

கேரளத்தைச் சேர்ந்த தோழிகள் இருவர், கடந்த வாரம் மாநிலம் தாண்டிய பேசுபொருளாக இருந்தனர். ஆலுவா பினானிபுரத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரினும் கோழிக்கோடு தாமரைச்சேரி பாத்திமா நூராவுமே அந்தத் தோழிகள். இவர்கள் இருவரும் தன்பாலின உறவாளர்கள்.
வீட்டின் எதிர்ப்பை மீறி தனியாக வசித்த இவர்களைப் பலவந்தமாக இவர்களுடைய பெற்றோர் பிரித்துவிட்டனர். இதை எதிர்த்து ஆதிலா ஒரு சட்டப் போராட்டத்தையே நடத்தியிருக்கிறார்.
இவர்களுடைய குடும்பங்கள் சவுதி அரேபியாவில் வசித்துவந்தன. அங்குதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அங்கு 11, 12 வகுப்புகள் ஒன்றாகப் படித்துள்ளனர். 11-ல் தோழியராக இருந்து, 12-ல் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்களது வாட்ஸ் அப்வழி இது இரு வீட்டின் அம்மாக்களுக்கும் தெரியவந்தது. இந்த உறவு சரியில்லை, நீங்கள் இனிப் பார்த்துக் கொள்ளக் கூடாது, பேசக் கூடாது எனக் கண்டித்தனர். கோழிக்கோட்டில் ஒன்றாகக் கல்லூரி பயிலும் அவர்களுடைய திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போட்டப்பட்டது. ஆனாலும், கேரளம் திரும்பிய பிறகு இருவரும் ரகசியமாகத் தொடர்பில் இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் அம்மாக்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம் இப்போது அப்பாக்களுக்கும் தெரிய வந்தது. பிறகு அடியும் உதையும் பாத்திமாவுக்குக் கிடைத்தன. ஆதிலாவுக்கு வசவும் அறிவுரையும் கிட்டின.
இருவரும் கோழிக்கோட்டில் உள்ள வனஜா கலெக்டிவ் என்னும் பால்புதுமையினர் நலனுக்கான அமைப்பில் அடைக்கலம் புகுந்தனர். அந்த அமைப்பு தங்கள் சமூக ஊடகம்வழி இந்தப் பிரச்சினையை அம்பலப்படுத்தியது. அங்கு வந்த பாத்திமாவின் குடும்பத்தினர் தகராறு செய்தனர். ஆதிலாவின் குடும்பத்தினர் இடை புகுந்து இருவரையும் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கிருந்து பாத்திமாவை அவருடைய குடும்பத்தினர் இழுத்துச் சென்றுவிட்டனர். இதற்கு ஆதிலாவின் வீட்டாரும் உடந்தை.
பிறகு தாமரைச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பினானிபுரக் காவல் நிலையத்தில் ஆஜாரான தோழிகளுக்குப் புத்திமதி கூறப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் நீதி கிடைக்காததால் ஆதிலா, ஆட்கொணர்வு மனுவுடன் கேரள உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அங்கு அவருக்கு நீதி கிடைத்தது. வயதுக்கு வந்தவர்கள் இணைந்து வாழ பாலினம் ஒரு தடையல்ல எனக் கூறியுள்ளது நீதிமன்றம். பால்புதுமையினர் வழக்கில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. அதனால், இது இந்திய அளவிலும் கவனிக்கப்பட்டது. இப்போது ஆதிலாவுக்கு சென்னையில் வேலை கிடைத்திருக்கிறது. இந்தப் பால்புதுமையினர், ஒரு புது வாழ்க்கைக்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.