

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தையொட்டி சமூக ஊடகங்கள் முழுவதும் வாழ்த்து மழை. அதற்குக் கண்ணேறு கழிப்பதுபோல் சிலர் நயன்தாராவின் ‘காதல்கள்’ குறித்து வன்மத்துடன் எழுதியிருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மில் பலருக்கும் மண்டையைக் குடையும் கேள்விகள்: காதல் என்றால் என்ன? காதல் ஒரு முறைதான் வருமா? அப்படி வந்து அது கைகூடாமல் போய் வேறு யாரையும் திருமணம் செய்து வாழ்வது குற்றமா? அதை அவர்களிடம் சொல்வதா வேண்டாமா? காதல் என்பது எதுவரை? இந்தக் காலத்திலும் இம்மாதிரியான கேள்விகள் பலருக்கும் இருக்கத்தான் செய்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதற்கு நமது கலாச்சாரம் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. உலகெங்கிலும் காதலித்தாலும், மணம் புரிந்து வாழ்ந்தாலும் ஒருவருடன் உறவில் இருக்கும்போது அவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் காதல் உறவு ஏற்படுத்திக்கொள்வது சகிக்க முடியாத குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. இது இன்னொருவருடன் உறவு, கற்பு என்பதைத் தாண்டி நம்பிக்கை துரோகம் என்பதால்தான் யாராலும் இதைச் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது.
ஆனால், காதல் என்பது வாழ்வில் ஒரே முறை ஒருவர் மீதுதான் வரும் என்பது மனித உணர்வுகளுக்கு அநீதியான நம்பிக்கை. மனித மனம் மாற்றமடையும்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மனிதர்கள் மீது காதல் தோன்றுவது இயற்கை எனும்போது அவ்வுணர்வைப் பரிமாறிக்கொள்வதில் மட்டும் என்ன குற்றமிருக்க முடியும்? ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உணர்வு ஒருவருக்கு அல்லது இருவருக்கும் மாறிப்போகும்போது இருவரும் பிரிய நேரிடுகிறது. இயல்பான இந்நிகழ்வுக்காக அவர்களுக்கு எதிர்காலத்தில் காதலும் மகிழ்ச்சியான வாழ்வும் சாத்தியமே இல்லாமல் போய் விடுமா என்ன? இல்லை.
‘தாவணி போனால் சல்வார்’ உள்ளதடா என்று ஆண்களுக்காக கமல்ஹாசன் பாடியதுபோல், ‘வேட்டி போனால் ஜீன்ஸ் உள்ளதடி’ என்று பெண்களுக்கென யாரும் பாடி வைக்கவில்லை. பெண்களை மட்டுமே குறிவைத்துப் போதிக்கப்படும் ஒழுக்கநெறிகளும் இதற்குக் காரணம். ‘ஒரே நாடு’, ‘ஒரே மொழி’யைப் போல் ‘ஒரே காதல்’ தான் சாத்தியம் என்பதும் சரியானது அல்ல. அதுவும்கூடப் பெண்கள் கல்யாணம் செய்துவிட்டுக் காதல் செய்வதுதான் உத்தமம் என்றெல்லாம் நம் தமிழ்ப் படங்கள் பேசிவருகின்றன.
இந்தியச் சமூகத்தில் பெற்றோர் பார்த்து வைக்கும் ஏற்பாட்டுத் திருமணம் என்பது சில நேரம் பெண்களின் உயிருக்கே உத்தரவாதமில்லாத மோசமான சூதாட்டமாகவும் அமைந்துவிடுகிறது. நல்ல கணவன் வேண்டும் என்றால் உலகின் பிற நாடுகளில் காதலிப்பார்கள், புரிந்துகொள்ளவும் திருமணம் செய்யவும் நிறைய யோசிப்பார்கள். நம் ஊரில் தனக்குக் கணவனாக வரப்போகும் முகம் தெரியாத யாரோ ஒருவர் நல்லவனாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதம்தான் இருக்க வேண்டியுள்ளது.
யாரையும் காதலிக்காமல் பெற்றோர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் வாழ்க்கையைப் பணயம் வைக்க வேண்டும் என்று யாருக்கும் விதி இல்லை. ஆனால், இங்கே காதல் என்றால் கெட்ட வார்த்தை. காதலிக்கும் பெண்கள் ஒழுக்கமானவர்கள் இல்லை. பெண்களைத் தலை நிமிர்ந்துகூடப் பார்க்காதவன், ஆனால் ரகசியமாய் ஆபாசப் படங்கள் பார்க்கும் ஆண்மகன் உத்தமன்.
இவ்வளவு சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் என் மனதுக்குப் பிடித்தவனைக் காதலிப்பது என் உரிமை என்று நம்பிக் காதலித்து, சரியில்லை என்று தெரியவருகிறபோது துணிச்சலோடு உதறி, நண்பனாய், காதலனாய், நம்பிக்கைக்கு உரியவனாய் இருப்பவனைத் தலைநிமிர்வுடன் கைப்பிடித்திருக்கும் நயன்தாராவைப் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடுவதில் வியப்பே இல்லை. இந்தப் பக்குவம் நம் வீட்டுப் பெண்களை அணுகும்போதும் இருக்க வேண்டும் என்பதே பெண்கள் சமூகத்தின் எதிர்பார்ப்பு.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com