

‘சட்டங்கள் எல்லாம் பெண் களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன.’
‘பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.’
‘வர வர ஆண்களுக்குத்தான் பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது.’
‘பெண்கள் எதற்கெடுத்தாலும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆண்கள்தாம் தவித்துப்போகிறார்கள்.’
இவை போன்ற புலம்பல்களைப் பரவலாகக் கேட்டிருக்கிறோம். ஆனால், இவற்றில் எவ்வளவு நியாயம் இருக்கிறதென்று இப்போது பார்க்கலாம்.
“தங்கச்சி கல்யாணத்துக்காக இத்தனை லட்சம் கடன் வாங்கி இருக்கோம். அந்தக் கடனை அடைக்கத்தான் கஷ்டப்பட்டு ஓவர்டைம் பாக்குறேன்” என்று ஓர் ஆண் சொல்லி நாம் இயல்பாகக் கேட்டுக் கடக்கும் இந்த ஒற்றை வாக்கியத்தில் எவ்வளவு சட்ட மீறல்கள் உண்டு தெரியுமா?
1. தங்கைக்குக் கல்யாணம் என்பது ஏன் ஓர் ஆணின் வாழ்நாள் லட்சியமாக இருக்க வேண்டும்? அண்ணன் தன் வாழ்வு, சொந்த விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் துறந்து இச்சுமையைத் தோள்களில் தாங்க வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது?
2. வரதட்சிணை என்று ஒன்று இருப்பதால்தானே பெண் வீட்டாருக்கு லட்சக்கணக்கில் கடன் சுமை ஏறுகிறது?
3. அப்படிக் கடன்பட்டுச் செய்யும் திருமண வாழ்வில் ஒரு பெண் சட்டத்துக்கு உட்பட்ட எல்லா உரிமைகளோடும்தான் வாழ்கிறாளா?
எல்லாம் சட்டப்படி நடக்கிறதா?
பெண்களுக்குக் கல்வி, சொத்துரிமை, திருமண வயது என்று எல்லா உரிமைகளையும் சட்டம் வழங்கி இருந்தாலும் எதார்த்தத்தில் அவளது கல்வியைவிடவும், அவள் சொந்தக்காலில் நின்று பொருள் ஈட்டுவதைவிடவும், படிப்புக்கேற்ற வேலையைச் செய்து சுதந்திரமாய் வாழ்வதைவிடவும் சுய சாதியில், குடும்பம் சொல்லும் ஆணுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. குடும்பமும் சாதியும் இங்குக் காலங்காலமாகப் பெண்களை ஒடுக்கப் பயன்படுத்தும் விதிகளை அழித்தொழிக்காமல் சட்டங்கள்கூட ஓரளவுக்குத்தான் பெண்களுக்குத் துணை நிற்க முடியும்.
“பெண் பிள்ளையைப் பெத்துருக்கீங்க. அவ கல்யாணத்துக்குச் சேர்த்து வைக்கணும்” என்று உறவுகளும் நட்புகளும் மட்டுமல்ல, வங்கிகளும் நிதி நிறுவனங்கள் கூடக் கொஞ்சமும் கூசாமல் விளம்பரம் செய்கின்றன. சட்டப்படி இது குற்றமில்லையா?
கேரளத்தின் விஸ்மயாவும், சேலம் திவ்யாவும் படித்தவர்கள். சட்டப்படி வரதட்சிணை குற்றம் என்று அறிந்தவர்கள். இருந்தாலும் அப்பா, அம்மா, குடும்பம், சாதி இவற்றின் கை எழுதிய விதிகளுக்கு அநியாயமாகப் பலியானவர்கள். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் அமலில் இருந்தும் தினந்தோறும் கணவனிடம் அடியும் கணவன் வீட்டாரின் வசவுகளையும் வாங்கி உடலாலும் மனத்தாலும் பாதிக்கப்படும் பெண்கள் எந்தச் சட்டத்தைக் கையிலெடுத் திருக்கிறார்கள்? அவர்கள் பலவீனமாக இருப்பதுதானே நம் சமூகத்துக்கு உவப்பாக இருக்கிறது? கை நீட்டி அடிக்கும் கணவனை நோக்கிக் கைநீட்டும் பெண்ணை சமூகம் ஏற்பதில்லை.
திருத்தப்படும் சட்டங்கள்
இந்திய அரசமைப்புச் சட்டம், குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது. அதில் எதையாவது ‘புருசன் வீட்டுக்கு வாழப் போகும் பெண்’ எதிர்பார்க்க முடியுமா? கணவன் சொல்லும் உடையைத்தான் அணிய வேண்டும். அவனது பெற்றோர் குறித்த நேரத்துக்குள் வீடு திரும்ப வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டால் அதை ஏற்று நடக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் (அதிலும் ஆண் குழந்தை விசேஷம்). கருக்கலைப்பு செய்யச் சொன்னால்கூடப் பணிய வேண்டும். இவையெல்லாம் எந்தச் சட்டத்தின் அடிப்படையில்?
“என் உடல், உடை, உணர்வு தொடர்பான விஷயங்களில் தலையிட நீ யார்? உன்னிடம் என் பெற்றோர் இதே போன்ற விதிகளை விதிக்க முடியுமா?” என்று சுயமரியாதையுடன் கணவனை நோக்கிக் கேட்கும் பெண்கள் நம்மிடையே குறைவு. மேலும், ‘திருமணமான இந்துப் பெண், கணவன் குடும்பத்தின் அங்கமாகி விடுகிறாள். கணவனுடன் தனித்து வாழ எண்ணும் பெண்ணை இந்து ஆண் விவாகரத்து செய்யலாம்’ என்று அப்பட்டமான பக்கச்சார்புடன் உலகில் எந்தப் பெண்ணுமே ஏற்க முடியாத தீர்ப்பு களை எழுதத் தொடங்கிவிட்டன நமது நீதிமன்றங்கள். ஏற்கெனவே குடும்பம், மதம், சாதிச் சம்பிரதாயங்கள் என்று ஆயிரம் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பெண்கள் வாழ வேண்டியிருக்கிறது. இதுபோன்ற தீர்ப்புகள் பெண்களுக்கு எதிராகத் தவறான முன்னுதாரணங்களாகப் பயன்படுத்தப்பட சாத்தியம் அதிகம்.
அறியாமை என்னும் இருள்
அப்படியொரு கட்டத்தில் திருமண வாழ்வா, சுயமரியாதையா என்று பெண்களின் முன் எழும் கேள்விதான் பல பெண்கள் கணவனைப் பிரிந்து குழந்தையோடு பெற்றோர் வீட்டுக்குத் திரும்புவதற்கு முக்கியக் காரணம். இருவரும் சமமாக இணையும் உறவில் யாரும் வஞ்சிக்கப்பட வேண்டிய கட்டாயம் வராது. பெண்களுக்குப் பாதுகாப்பு என்று நம்பப்படும் குடும்பத்துக்குள்ளேயே பல சட்ட மீறல்களும் மனித உரிமை மீறல்களும் நடக்கும்போது பொதுவெளியில் நடப்பவற்றைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்திகளைத் தினந்தோறும் கேள்விப்பட்டாலும், 99 சதவீத நிகழ்வுகள் புகார் செய்யப்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவுக்கின்றன. சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வும் அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். அறியாமை என்பது என்றுமே இருமுனை கொண்ட கத்திதான்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com