

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தில் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்றவர் ஜோதி வெங்கடாசலம். இரண்டு முறை அமைச்சராகப் பதவிவகித்தவர், கேரளத்தின் முதல் பெண் ஆளுநர், 1930-களிலேயே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் என்பது போன்ற பெருமைகளையும் பெற்றவர்.
அன்பழகனை வீழ்த்தியவர்
அன்றைய பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பிறந்தவர் ஜோதி. சுவையூட்டும் பொருட்கள், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்துவந்த புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இருவரும் 1930-களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்கள். இவ்வளவுக்கும் சாதி அடுக்குமுறையில் கணவரின் சமூகத்தைவிட, ஜோதியின் சமூகம் உயர்ந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்குப் பிறகு ஜோதி சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டினார். காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார். 1962-ல் காங்கிரஸ் சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தோற்கடித்த வேட்பாளர் யார் தெரியுமா? தி.மு.க.வின் தற்போதைய பொதுச் செயலாளர் அன்பழகன்.
காமராஜர் தலைமையிலான ஆட்சியில் பொது சுகாதாரம், மதுவிலக்கு மற்றும் பெண்கள் நல அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக சட்டப்பேரவையில் ஒரு பெண் இரண்டாவது முறையாக அமைச்சர் ஆனது அதுவே முதல் முறை. ஏனென்றால், அதற்கு முன்னதாகவே மேலவை உறுப்பினராக இருந்த ஜோதி, ராஜாஜி ஆட்சியில் சிறிது காலம் அமைச்சராக இருந்திருக்கிறார்.
விடுதலைக்குப் பின் முதல் பெண்
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அரசுப் பதவிகளைத் துறந்துவிட்டு, கட்சியை வளர்த்தெடுக்கத் திரும்ப வேண்டுமென அழைப்புவிடுத்த காமராஜர், முன்னுதாரணமாக முதல்வர் பதவியை 1963-ல் துறந்தார். புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற பக்தவத்சலத்தின் அமைச்சரவையிலும் பொது சுகாதார அமைச்சராக ஜோதி தொடர்ந்தார்.
1962-ல் அமைச்சராவதற்கு முன்னதாகவே, நாடு விடுதலை பெற்ற பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ராஜாஜியின் அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக ஆறு மாதங்களுக்கு ஜோதி பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் விடுதலைக்குப் பின் தமிழகத்தில் பதவியேற்ற முதல் பெண் அமைச்சர் அவரே. மொழிவழி மாநிலங்கள் பிரிப்பின் கீழ் ஆந்திரா பிரிந்ததால், ஆந்திரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியபோது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
சுகாதாரச் சிறப்புத் திட்டங்கள்
பொதுச் சுகாதாரம், பெண்கள் நலத் துறையில் ஜோதி ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. ராஜாஜி ஆட்சிக் காலத்தில் குழந்தைகளுக்கான ‘முதல்வர் வைட்டமின் உணவுத் திட்டம்’ என்ற திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அந்தத் திட்டத்தின் கீழ் நான்கு வயதுக்குக் கீழ் இருந்த குழந்தைகளுக்கு வைட்டமின் உணவு வழங்கப்பட்டது. 1989 தி.மு.க. ஆட்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அமைச்சராக இருந்தபோது, ‘தமிழக அரசு வைட்டமின் உணவுத் திட்டம்’ என்ற சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டையை அறிமுகப்படுத்தினார். இது ஜோதி வெங்கடாசலம் அறிமுகப்படுத்திய திட்டத்தை அடியொற்றியதே.
அதேபோல, குழந்தைகளின் உடல்நலனையும் வாழ்நாளையும் மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் முத்தடுப்பு ஊசி போட உத்தரவிட்டவர் ஜோதி. தமிழகம் முழுவதும் தொழுநோய் கட்டுப்பாட்டு மையங்கள் உருவாகவும் காரணமாக இருந்தார். தொழுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த சென்னை, கடலூர், திருச்சியில் தொழுநோய் கட்டுப்பாட்டு மையங்களில் புதிய மருத்துவ நடைமுறையைப் பின்பற்றவும் வலியுறுத்தினார்.
தமிழகக் காவல் துறையில் பெண்களுக் கான தனிப்பிரிவு வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்தவரும் அவரே. தமிழகம் முழுவதும் 12,461 பெண்கள் சங்கங்களை நிறுவ முயற்சி எடுத்தார். இந்தச் சங்கங்கள் மூலம் ஏழை, படிப்பறிவற்ற பெண்களுக்குக் கைவினை கலை, லேஸ் பின்னுதல், பூத்தையல், நூல் நூற்றல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முதல் பெண் ஆளுநர்
அவரது பணி தமிழக மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதாகவும் பெண்கள், குழந்தைகளின் நலனைப் பேணுவதாகவும் அமைந்திருந்தது. 1971-ல் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திமுகவின் காமாட்சியம்மாளை ரங்கம் தொகுதியில் தோற்கடித்தார். 1977-ல் தொடங்கி 1982 வரை கேரள மாநில ஆளுநராக ஜோதி பதவி வகித்தார். இதன் மூலம் கேரளத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றார். 1974-ல் அவருக்கு பத்ம பட்டம் வழங்கப்பட்டது.
ஜோதி வெங்கடாசலம் குடும்பத்தின் பரம்பரை பங்களா சென்னை அட்கின்சன்ஸ் சாலையில் இருந்தது. அவரது இறப்புக்குப் பிறகு அட்கின்சன்ஸ் சாலைக்கு, ஜோதி வெங்கடாசலம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. சென்னை வேப்பேரியில் இப்போதும் பெயர் மாற்றப்படாமல் இந்தச் சாலை உள்ளது.