

குழந்தைகளுக்குப் பள்ளியில் ‘ஓப்பன் டே' என்றால் அடிவயிற்றில் லேசாக ஒரு கிலி பரவும். பிள்ளைகள் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறித்த பயமா, ஆசிரியர்கள் என்ன புகார் கூறுவார்களோ என்கிற கிலியா, அதையும் இதையும் சொல்லிக் கட்டணம் பிடுங்குவார்களோ என்கிற பீதியா? இல்லவே இல்லை.
இவை எல்லாவற்றையும்விடப் பள்ளியில் 'ஓப்பன் டே' என்றால் ‘பீஸ்ட் மோடில்’ இயங்கக்கூடிய ‘சூப்பர் மாம்’கள் குறித்த பயமே அதிகம். இந்த ‘சூப்பர் மாம்’களில் நான்கு பேர் கூடி நின்றுப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் போதும். "ஜி செக்ஷன்ல அருண் இதே ஆன்ஸரைத்தான் எழுதி இருக்கான். அவனுக்கு ஃபுல் மார்க்ஸ் கொடுத்திருக்காங்க, இவங்க க்ளாஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க.”
“ஒலிம்பியாட் கோச்சிங் எங்கே அனுப்பறீங்க? அபாகஸ் எக்ஸாம் எப்போ? “
“என்னது தேர்ட் ஸ்டாண்டர்ட் வந்தாச்சு, இன்னும் நீட் கோச்சிங் ஸ்டார்ட் பண்ணலையா?"
இவற்றையெல்லாம் கேட்கும்போது லேசா நெஞ்சு வலி வருகிற மாதிரி இருக்கும். அப்போதே தப்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் “பெற்றோர் வாட்ஸ் அப் குரூப்ல நீங்க இல்லியா? என்னங்க நீங்க? நம்பர் குடுங்க!” என்று மொத்தமாய்ச் சங்கு ஊதிவிட வழி பார்ப்பார்கள். குழந்தைகள் படிப்பில் அக்கறை கூடாது என்பதல்ல. ஆனால், இப்படிப் பிள்ளைகள் படிப்பை முழுக்க முழுக்கத் தங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா? எப்படி அவர்களால் முடிகிறது என்று சிந்திப்பது உண்டு. எதேச்சையாகப் பெற்றோர் கையெழுத்திடும் அட்டவணையில் பார்வையை ஓடவிட்டதில் பொறி தட்டியது. தாய்மார்களின் பெயர்களுக்கு அருகில் பெரும்பாலும் பொறியியல், முதுகலை உட்பட உயர்கல்விப் பட்டங்கள் அணிவகுத்து நின்றன. ஆனால், வேலை குறித்த இடத்திலோ பெரும்பாலும் ஹோம் மேக்கர்கள்தான் (Home maker).
‘வீட்டில் இருக்கும் பெண்களைச் சும்மாதான் இருக்காங்க என்று ஏன் சொல்ல வேண்டும்? அவர்கள் எவ்வளவு உழைக்கிறார்கள் தெரியுமா? அவர்களை ஹோம் மேக்கர்கள் என்று அழைக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியம் தர வேண்டும். அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும்’ என்கிற ரீதியிலான ஆக்ரோஷமான பேச்சுகள் மேம்போக்காகச் சரியென்று பட்டாலும் அவை சாதித்தது ஒன்றுமில்லை. பெண்களை வீட்டிலேயே முடக்குவதற்கு உண்டான ஒரு தந்திரம்தான் இந்த ஹோம் மேக்கர். 'இல்லத்தரசி' என்று மகுடமே சூட்டிவிட்ட பிறகு அவர்களுக்கு ஊதியமாவது போராட்டமாவது? இந்த அடிப்படைத் தவறைக் களையாமல், வீட்டிலிருக்கும் ஹோம் மேக்கர் மனம் புண்படுத்துவதுபோல் பேச வேண்டாம் என்று அறிவுரைவழங்குவதுதான் கொடுமை.
மேலும், சாதியும் பெண்ணடிமைத்தனமும் ஊறிக் கிடக்கும் நடுத்தரக் குடும்ப அமைப்புகளில்தாம் பெரும்பாலும் பெண்கள் திருமணத்துக்குப் பிறகு வீட்டோடு இருப்பது பெருமை என்று முடக்கப்படுகிறார்கள். உடல் உழைப்பை நம்பி இருக்கும் சமூகங்களில் ஆண், பெண் வேறுபாடில்லாமல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். பொருளாதாரத் தற்சார்பும் பிடித்த அலுவலில் கிடைக்கும் தன்னிறைவும் வாய்க்காததால் அந்த வெற்றிடத்தைக் குழந்தைகள் வாங்கும் மதிப்பெண்களைப் போட்டு நிரப்ப எண்ணுகிறார்கள் இந்த ‘சூப்பர் மாம்கள்’. இந்நிலை தொடர்வது குழந்தைகளுக்கும் ஆரோக்கியமல்ல.
- பேசுவோம்
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com
| ஜெ.தீபலட்சுமி ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். ஜெயகாந்தனின் 11 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். பெண்ணியம், சாதி மறுப்பு செயல்பாடுகள் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். ‘வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ நூலின் ஆசிரியர். |
| data-title="ஜெ.தீபலட்சுமி"> |