

இன்றும் பெண்களுக்கான மாதவிடாய் தொடர்பான பொருட்களை விளம்பரம் செய்யும்போது, சிவப்புக்குப் பதிலாக நீல வண்ணத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது. கடைகளில் நாப்கின்களை ஒரு தாளில் சுற்றி, வெளியே தெரியாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் குறித்த எண்ணத்தை மாற்றும் விதமாகவும் விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் ஸ்வீடனைச் சேர்ந்த ‘இன்டிமினா’ என்ற மாதவிடாய்ப் பொருட்கள் விற்பனை நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அவற்றில் ஒன்று, பாலில் சேர்த்துச் சாப்பிடக்கூடிய தானியக் கலவையை (Cereal) அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தானியக் கலவை கர்ப்பப்பை வடிவிலும் சிவப்பு நிறத்திலும் ராஸ்பெர்ரி சுவையிலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மாதவிடாய் குறித்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கு 48 சதவீதம் பேர் வெட்கப்படுகிறார்கள். குடும்பத்தினருக்கு முன் மாதவிடாய் பற்றி உரையாடுவதை 77 சதவீதம் பேர் தவிர்த்துவிடுகிறார்கள். 82 சதவீதம் பேருக்குக் கர்ப்பப்பை பெண்ணின் உடலில் எங்கே இருக்கிறது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, மாதவிடாய் குறித்த அறியாமையைப் போக்கும் விதத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் இந்தத் தானியக் கலவையைத் தயாரித்திருக்கிறார்கள். கர்ப்பப்பை வடிவத் தானியக் கலவையில் பாலை ஊற்றி, குடும்பத்தினர் காலை உணவைச் சாப்பிடும்போது, மாதவிடாய் குறித்த உரையாடல்கள் இயல்பாக நடக்கும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.
இதயம், நுரையீரல், மூளை அளவுக்கு கர்ப்பப்பையின் வடிவம் குறித்துப் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் வண்ணத்துக்காகவும் சுவைக்காகவும் சாப்பிடுபவர்கள்கூட, கர்ப்பப்பை வடிவம் என்று தெரிந்த பிறகு சாப்பிடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription