

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூன் 8ஆம் தேதி, வியட்நாமின் டிராங் பேங் கிராமத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அலறியபடியே ஓடிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் எதுவும் செய்ய இயலாத சூழலில் சில ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கும் பின்னால் அணுகுண்டு வெடித்த கரிய புகை.
இந்தக் காட்சியை வியட்நாமிய அமெரிக்கரான 'நிக் வுட்' படம் பிடித்தார். ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' படம் உலகத்தையே உலுக்கிவிட்டது. போரின் கோரத்தை எடுத்துச் சொல்ல இந்தப் படம் ஒன்றே போதுமானதாக இருந்தது.
அசோசியேட்டட் பிரஸ் ஒளிப்படக் கலைஞர் நிக் வுட் படம் எடுத்த கையோடு, அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். அடிக்கடி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். சரியான நேரத்தில் கொடுத்த சிகிச்சையும் நிக் வுட்டின் அன்பும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றின. படம் வெளிவந்து உலகத்தை உறைய வைத்தது. பான் தி கிம் ஃபூக், ‘நேபாம் சிறுமி’ (நேபாம்-பெட்ரோல் குண்டு) என்று அழைக்கப்பட்டார்.
1973ஆம் ஆண்டு நிக் வுட் இந்தப் படத்துக்காக புலிட்சர் விருதை வென்றார். ஆனால், இந்தப் படத்தைப் பயன்படுத்துவதற்கு முதலில் பல நிறுவனங்கள் மறுத்துவிட்டன. விருதுக்குப் பிறகே உலகம் முழுவதும் இந்தப் படம் பிரபலமானது.
ரஷ்யா, சீனா ஆதரித்த வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போரில், பல லட்சம் மக்களும் பல லட்சம் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். 1975ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
“பத்திரிகையாளர்களுடன் நின்றுகொண்டிருந்தேன். குண்டு சத்தம் கேட்டது. குழந்தைகள் ஓடிவந்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினேன். ஒரு வாகனத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். கிம் ஃபூக் மயங்கிவிட்டார். மருத்துவமனையில் இடம் இல்லை என்றார்கள். போராட்டத்துக்குப் பிறகே சிகிச்சை வழங்கப்பட்டது” என்று நினைவுகூர்கிறார் நிக் வுட்.
“விமானங்கள் பறந்தன. குண்டுகள் விழுந்தன. தப்பி ஓடும்படி யாரோ கத்தினார்கள். என் உடை தீப்பற்றிக்கொண்டது. அதைக் கிழித்தெறிந்துவிட்டு ஓடினேன். உடல் எல்லாம் தீக்காயம். தாங்க முடியாத வேதனை. பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. இன்னும்கூட என் உடல் இயல்பாக இல்லை. எவ்வளவோ சிகிச்சைகள் செய்துவிட்டேன்” என்கிறார் கிம் ஃபூக்.
‘நேபாம் சிறுமி’க்கு இது ஐம்பதாவது ஆண்டு. ஆனால், இந்த உலகம் தான் இன்னும் போரிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription