

மும்பையின் சமீபத்திய அடையாளமாகி விட்ட கடல் பாலத்துக்கு அருகிலிருக்கும் குடிசைப் பகுதியின் சிறிய வீட்டில் வசித்துவருகிறார் லால்ஸாரி. காதல் கணவருடன் காஷ்மீரிலிருந்து வெளியேறி மும்பையில் வீட்டுவேலை உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் லுட்ஃபிக்குக் குடியிருப்புக் காவலராகப் பணி. தினசரி காலையில் பழைய ஸ்கூட்டரில் லாலியை வேலைக்கு விட்டுவிட்டு, தன் பணியிடத்துக்கு லுட்ஃபி போவது வழக்கம். லாலியுடனான வாழ்க்கை சலித்துவிட்டதாகக் கூறி, திடீரென்று ஒரு நாள் காலை அவரைக் கைவிட்டுவிட்டு லுட்ஃபி சென்றுவிடுகிறார்.
லாலி இப்போது வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால், பழைய சைக்கிள் ஒன்று மட்டுமே வழி. ஏற்ற இறக்கங்களில் லாலியால் அந்த சைக்கிளைக் கட்டுப்படுத்தி ஓட்ட முடிவதில்லை. அதிலும் ஒரு பெரிய பாலத்தில் லாலியால் ஏறவே முடிவதில்லை. கைவிட்டுச் சென்ற கணவன், சைக்கிள் பயணத்தைக் கடினமாக்கும் பாலம், உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத மும்பை என அனைத்தும் லாலியைத் தனியாளாக்கி மிரட்சி அடைய வைக்கின்றன. இன்றைக்கு நாட்டில் பல பெண்கள் தள்ளப்பட்டுள்ள அதே நிராதரவான நிலைக்குச் செல்கிறார் லாலி. இந்தப் பின்னணியில் அவருடைய ஒற்றை அறை வீட்டின் உத்திரத்திலும் ஓட்டை விழுந்துவிடுகிறது. அதைச் சீரமைக்கக் காசில்லாமல் தார்பாய் போட்டு மூடுகிறார். இருள் கவ்வியதுபோல் ஆகிறது அவருடைய வாழ்க்கை.
ஆனால், லாலி உடைந்துபோய் உட்கார்ந்துவிடவில்லை. தன் சைக்கிளை உந்தி உந்தி பாலத்தை ஒரு நாள் கடந்துவிடுகிறார். பெரிதாகச் சாதித்துவிட்ட உற்சாகம் அவர் மனத்தில் மேலெழுகிறது. பகலில் வீட்டு வேலை செய்ததுபோக, இரவில் சாலையோரம் கஷ்மீரித் தேநீரை விற்கிறார். வீட்டு உத்திரத்தின் ஓட்டையை அடைப்பதற்குப் பணம் கிடைக்கிறது. சுதந்திர உணர்வைத் தனக்குப் புரிய வைத்த சைக்கிளையும் தன் சுயத்தை மதித்துத் தனியாக வாழ்வதன் முக்கியத்துவத்தையும் லாலி உணர்கிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்வதற்குக் கணவர் அவசியமில்லை என்பதும் அவருக்குப் புரிகிறது.
வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக முன்பு நினைத்த லாலி, தான் வேலைசெய்யும் வீட்டின் உரிமையாளரிடம் படத்தின் இறுதியில் இப்படிக் கூறுகிறார்: “இரவில் மலர்ந்து மணம் வீசும் மல்லிகையின் மணம் பாம்பை வரவழைக்கும் என்கிற கற்பிதம் காரணமாக, அருகில் பகலில் மலரும் தாவரம் ஒன்றையும் நடுவார்கள். எனக்கு அப்படி எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. என் மலருக்கு மணம் இருக்கிறது, நான் மணம் வீசுவதை மற்றவர்களுக்காக எதற்குக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்?”.
‘மாடர்ன் லவ் மும்பை’ திரைப்படத் தொகுப்பின் முதல் படமாக இடம்பெற்றுள்ள ‘ராத் ராணி’யின் உத்வேகமூட்டும் கதை இது. ‘மாடர்ன் லவ் மும்பை’ தொகுப்புக்குத் தனி அழகைச் சேர்த்துள்ளது இந்தப் படம். கஷ்மீரி இளம்பெண் லாலி கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, திரைப்படத்தில் மட்டுமல்லாமல் நம்மிடமும் சேர்த்தே உற்சாகத்தை விதைக்கிறார் ‘டங்கல்’ புகழ் ஃபாத்திமா சனா ஷேக். மாறுபட்ட திரைப்படங்களுக்காக அடையாளம் பெற்ற ஷோனாலி போஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
மன உறுதியுடன் இருந்தால் எல்லாப் பெண்களும் தங்களுக்கு எதிர்நிற்கும் தடைகளைத் தகர்த்துவிடுவது சாத்தியமே என்பதை, பாலத்தை சைக்கிளில் கடப்பது எனும் உருவகம் மூலம் நிரூபிக்கிறார் லாலி. ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு புள்ளியில் தன்னைத் தானே கண்டெடுக்க வேண்டியுள்ளது. இந்தப் படம் உணர்வுபூர்வமாக அதை வெளிப்படுத்தியுள்ளது.