பெண்கள் நினைத்தால் சாதியை ஒழிக்கலாம்

பெண்கள் நினைத்தால் சாதியை ஒழிக்கலாம்
Updated on
2 min read

இந்தியாவில் பெண்கள்தாம் பல காலமாகத் தங்களுடைய மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை களுக்குச் சாதியைத் தீவிரமாகக் கடத்தி வருகிறார்கள். பின்னர் அது அடுத்த தலைமுறைப் பெண்களால் அடுத்தடுத்த தலைமுறைக் குழந்தை களுக்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில், இங்கே பாலினச் சமத்துவம் இல்லை. குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பணிப் பகிர்வு இல்லை. குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள்மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளை வளர்க்கிற பெண்கள், ஆணாதிக்க, சாதிய ஆண்களின் குரலாகவே தம் குழந்தைகளுக்கு மத நம்பிக்கையையும் சடங்குகளையும் கடத்துகிறார்கள்.

கடவுள் தொடர்பான எல்லாவற்றையும் ‘புனிதம்’ என்கிற கருத்தாக்கத்துடன் தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள். கடவுளுடன் தொடர்புடைய மதமும் அதற்கடுத்த நிலையில் உள்ள சாதியும் அது தொடர்பான சடங்குகளும் வழக்கங்களும் புனிதப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே மூளைச் சலவை செய்யப்பட்ட பாட்டிகளாலும் அம்மாக்களாலும் குழந்தைகளும் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.

யார் உருவாக்கிய நியதி?

நம் பாட்டிகளும் அம்மாக்களும் யாரால் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள் என்கிற கேள்வி வரும்போது அங்குதான் ஆண்களின் பங்கு வருகிறது. இங்கு பின்னிருந்து இயக்குவது ஆண். அந்த ஆண்களின் கருவிகளாகப் பெண்கள் இயங்கத் தொடங்கி, சாதி உயிர்ப்புடன் இருக்க ஆண்களுக்குப் பெண்கள் உதவி செய்கிறார்கள்.

ஆண், பெண் என எந்தப் பாலினமாக இருந்தாலும் சிறுவயது முதல் அவர்களின் மூளையில் புகுத்தப்பட்ட நம்பிக்கைகளின் வழியாகத்தான் செயல்படுகிறார்கள். அதை மாற்றிக் கொள்ள எள்ளளவும் அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால்தான் எவ்வளவு படித்திருந்தாலும் முற்போக்கு பேசினாலும் மத-சாதி விஷயத்தில் குடும்பத்தின் நியதிகளைப் பிசகாமல் பின்பற்றுகிறார்கள்.

தினமும் சாமி கும்பிட வேண்டும், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது போன்ற நம்பிக்கை பலரது அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாக ஆகிறது. கடவுள் நமக்கு எப்போதும் துணை இருப்பார் என்று போதிக்கப்பட்டாலும் நோய் வரும்போது யாரும் கோயிலுக்குச் செல்வதில்லை, மருத்துவமனைக்கே செல்கிறோம். பிரச்சினை என்று வரும்போது, கடவுள் நம் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று அமைதியாக உட்கார்ந்திருப்பதில்லை. கடவுளிடம், ‘பிரச்சினையைத் தீர்த்து வை சாமி’ என்று வேண்டிக்கொண்டு தீர்வை நாம்தான் யோசித்துச் செயல்படுத்துவோம். ஆனால், கடவுள் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. சாதியும் அதுபோன்ற ஒரு நம்பிக்கையாகத்தான் குடும்பங்களில் ஊட்டப்படுகிறது. யாருடன் பழகலாம், யாரை வீட்டுக்கு அழைத்து வரலாம், யாரை அழைக்கக் கூடாது என்பதைக் குடும்பங்களே தீர்மானிக்கின்றன.

தலைமுறைகள் தாண்டி…

பெரும்பான்மையான வீடுகளில் ஆண் குழந்தைகளை முதன்மைப்படுத்தியும் பெண் குழந்தைகளை அதற்கடுத்த இடத்திலும் வைத்தே வளர்க்கிறார்கள். ஒருபுறம், ‘ஆம்பளப் புள்ள அடுப்புகிட்ட போகக் கூடாது, துடைப்பத்தைத் தொடக் கூடாது’ என்கிற குரல் எப்போதும் பாட்டி, அம்மா, அத்தை போன்ற பெண்களுடையதாகவே இருக்கிறது. மற்றொருபுறம், அப்பாக்கள் என்னதான் தம் மகள்களை இளவரசிகளாக வளர்த்தாலும் திருமணம், வேலை போன்ற வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் அனைத்தும் வீட்டின் ஆண்களாலேயே எடுக்கப்படுகின்றன. ஆண்கள் தங்களின் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் வீட்டின் அடுத்த தலைவராகச் செயல்படவும் இந்தச் சூழல் உதவுகிறது. வாரிசு, சொத்துரிமை போன்ற விஷயங்களிலும் ஆண்களுக்கு முதலிடத்தை இவை ஏற்படுத்தித் தருகின்றன. எனவே, இச்சூழல் தொடர்வதையே ஆண்களும் விரும்புகிறார்கள். இது ஒரு தொடர் சங்கிலியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

பலவற்றிலும் முற்போக்காகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறவர்களும் சாதி என்று வரும்போது சக மனித உயிர்கள் கொல்லப்படுவதுகூடச் சரியானதே என்று வாதிடுவார்கள். ஏனெனில், சாதி சார்ந்த நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவோ, கேள்வி கேட்கவோ அவர்கள் தயாராக இல்லை.

ஆண்மையச் சூழல்தான் அத்தனைக்கும் அடிப்படை. பாட்டிகள், அம்மாக்கள், பெண் ஆசிரியர்கள் என அடுத்தத் தலைமுறையை வழிநடத்தும் இடத்தில் இருக்கும் பெண்கள் நினைத்தால் இந்தச் சங்கிலியை உடைக்கலாம். சாதியை ஒழிக்கலாம். ஆனால், அதை முழுமையாக நிறைவேற்ற ஆண்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in