முகங்கள் | ஏன் என்று கேட்டதால் வென்றவர்

முகங்கள் | ஏன் என்று கேட்டதால் வென்றவர்
Updated on
3 min read

வயதில் மூத்தவர்களுக்கு எளிய உணவும் இளையோருக்குச் சத்தான உணவும்தானே தர வேண்டும்? பிறகு ஏன் அப்பாவுக்குத் தயிரும் எங்களுக்கு மோரும் தருகிறார் அம்மா? – சிறுமியாக இருந்த ஸ்ரீலக் ஷ்மி எழுப்பிய இதுபோன்ற கேள்விகள் தன் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமையக்கூடும் என்று அந்த வயதில் அவர் நினைத்திருக்க மாட்டார்.

தற்போது 76 வயதாகும் ஸ்ரீலக் ஷ்மியும் அதை ஆமோதிக்கிறார். “வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதுதான் என்னை உயர்த்துவதோடு உயிர்ப்போடும் வைத்திருக்கிறது” என்கிற ஸ்ரீலக் ஷ்மி, ஊட்டச்சத்து பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் ஊட்டச் சத்துப் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் இவரது புத்த கங்கள்தாம் பெரும்பாலும் கற்பிக்கப்படுகின்றன.

கல்வியே சொத்து

சென்னையில் ஒன்பது குழந்தைகள் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் ஐந்தாம் குழந்தையாகப் பிறந்தார் ஸ்ரீலக் ஷ்மி. கல்வியும் அதன் பலனாகக் கிடைத்த தன்னம்பிக்கையும்தான் இவருக்குப் பெற்றோரிடமிருந்து கிடைத்த பெரும் சொத்து. வீட்டில் உடன்பிறந்தவர்கள் மருத்துவமும் தொழில்நுட்பமும் படிக்க, லக் ஷ்மிக்கு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைக்கவில்லை. அப்பா சொன்னபடி நியூட்ரி ஷியன் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1960களில் அப்படியொரு படிப்பு இருப்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், தேர்ந்தெடுத்த துறையில் கவனத்துடன் படித்தார்.

முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கே திரும்பிய திசையெல்லாம் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களுமாக இருந்தனர். துடிப்புள்ள இளம்பெண்ணான ஸ்ரீலக் ஷ்மிக்கு வழக்கமான ஆய்வுகளில் இருந்து விலகிப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுமாம். அங்கு பணிபுரிந்த காலத்தில் இந்திய வானொலிக்கு ஊட்டச்சத்து குறித்த கட்டுரைகளை எளிய மொழியில் எழுதினார். அது பரவலான பாராட்டைப் பெற்றது.

திருமணத்துக்குப் பிறகு கணவரின் வேலை காரணமாக மும்பை சென்றார். 15 ஆண்டுகள் கழித்து சென்னை திரும்பிய பிறகு ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். ஸ்ரீலக் ஷ்மி கல்லூரியில் படித்த காலத்தில் ஊட்டச்சத்து பயில்கிறவர்களுக்குக் குறிப்பிடும்படி புத்தகங்கள் இல்லாத நிலையில் வெளிநாட்டு புத்தகங்களை அடிப் படையாகக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டன. அவர் பேராசியராகப் பணியாற்றியபோதும் அந்த நடைமுறை மாறவில்லை. “30 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பழைய பாடத்திட்டங்கள், புத்தகங்கள். இதனால், மாணவியரின் பெரும்பான்மை நேரம் குறிப்பெடுப்பதிலேயே கழிந்தது. வெளிநாட்டுப் புத்தகங்களில் அந்த நாட்டு உணவு வகைகளையும் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் பற்றி இருக்கும். இங்கே இட்லியும் தோசையும் சாப்பிடுகிற வர்கள் பீட்சா, பர்கர் குறித்துப் படிப்பதால் என்ன பலன்?”என்று கேட்கும் ஸ்ரீலக் ஷ்மி அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்ததும் ஒரு கேள்வியால்தான்.

