ஜஸ்டின் பீபரைப்போல முகவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகை

ஜஸ்டின் பீபரைப்போல முகவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகை
Updated on
2 min read

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், தான் ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் (Ramsay Hunt Syndrome) என்கிற நரம்பியல் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகச் சில நாள்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தன் முகத்தில் ஒரு பக்கத் தசை செயலிழந்துவிட்டதுபோல் இருப்பதாகத் தெரிவித்த பீபர், தற்போது அந்தப் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் மாடலும் இந்தி சின்னத்திரை நடிகையுமான ஐஸ்வர்யா சக்குஜா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தானும் இதே வகையான பாதிப்புக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தி சின்னத்திரை தொடர்களின் மூலம் புகழ்பெற்றவர் ஐஸ்வர்யா சக்குஜா. 2014இல் ‘Main na Bhoolungi’ தொடரில் நடித்துக்கொண்டிருந்தபோது இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்தப் பாதிப்பு, காதுகளிலும் முகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். முகத்தின் ஒரு பகுதி செயலற்றுப்போய்விடும். சாப்பிடவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிரமமாக இருக்கும். நாம் வாயில் உணவைப் போட்டதும், உணர்வற்ற அல்லது செயலற்ற பக்கத்தின் வழியே உணவு வெளியேறிவிடும். ஐஸ்வர்யாவின் காதலரும் தற்போதைய கணவருமான ரோஹித் ஐஸ்வர்யாவிடம் ஏற்பட்ட அந்த மாறுதலைக் கவனித்திருக்கிறார். “ஏன் நீ என்னைப் பார்த்து கண்ணடிச்சிக்கிட்டே இருக்க?” என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டிருக்கிறார். அவர் அடிக்கடி இப்படி ஏதாவது விளையாட்டாகப் பேசுவார் என்று ஐஸ்வர்யா இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் பல் தேய்க்கும்போது அவருக்கே அது புரிந்தது. வாயைக் கொப்புளிக்க முயன்றபோது தன்னையும் அறியாமல் வாயிலிருந்து ஒரு பக்கமாகத் தண்ணீர் வெளியேறியபோதுதான் ஏதோ சரியில்லை என்று அவர் உணர்ந்தார்.

சக நடிகையும் தோழியுமான பூஜா ஷர்மாவிடம் இதைச் சொல்ல இருவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அங்கே நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில்தான் ஐஸ்வர்யா முகவாதம் போன்ற ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை எடுத்தபடியே சீரியலில் நடித்தார் ஐஸ்வர்யா. “போதுமான எபிசோடுகள் கையில் இல்லாத நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினார்கள். ஆனால், என் குழுவினர் என் நிலையைப் புரிந்துகொண்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் தெரியும்படி ஷூட்டிங்கை நடத்தினார்கள்” என்று சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா.

ஜஸ்டின் பீபர்
ஜஸ்டின் பீபர்

சின்னம்மையை ஏற்படுத்தும் வேரிசெல்லா வைரஸ் மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் காது, தலை, முகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்திப் பிறகு மற்ற நரம்புகளுக்கும் தண்டுவட நரம்புகளுக்கும் இந்த வைரஸ் பரவக்கூடும். அதனால், தொடர்ச்சியான காது வலி, முகத் தசைகளில் இறுக்கம், கண்ணிமைப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது. மற்ற நரம்புகளுக்கு வைரஸ் பரவியபிறகு குழப்பம், சோர்வு, தலைவலி, நரம்புத் தளர்ச்சி, மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும். இவற்றையும் கவனித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் இதைக் குணப்படுத்துவது எளிது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in