

இந்த ஆண்டு ஓடிடியில் வெளிவந்து கவனம் பெற்ற படம், ‘ஃப்ரீடம் ஃபைட்’. ஐந்து குறும்படங்களின் தொகுப்பு இது. இவற்றுள் ‘அசங்காதிதர்’ (அமைப் பில்லாதவர்) என்னும் படம் கவனத்தை ஈர்த்தது. ஆவணப் புனைவுரீதியில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை குஞ்சிலா மாசிலாமணி இயக்கியிருந்தார். இந்தப் படம் கோழிக்கோடு மிட்டாய்த்தெருவில் உள்ள துணிக்கடைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது.
கோழிக்கோட்டின் முக்கியமான கடை வீதியான மிட்டாய்த் தெருவில் ஏறத்தாழ 3,000 கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு உரிய ஊதியம், பணி நேர வரையறை இல்லை. இவையெல்லாம் பரவாயில்லை. இவர்களுக்குச் சிறுநீர் கழிக்க ஒரு இடமும் இல்லை. இதுதான் தலையாய பிரச்சினை. அதே மிட்டாய்த் தெருவில் தையல் கலைஞராகப் பணியாற்றும் விஜியிடம் இந்தப் பெண்கள் எல்லாம் இதைப் புலம்பலாகச் சொல்லி யிருக்கிறார்கள். அந்தத் தெருவில் உள்ள ஒரு உணவு விடுதியில் உள்ள கழிவறையைத்தான் அவர்கள் மாற்றாகப் பயன்படுத்தி வந்திருக்கி றார்கள். அதற்காக காபியும் பலகாரமும் சாப்பிட வேண்டிய நிர்பந்தத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
போராட்டத்தால் விளைந்த நன்மை
இதைப் பற்றி சம்பந்தப்பட்ட முதலாளிகளிடம் பேசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முறையான பதிலைத் தர வில்லை. மாறாக, ‘ஒரு குடுவை தண்ணீர்தானே குடிக்கிறீர்கள். அவ்வளவு சிறுநீர் எங்கிருந்து வருகிறது உங்களுக்கு?’ என முதலாளிகள் கேலி பேசி யிருக்கிறார்கள். பெண்கள் பலரும் துணி மாற்றும் அறைக்குள் பாட்டிலில் சிறுநீரைப் பிடித்துச் சமாளித்தி ருக்கிறார்கள். சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் பலருக்கும் நோய் வந்திருக்கிறது. பொறுத்துப் பார்த்துவிட்டு இறுதியில் விஜி தலைமையில் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுடன் தொடக்கம் முதலே குஞ்சிலா இருந்துள்ளார்.
விஜி இதற்காக ‘பெண் கூட்டு’ என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார். கோழிக்கோட்டு நகர சாலைகளில் இறங்கிப் போராடியுள்ளனர். முதலில் இதைப் பெரிய பிரச்சினையாகப் பார்க்காத பலரும் இந்தப் போராட்டத்துக்குப் பிறகு பெண்களின் அவஸ்தையைப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
கழிவறை வேண்டும் என்று கோழிக்கோட்டில் 2010இல் தொடங்கிய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-டாய்லட் கட்டப்பட்டது. ஆனால், அதை உபயோகிப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லி அதை ‘பெண் கூட்டு’ அங்கத்தினர் மறுத்திருக்கிறார்கள். வணிகக் கட்டிடத்துக்கான அனுமதியில் கழிவறைக்காக இடம் ஒதுக்க வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. அதைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆனால், ஏதோ நிர்பந்தத்தின் பேரில் இ-டாய்லட் நிறுவப்பட்டது. அவர்கள் சொன்னதுபோல் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. பிறகு அவர்கள் பணிபுரியும் வளாகத்திலேயே கழிப்பிடத்துக்கான வழி அமைத்துக் கொடுக்கப்பட்டது.
பெண்களின் உலகம்
இந்த வெற்றிக்காக அவர்கள் கடந்து வந்த பாதையைச் சுவாரசியமாகவும் இயல்பான தாகவும் கோத்துத் தந்துள்ளார் இயக்குநர் குஞ்சிலா. பெண்களின் பிரத்யேகமான உலகம், அவர்களின் உரையாடல்கள், உழைக்கும் பெண்களின் நிலை, அவர்களின் பிரச்சினைகளுக்கு வீட்டார் அளிக்கும் மதிப்பு, தொழிலாளர் சங்கங்கள் இதை எப்படி எதிர்கொண்டன எனப் பல அம்சங்களை அவர் இதில் காட்சிப்படுத்தியுள்ளார். இதில் ந்தா போன்ற சிலர் மட்டும்தான் தொழில்முறை நடிகர்களாகத் தெரிகிறார்கள். விஜி பாத்திரத்தில் விஜியே நடித்துள்ளார். உள்ளதைத் திறந்து பேசும் இயல்புடைய இவர், சினிமாவில் பேசும்போது அது சுவாரசியமானதாக இருக்கிறது.
படம் மிட்டாய்க் கடைப் பெண்களின் அன்றாடப்பாட்டை முழுமையாகச் சித்தரித் துள்ளது. தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டு இதைக் கடந்ததையும் சொல்லியுள்ளது. ஆனால், அவர்களின் போராட்டத்தை மூர்க்க மாகச் சொல்லவில்லை.
விஜி இந்தப் போராட்டத்துடன் நின்றுவிட வில்லை. அடுத்ததாக ‘இரிப்பு சமரம்’ (உட்காரு வதற்கான போராட்டம்) தொடங்கினார். ‘அசங்காதித மேகலத் தொழிலாளி யூனியன்’ (அமைப்புசாரா துறை தொழிலாளர் சங்கம்) என்னும் பெயரில் ஒரு சங்கத்தை நிறுவினார். இதன் மூலம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தார். நாற்காலிகளுடன் தெருவில் இறங்கி கோஷம் எழுப்பினார். அதற்கு எட்டு வருடம் கழித்துத் தீர்வு கிடைத்தது. 2018இல் வேலை இடத்தில் பெண்களுக்கு உட்காருவதற்கான உரிமைக்காகத் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ஒருவராக விஜி தேர்தெடுக்கப்பட்டார். இவ்வளவு வெளிச்சத்துக்குப் பிறகும் விஜி மிட்டாய்க் கடைத் தெருவில் அதே தையல் கடையில் சாதாரண தொழிலாளியாக இயந்திரத்தைக் காலால் மிதித்துக்கொண்டிருக்கிறார். தங்கள் ஓய்வு நேரத்தில் புதிய பிரச்சினைகளுடன் மிட்டாய்க் கடைப் பெண்கள் எதிர்காலத்திலும் வரக்கூடும்.