பதிப்பாளர் கிடைத்தார்

அன்று வகுப்பு முடிந்து வெளியே சென்றவர், தன் மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட்டுகளைப் பார்த்தார். சீரான வரிசையில் ஒரு நோட்டு மட்டும் துருத்திக்கொண்டு தனியாகத் தெரிந்தது. “அது என்ன என்கிற ஆர்வத்தில் மீண்டும் வகுப்பறைக்குள் வந்து அந்த நோட்டை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு புத்தகம். ‘நியூ ஏஜ் பப்ளிகேஷன்’ என்கிற பதிப்பாளரின் பெயரைப் பார்த்ததும் மூளைக்குள் மின்னல். ஊட்டச்சத்து பயிலும் மாணவர்களுக்கு இந்திய முறையிலான புத்தகத்தை எழுத நினைத்திருந்தேன். பதிப்பாளர் களை எப்படி அணுகுவது என்று தெரியாத நிலையில் அந்தப் பெயர் எனக்கு வழிகாட்டியதைப் போல இருந்தது. உடனே நான் எழுதிய குறிப்புகளை அந்த நிறுவனத்துக்கு அனுப்பினேன்” என்கிறார் ஸ்ரீலக் ஷ்மி. ஆறு மாதம் வரைக்கும் பதிப்பாளரிடமிருந்து பதில் வரவில்லை. “என்ன காரணம் எனத் தெரிந்து கொள்ள அவர்களை அழைத்தேன். அவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளும் வழிதெரியாமல் தேடிக்கொண்டிருந்தனர். பிறகு என் புத்தகங்களை அவர்கள் வெளியிட்டனர். என் புத்தகங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கருத்துகள். எதுவும் என் எழுத்துப் பயணத்தைத் தடைசெய்யவில்லை. அடுத்தடுத்த பதிப்புகளில் சிலவற்றைச் சேர்த்து, நீக்கி எனக் காலத்துக்குத் தகுந்த மாற்றங்களோடு வெளியிடுகிறேன்” என்று புன்னகைக்கிறார்.

“மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே கற்க ஏராளமாக இருக்கிறது. நான் பல கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் பங்கேற்று இருக்கிறேன். பேசி முடித்த பிறகு ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்டால் ஒன்றிரண்டு கைகள்கூட உயர்வதில்லை. கேள்வி இல்லை என்பது பொருள் அல்ல. அவர் களுக்குக் கேட்கத் தெரியவில்லை. அதனால், கேள்வி கேட்கிற மாணவர்களுக்கு நான் பணப்பரிசு தருவேன்” என்று சிரிக்கிறார் ஸ்ரீலக் ஷ்மி.

பிறந்தநாள் பழம்

நம் இன்றைய வாழ்க்கை முறையும் உணவு முறையும் சரியல்ல என்று சொல்லும் அவர், “பேக்கரி உணவைச் சாப்பிடக் கூடாது. பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதற்குப் பதிலாகத் தர்பூசணியையோ முலாம் பழத்தையோ துண்டுகளாக்கிச் சாப்பிடலாமே. முதலில் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும். பிறகு பழகிவிடும். தினமும் கொஞ்சம் சோறு, இரண்டு காய்கறிகள், சிறிது கீரை கட்டாயம் வேண்டும். ஏதோ வொரு வடிவத்தில் கறிவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்ஸ், பரோட்டா போன்றவை போல லேயர் லேயராக இருக்கும் எதுவும் உடம்புக்கு ஆகாது. வேலைக்கும் பள்ளிக்கும் வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துச் செல்லுங்கள். இன்றைய இளைஞர்கள் பலர் இரவு முழுக்க மொபைல் பார்த்தபடி உடலுக்கும் கண்களுக்கும் ஓய்வு தராமல் உடலைப் பாடாய்ப்படுத்துகிறார்கள். சரிவிகித உணவு, நல்ல தூக்கம், உடற்பயிற்சி, மன அமைதி இவை இருந்தாலே போதும். நோயின்றி வாழலாம்” என்று சொல்லிவிட்டு அன்று மாலை முடித்து அனுப்ப வேண்டிய புத்தகத்தை நிறைவுசெய்யும் பணியில் மூழ்கினார் ஸ்ரீலக் ஷ்மி,

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in