வெளியிடுகிறபோது இந்தத் தேசத்தின் குடிமகன் ஒருவன் இறந்திருப்பான்...’ என்று எழுதியுள்ளார்.
ஹிருணிகாவின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்து எழுதியவர்கள்கூட இந்த விஷயத்தில் ஹிருணிகாவின் பக்கமே நின்றனர். இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ஹிருணிகாவின் ஒளிப்படங்களை வெளியிட்டு அநாகரிகமாகக் கருத்து தெரிவிப்பது தவறு என்றும் நாகரிமடைந்த சமுதாயம் தாய்மையை அவமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.