வானவில் பெண்கள் | என்னால் முடிந்தது; எந்தப் பெண்ணாலும் முடியும்: கடற்படை அதிகாரி மீரா

வானவில் பெண்கள் | என்னால் முடிந்தது; எந்தப் பெண்ணாலும் முடியும்: கடற்படை அதிகாரி மீரா
Updated on
2 min read

நிலமும் நீரும் தட்பவெட்பமும் சாதக மாக இருந்தாலும் மண்ணைக் கீறி வெளிவரும் திறனுள்ள விதைகளே முளைவிடுகின்றன. அதைப் போலத்தான் மீராவின் வெற்றியும் நிகழ்ந்திருக்கிறது.

நீலகிரியின் படுகர் சமூகத்தில் பலரும் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்தாலும் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருக்கின்றனர். குறிப்பாகப் பெண்களின் வெற்றி அத்திப்பூவைப் போல அரிதாகவே நிகழ்கிறது. தன் வெற்றியின் மூலம் அந்த நிலையை மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளியை வரைந்திருக்கும் மீரா, படுகர் சமூகத்திலிருந்து கடற்படை அதிகாரியாகத் தேர்வாகியிருக்கும் முதல் பெண்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரநாத் – மாலதி தம்பதியின் மகள் மீரா (23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமன்றி டெல்லி, புனே, ஜம்மு காஷ்மீர் என்று நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளிலும் பணியாற்றி யுள்ளார். தந்தையின் பணி மாறுதல் காரணமாக மீராவும் அந்த ஊர்களுக்குச் சென்றார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படித்ததாலும் வட மாநிலங்களில் வசித்ததாலும் மீரா இந்தியைக் கற்றுக் கொண்டார். ராணுவக் குடியிருப்பில் வசித்ததால் அதன் ஒழுங்கும் கட்டுப்பாடும் மீராவை ஈர்த்தன. வளர்ந்த பிறகு முப்படைகளில் ஏதாவதொரு பிரிவில் பணியாற்ற விரும்பினார். கோவையில் பொறியியல் படிப்பை நிறைவுசெய்த மீரா, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தேர்வை எழுதினார். அதில் கடற்படைக்கான பிரிவில் தேர்ச்சி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, மீராவுக்குக் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள எஜிமாலா கடற்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு மாதப் பயிற்சியை நிறைவுசெய்தவர், சப் லெப்டினன்ட் அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

நாட்டுக்கு உழைப்போம்

பாதுகாப்புத் துறையில் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற கருத்துப் பரவலாக உள்ள நிலையில், நீலகிரியைச் சேர்ந்த படுகர் சமூகப் பெண், கடற்படை அதிகாரியாகத் தேர்வு பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. தன் சிறுவயது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்த மீராவைச் சந்தித்தோம்.

“என் அப்பா ராணுவத்தில் பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணி யாற்ற வேண்டும் என்கிற கனவு சிறுவயது முதலே இருந்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தியை முதன்மை மொழியாகக் கொண்டு படித்ததால் மொழிச் சிக்கலும் இல்லை. கண்ணூரில் உள்ள தேசியக் கடற்படைப் பயிற்சி மையத்தில் ஆறு மாதப் பயிற்சியை முடித்துள்ளேன். கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன்” என்றார்.

ராணுவப் பணிகளுக்கு உடல் தகுதி முதன்மையானது. ஆண்கள் மட்டுமே அவற்றுக்குத் தகுதியானவர்கள் என்கிற பிம்பத்தைத் தன் வெற்றியின் மூலம் தகர்த்து, பெண்களும் பாது காப்புப் படைகளில் பணியாற்றத் தகுதி யானவர்களே என நிரூபித்துள்ளார் மீரா.

“ராணுவத் துறையில் பெண்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றில் சேர்வதற்குத் தன்னம்பிக்கையும் தளராத உறுதியும்தான் தேவை. நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்திருப்பது பெருமிதமாக இருக்கிறது” என்று சொன்னவர், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குச் சில யோசனைகள் சொன்னார்.

“என்னால் சாதிக்க முடிந்தது எந்தப் பெண்ணாலும் முடியும். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய பாதுகாப்புப் படையில் இணைந்து நாட்டுக்குச் சேவைசெய்ய விருப்பம் உள்ள பெண்கள் அதைச் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு முன்னுதாரணம்” என்கிறார் சப் லெப்டினன்ட் மீரா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in