82 வயதில் உலக சாதனை! - ஸ்நேகா

82 வயதில் உலக சாதனை! - ஸ்நேகா
Updated on
1 min read

பிரான்ஸைச் சேர்ந்த 82 வயது பார்பரா ஹம்பர்ட், 24 மணி நேரத்தில் 125 கி.மீ. தொலைவு ஓடி, புதிய உலக சாதனையைப் படைத்துவிட்டார்!

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற பிரெஞ்சு சாம்பியன்ஷிப் போட்டியில், முதியவர்களுக்கான பிரிவில் கலந்துகொண்டார் பார்பரா. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண், 105 கி.மீ. தொலைவைக் கடந்ததுதான் சாதனையாக இருந்தது. அதனால், அந்தச் சாதனையை முறியடிப்பதற்கான இலக்காக 120 கி.மீ. தூரத்தை வைத்துக்கொண்டார் பார்பரா. ஆனால், தான் வைத்துக்கொண்ட இலக்கைவிட 5 கி.மீ. தொலைவு அதிகமாக ஓடி, புதிய உலக சாதனையைப் படைத்துவிட்டார்!

43 வயதில்தான் பார்பராவுக்கு ஓடுவதில் ஆர்வம் வந்தது. முதலில் நேரம் கிடைக்கும்போது அவர் வசிக்கும் தெருவில் ஓட ஆரம்பித்தார். பிறகு பல்வேறு நிலப்பகுதிகளில் ஓட ஆரம்பித்தார். போட்டிகளில் கலந்துகொண்டார். இந்த 40 ஆண்டுகளில் 137 ஓட்டப்பந்தயங்களிலும் 54 மாரத்தான் போட்டிகளிலும் ஓடியிருக்கிறார்!

“தெருக்களில் ஓடும்போது சுதந்திரமானவளாக உணர்கிறேன். நான் தியானம் எதுவும் செய்வதில்லை. சிறிது தூரம் ஓடினாலேயே என் மனம் புத்துணர்வைப் பெற்றுவிடும். 24 மணி நேரம் ஓடியும் நான் சோர்வாக உணரவில்லை. இரவில் தூங்கவில்லை. சாப்பிடவும் குடிக்கவும் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் இலக்கிலேயே கவனமாக இருந்தேன். வெற்றிக்கோட்டைத் தாண்டிய பிறகே சோர்வை உணர்ந்தேன். பசியை உணர்ந்தேன். தூக்கத்தை உணர்ந்தேன். அதனால்தான், உலக சாதனை படைத்த சில நாட்களுக்கு என்னால் அதை உணர முடியாமல் போய்விட்டது. என்னை உற்சாகப்படுத்தி ஓடவைக்கும் கணவருக்கு நன்றி. இடுப்பு வலி, கணுக்கால் சுளுக்கு போன்றவற்றை அனுபவித்தாலும் என்னால் ஓட்டத்தை மட்டும் நிறுத்த முடியாது. எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதில்லை. பயிற்சியை மட்டும் விடாமல் தொடர்கிறேன். நான் ஓடுவதை நிறுத்தினால் மனச்சோர்வடைந்துவிடுவேன்” என்கிறார் பார்பரா ஹம்பர்ட்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in